ந.சிதம்பர சுப்ரமணியன்/சக்ரவாகம்

“வருந்தாதே. கவலைப்பட்டு என்ன பயன்? மனத்தைச் சாந்தப்படுத்திக்கொள்” என்று சமாதானம் செய்ய முயன்றார்கள். ஆனால், அவன் காதில் ஒன்றும் ஏறவே இல்லை. அவர்கள் சொல்வது அவனுக்கு அர்த்தமற்ற பிதற்றலாகத் தோன்றிற்று.
அவன், “சாந்தியாம்! சமாதானமாம்! சுகத்தையும் துக்கத்தையும் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? அனுபவத்தால் அசைக்கப்படாத அசேதன வஸ்துக்கள்! மனிதன் என்ன மரக்கட்டையா? அப்படியாகும் நாள் வேறு. கவலையை எப்படிப் போக்குவது? துக்கம் என்பது ஒரு துணியா, களைந்து எறிவதற்கு?” என்று பலவிதமாக யோசித்துக்கொண்டிருந்தான்.
சிவசர்மன் ஒரு சங்கீதக் கலைஞன், கவிஞன். அவனுடைய ஒவ்வொரு நாடியும் தாளம் வாசித்துக்கொண்டிருந்தது. அவன் இருதயத்திலிருந்து இசை பெருகிக்கொண்டிருந்தது. பற்பல உணர்ச்சிகளுக்கு உருக்கொடுத்து அவற்றை ராகங்களாக்கிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது எழுபத்திரண்டு மேளகர்த்தாக்கள் பிரிபடவில்லை. சாரங்கதேவரின் கிரந்தங்களே எழுதப்படவில்லை. லட்சியமே அப்பொழுதுதான் உண்டாகிக்கொண்டு வந்தபொழுது, லட்சணங்களைப் பற்றிச் சொல்வானேன்? அங்கங்கே ராகங்கள் முளைத்து மலர்ந்தன. அக்காலத்தில் இயற்கையின் இன்னிசையை வடித்துக் கீதங்களில் ஊற்றி ஜனசமூகத்திற்கு விருந்தளித்துக்கொண்டிருந்தான் அவன்.
ஒரு வருடம் ஒரு நிமிடமாகக் கழிந்தது. அந்த வருடத்தில் அவன் செய்த சிருஷ்டிகள் அநேகம். அபூர்வ…ராகங்களில் (இப்பொழுது அவை சகஜமாகவும் சாதாரணமாகவும் பாடப்படுகின்றன) அழகான கற்பனையோடு அற்புதமான கீதங்களைப் பாடியிருந்தான். அந்த வருடம்தான் கல்யாணமாகி மனைவி வீட்டிற்கு வந்திருந்தாள். தன் உள்ளத்தில் ஊறும் உவகைக்கும் காதலுக்கும் அன்புக்கும் உருவான அந்த அம்பிகையை, சுரங்களை வைத்துக் கட்டிய புஷ்பச் செண்டுகளால் அலங்கரித்தான்.
ஆனால் இன்றோ?
அவன் அசையாமல் கரையோரம் உட்கார்ந்திருந்தான். சங்கீதத்தால் கட்டுண்டு மயங்கிக் கிடக்கும் நாகம்போல் கிடந்தது அந்தக் காட்டாறு. ஓடிவரும் ஜலத்தின் நுரையிடம் காதல் பேசிக்கொண்டிருந்தது நாணல். கவிஞனது மனம்போல வானத்தை எட்டிப் பிடிக்க வளர்ந்திருந்தன அநேக விருட்சங்கள். தூங்கும் குழந்தை தாயைப் பார்த்து இமை கொட்டாமல் ஆனந்திப்பதுபோல, வனதேவதை கண் கொட்டாமல் விழித்திருந்தாள்.
இந்தப் பிரகிருதி சௌந்தர்யமானது, வானக் கண்ணாடியில் பிரதிபலித்துத் திக்கெங்கும் பரவிக்கொண்டிருந்தது.
இந்தத் திவ்ய சோபை அவன் இருதயத்தில் பிரதிபலிக்கவில்லை. அவன் உள்ளம் உறைந்து போயிருந்தது. திரும்பினான்.
அசுரன் கைக்கு அகப்படாமல் வளைந்து கொடுக்கும் அப்சரஸைப் போல, ஒரு கொடி மரக்கிளை ஒன்றில் படாமல் விளையாடிக்கொண்டிருந்தது.
“கொடியே, விளையாடாதே! உனக்கு அடுத்த நிமிஷத்தில் என்ன ஆபத்து நேருமோ தெரியுமா?”
புஷ்பங்கள் கண் சிமிட்டி அவனை வரவேற்றன.
“மலர்களே! நீங்கள் யார்? நிமிஷத்தில் தோன்றி மறையும் மனிதனின் கனவுகள் என்ன ஆகின்றனவோ, அவ்வாறு உதிர்ந்து, உலர்ந்து, வாடி வதங்கி மடியப் போகிறவர்கள்.
ஆற்றை நோக்கினான். இரண்டு கரையோரமும் ஜலம். நடுவில் ஒரு திட்டு.
“உன் புன்சிரிப்பைக் காண்பிக்காதே. என் இருதயத்தைத் திறந்து தாங்க முடியவில்லை” என்றான்.
அப்படியே ஒரு வருடம் ஓடிவிட்டது. அவன் சிரித்து ஆறு மாத காலம் ஆகிறது. ஆனந்தத்தை வீசி எறிந்த காலதேவன், கயிற்றைச் சுருக்கிவிட்டான்போலும். எதிர்பாராதபடிதான் அது நடந்தது!
சிவசர்மனையும் அவன் மனைவியையும் அழைத்துப் போக மைத்துனன் வந்திருந்தான். அவள் பிறந்த ஊர், ஆற்றின் எதிர்கரையில் இருந்தது. அவனுக்கு அலுவல்கள் இருந்தபடியால், “வர முடியாது” என்று சிவசர்மன் சொல்லிவிட்டான்.
அவள் மாத்திரம் போகப் பிரியப்படவில்லை.
“நீங்களும் வாருங்கள். நான் தனியே போக மாட்டேன்” என்றாள் அவள்.
“வெகுதூர தேசங்களுக்குப் போவது போலல்லவா பேசுகிறாய்? இதோ இருக்கிறது. இங்கிருந்து கூப்பிட்டால் காது கேட்கும். அதற்கா இவ்வளவு பயம்?”
“நானும் போகவில்லை.”
“சரிதான், போய்விட்டு வா! இல்லாததற்கெல்லாம் பிரமாதப்படுத்தாதே. ஒரு வாரத்திற்குள் வந்துவிடலாம். உடனே கொண்டுவந்து விட்டுவிடும்படிச் சொல்லி அனுப்புகிறேன்” என்று கூறிக்கொண்டே, அவள் நெற்றியில் மறைக்கும் ஒரு சுருள்முடிக் கற்றையை விலக்கினான். ஆனால், அவள் மனத்தை மறைத்த இருளின் கற்றையை அவன் விலக்கவில்லை!
அரை மனத்துடன்தான் அவள் போனாள். அவள் போனதிலிருந்து அவனுக்கு இருப்புக்கொள்ளவேயில்லை. ஒவ்வொரு விநாடியையும் கணக்குப் பண்ணிக்கொண்டிருந்தான். அவள் வரவேண்டிய தினம் வந்தது. அவளை எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தான்.
ஆனால், அவள் வரவில்லை. அதற்குப் பதிலாக, மனித சமூகத்தை வாட்டும் பீடைகளைப் போலக் காட்டாற்றில் வெள்ளம் பிரவகித்து வந்தது.
அவன் மனம் தவித்தது. ஒன்றும் புரியாமல் தத்தளித்தான். கடைசியில், களைத்துப்போய்த் திணறிக்கொண்டிருந்தான்…
களைத்துப்போய்த் திணறிக்கொண்டிருந்தபோது, மைத்துனன் வந்தான்; அவளை ஆறு விழுங்கிவிட்டது!
மனைவி வரவில்லை?
அலறினான்; அடித்துக்கொண்டான்.
“அவள் போய்விட்டாளா? இல்லை; சரீரத்தையா அடித்துக்கொண்டு போய்விட்டது? என்னுடைய இன்பத்தை, நாங்களிருவரும் கட்ட ஆரம்பித்த கோட்டையை… அவள் உயிர் போகவில்லை; என் உயிர்தான் போய்விட்டது. இனி நான் வறண்ட மேகம்; சொல்லிச் சொல்லிக் குரலை இழந்த ஊமை!” என்று புலம்பினான்.
அநேகம் பேர் ஆறுதல் சொன்னார்கள். ஆனால், அறுந்த உள்ளத்தை இழுத்துத் தைக்க முடியுமா?
ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ஆற்றில் வெள்ளம் வடிந்து வற்றிப்போய்விட்டது. துயரக் கண்ணீர் லேசில் வற்றிவிடுமா?
