
அன்று மாலை பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. கடைக்குப் போய்த் திரும்பிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்.
குடையைப் பிடித்தபடி நடந்து வந்த கணேசனிடம் மனைவி வனஜா முணுமுணுத்தாள்.
“என்னங்க, குடையை என் பக்கம் மட்டும் சாய்க்கிறீங்க? நீங்க முழுக்க நனையறீங்களே!”
“என் காதல் மனைவி உன்னை நனைய விடுவேனா, வனஜா?” என்றார் கணேசன், புன்னகையுடனும் கண்கள் நிறையக் காதலுடனும்!
“ஐயே… சகிக்கலை. முகத்தில வழியுற அசடைத் தொடைச்சுக்கோங்க. நம்ம பேரக்குழந்தைகளுக்கே கல்யாண வயசு ஆச்சு! இத்தனை வருஷமாகியும் இன்னும் நீங்க மாறவே இல்லை!” என்றாள் முகத்தில் வெட்கத்துடன்.
“அதெல்லாம் எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் மாறாது!”
கணேசனின் சட்டை முழுவதும் நனைந்திருந்தது. வீடு திரும்பியதும் வனஜா அவருக்குத் துண்டை எடுத்துக் கொடுத்து, “இந்தாங்க. ஈரத்தைத் துடைச்சிக்கங்க” என்றாள்.
பாட்டியையே பார்த்துக்கொண்டிருந்த வனஜாவின் பேத்தி அபி ஆச்சரியமாகக் கேட்டாள்.
“பாட்டி, யாருகிட்ட பேசிட்டிருக்கீங்க?”
அவளைப் பார்த்துச் சிரித்தபடி,
“ஏன், இதோ, உன் தாத்தாகிட்டதான்!” என்றாள் வனஜா.
“உனக்கே கல்யாண வயசு ஆச்சு. ஆனால், என் மேல் அவருக்கு இருக்கும் காதல் மட்டும் இன்னும் அப்படியேதான் இருக்கு!”
அபி திகைத்தாள்.
தாத்தா இறந்து பத்து வருடங்களாயிற்று!
