
நேற்றிலிருந்து மீரா கோபமாக இருந்தாள். நரேனுடன் பேசவில்லை.
“நான் என்ன சொல்லிவிட்டேன்? நீ ஏன் கோபப்படுகிறாய்?” என்று பாடியபடி, நரேன் அவ்வப்போது அவளை நெருங்குவதும், அவள் விலகிச் செல்வதுமாகப் பொழுது கழிந்து கொண்டிருந்தது.
கோபம் என்னவோ இருவருக்கும் பிரமாதமாக வரும். ஆனால், அதே வேகத்தில் ஒருவர் மற்றொருவரை எப்படியோ சமாதானப்படுத்திவிடுவார்கள். இப்போது மீராவுக்குக் கோபம்!
மழை பெய்துகொண்டிருந்தது. நரேன் புன்னகைத்தான். சமாதானம் செய்யும் நேரம் வந்துவிட்டது!
பால்கனியில் உட்கார்ந்து வெளியில் பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகே பொன்னிற பஜ்ஜிகளையும் சூடான தேநீரையும் வைத்துவிட்டு அருகில் உட்கார்ந்தான். திரும்பிப் பார்த்த மீராவுக்கு, உள்ளே மாட்டியிருந்த படத்தைச் சுட்டிக்காட்டினான்.
நரேனும் மீராவும் ஒரு குடையில் நடந்து வரும் புகைப்படம். அது ஒரு அடையாளம்.
தன் காதலை மீராவிடம் அப்படித்தான் சொன்னான் அவன். ஒரு சிறு காகிதத்தில் ஒரு கவிதை எழுதி அவளிடம் கொடுத்தான். அவன் கையில் ஒரு குடை இருந்தது. காகிதத்தைப் பிரித்துப் படித்தாள் மீரா.
ஒற்றைக் குடையுடன்
காத்திருக்கிறேன்
உனக்காகவும்
மழைக்காகவும்.
என்று எழுதியிருந்தது.
அன்று விழுந்தவள்தான். இதோ, மறுபடியும் கோபம் மறந்து புன்னகைக்கத் தொடங்கினாள்.

சூப்பர் கதை, ஸ்ரீராம். இந்த மழை எத்தனை காதல்களையும் காதலர்களையும் வளர்க்கிறது இல்லையா!!!!!
கீதா