மார்பைப் பிளந்து காட்டிக்கொண்டிருக்கும் அந்நதியை வெறுப்புடன் பார்த்தான்.
“சீ! வெட்கமில்லை. நீ ஒரு பேய்!” என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்தான். அவன் எழுந்த வேகத்தில் மணல் ஜலத்தில் விழுந்து சலசலத்தது. பாம்பு சீறுவது போலிருந்தது அச்சப்தம்.
அவன் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்தான்.
அந்திப் பொழுதின் ஊறும் உதிரத்தை, கதிரவன் தன் கைகளால் ஓர் ஆலமரத்தின் தலையில் தடவிக்கொண்டிருந்தான். செந்நிறக் கதிர்கள் சென்னியில் விழ, ஆலம் விழுதுகள் செஞ்சடையாகத் தோன்றின. செஞ்சடைகள் கீழே விழுந்து புரள, கொடிப் பாம்புகள் அதன் உடலில் தாவி ஆடும் அந்த விருட்சமானது, பார்வதிக்குப் பயானக ரசத்தைக் காட்ட சிவனைப்போல் ஆடித் தாண்டவம் புரிவதாக இருந்தது.
அவன் தன்னை மறந்து ஆச்சரியத்தோடு அதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
கூர்ந்து கவனித்தான். கிளையொன்றிலே இரண்டு சக்ரவாகப் பட்சிகள் கொஞ்சிக் குலவி விளையாடிக்கொண்டிருந்தன. அவை செய்துகொள்ளும் சங்கேதங்கள் அவனை…இன்புறுத்தின. பரிவு கலந்த பாவனைப் பேச்சு அவன் மனவேதனையைச் சிறிது மாற்றிற்று. தன்னை இழந்து, அச்சிறு ஜீவன்களின் இன்ப உலகத்தை எட்டிப் பார்த்தான்.
அத்தனை அசைவுகளுக்கும் ஆட்டங்களுக்கும் நடுவே கவிதை செய்துகொண்டிருக்கும் அவ்வுயிர்ப் பொறிகளைக் கண்டவுடன் அவன் மனக்கசப்பு மறைந்துபோயிற்று; உணர்ச்சி ஊறிவந்தது. காவியமயமான எண்ணங்கள் மனத்திலே கிளம்பின.
” சிறகுள்ள இன்பங்களே! மனிதன் எப்பொழுது பறவையாவான்?
ஆனந்த மூர்த்தியான பறவையே! உன் இன்பத்தை இன்னிசையால் இறைத்துவிடு. உன் இறக்கையின் இசைக்கு என் கீதமெல்லாம் சமமாகுமா? காதலை முற்றும் அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை நான்.
காதல் தெய்வத்தின் பறவை உருவே! என் காதலை ஏற்றுக்கொள். கால இருளில் ஒளிரும் குன்றா விளக்கே! காலத்தை மீறி இருக்கிறாய் நீ. சாசுவதமான சக்ரவாகமே!” என்று மேலே சொல்ல ஆரம்பித்தான்.
ஆனால், வார்த்தை வாயிலிருந்து வெளிவரவில்லை. திடுக்கிட்டு ஸ்தம்பித்து நின்றான். சப்த நாடியும் ஒரு நிமிஷம் ஒன்றுபட்டு வேலை நிறுத்தம் செய்தன. அவன் மிகுந்த பரபரப்பை அடைந்திருந்தான்.
“ஐயோ! இல்லை, இல்லை. யமனே! யமனே! விட்டுவிடு. விழுந்துவிட்டதா? பறவையைக் கொல்லாதே! என்னை எடுத்துக்கொள்!” என்று கதறினான்.
ஆனால், அந்தச் சிறு பசுமைப் பறவைகளுக்குப் பின்னால் இரவில் வந்த காட்டுப் பூனை, சக்ரவாகத்தின் காதலனைக் கவ்விக்கொண்டு போய்விட்டது. கவிஞன் சொன்ன வார்த்தைகளைக் கவனிக்கவே இல்லை.
ஆனால், அந்தப் பேடை கதறிற்று. இன்பமயமான சங்கீதத்தைப் பொழிய வேண்டிய தன் குரலில், துன்ப ஸ்வரங்களைத் தன் கண்ணீருடன் சிந்திற்று. சுற்றிச் சுற்றி வந்தது. கிளைக்குக் கிளை தாவிற்று.
பூனையின் பசி தணிந்தது. ஆல விருட்சத்தின் பயானகத் தாண்டவம் ஓய்ந்தது. பிரிவாற்றாமையின் பாட்டு பிளந்துகொண்டு வந்தது. காதல் பறவையின் கூக்குரலைக் கேட்டு வானமே கண்மாரி சொரிந்தது. அந்த நீர் புல் நுனியில் இலங்கிநின்றது.
சிவசர்மன் தவித்துக்கொண்டிருந்தான். அந்தச் சிறு பறவைப் பெண்ணின் ஆறாத் துயரம் அவனை உணர்வற்றவனாகச் செய்தது. அது வெளியிட்ட ஒவ்வோர் ஒலியும் அவனிடம் எதிரொலியை உண்டாக்கியது.
பிரிவுத் துயரத்திற்குப் பறவையானால் என்ன, பண்டிதனானால் என்ன? அவனால் வெளியிடப்படாமல் அடக்கி வைக்கப்பட்டிருந்த சோக அலைகள், சக்ரவாகப் பறவையினால் அணை கீறிவிடப்பட்டு அவன் உள்ளத்தைப் பீறிக்கொண்டு வந்தன.
நித்ய சங்கீதத்தைக் கொடுக்கும் சக்ரவாகப் புள் புண்பட்டு வாடுவதைக் கண்டு அவன் விட்ட பெருமூச்சு, மூங்கில் மரத்தைத் துளைத்துக்கொண்டு புறப்படும் காற்றின் சப்தத்தோடு சம்மேளித்து நின்றது. செடிகள் விசும்பிக்கொண்டும் மரங்கள் தலைகுனிந்துகொண்டும் இருந்தன.
பறவை, பிரிந்துபோன காதலனைக் கூவி அழைத்தது; அருமையாக அழைத்தது; அன்புடன் அழைத்தது; இரங்கி அழைத்தது.

“கோலக் குரலோசை கேட்கக் குதித்துவந்த
காலன் கருவிழியால் பட்டுக் கரிந்தீரோ!
நரகத்தே வாடுகின்ற நல்ல மனிதருக்குக்
குரலினிமை காட்டிக் குளிரவைக்கப் போனீரோ!
முத்தை உதிர்த்துவகை மூழ்குவிக்கும் வாய்திறந்து
தித்திக்கும் வார்த்தையொன்று தனித்திருந்து செப்பீரோ!”

என்றெல்லாம் பாடி அழைத்துப் பார்த்தது. காதலன் பதில் சொல்லவில்லை. பல ராகங்களையும் பாடிக் கழித்தது. சக்தி முழுவதையும் தன் சோகக் குரலில் கொட்டிற்று.
உயிரையே அப்பாட்டில் அர்ப்பணம் செய்தது. ஒரு தரம் மேலெழும்பிற்று. மறு விநாடியில் கீழே விழுந்து பிராணனை விட்டது.
அவன் அந்தப் பட்சியைக் கையிலெடுத்துக்கொண்டான். கண்களிலிருந்து ஜலம் ஆறாகப் பெருகி அவன் பாதத்தில் விழுந்தது.
“பறவையே! உன்மாதிரி என் பிராணன் போகவில்லையே, ஏன்?” என்று அதைக் கேட்டான்.
“பிரிவுத் துயரத்தை அறிந்த சகோதரி! நீ சாகவில்லை. உனக்குச் சாவு ஏது? நீ சிரஞ்சீவி. பிரிந்தவர்களின் துயரத்திற்கு உருவமாக அமைந்து, பிரிந்து வந்தவள் நீ. உலகமே பிரிந்து தவிக்கிறது. ஞாபகப்படுத்திக்கொண்டிரு; அழிவற்றவளே!” என்று சொல்லித் தன் காதலிக்குச் செய்திருக்க வேண்டிய சம்ஸ்காரங்கள் எல்லாம் செய்தான்.
அந்தப் பிரிவுப் பறவையின் குரல் மாத்திரம் அவன் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதை அவனால் மறக்க முடியவில்லை. உள்ளூற அது வேதனை செய்துகொண்டே இருந்தது. கடைசியாகக் கேட்ட கானத்தைக் காதுகள் கீழே இறக்கவேயில்லை.
அந்தச் சுந்தரி ஜீவனைப் பிழிந்து உருக்கொடுத்தான். தான் பாடின ஸ்வரங்களுக்கு ஓர் அனுபவத்தையும், அப்பொற் பறவை அனுபவித்த வேதனையையும் கொட்டினான். ஓர் அரிய ஆனந்த ராகம் உண்டாயிற்று.
அதுதான் அவன் கடைசியாகப் பிறப்பித்த ராகம். அந்த ராகத்தின் பெயர் சக்ரவாகம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன