மடிப்பாக்கம் பிரபாவதி/குடையின் கொடை

கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், விவாதங்கள் இருக்கத்தான் செய்யும். மரகதம், சீனிவாசன் தம்பதிக்கு எப்போதுமே எதிர்மறையான நிகழ்வுகள்தான். ஒத்துப்போவதென்பது ம்ஹூம்!
“நான் எதற்காக விட்டுக்கொடுக்க வேண்டும்? நான் ஒரு தப்பும் செய்யலையே?” என்பதுதான் இருவருடைய எண்ணமாகவும் இருந்தது.
ஈகோ மிகுதியால் வாழ்க்கையே ஈ ஓட்டியது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒர்க் ஃப்ரம் ஹோம் மீட்டிங் முடிந்து, சற்று கீழே இறங்கி வாசலுக்கு வந்தவன் மணியைப் பார்த்தான். ஐந்தரை என்றது கடிகார முட்கள்.
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
உள்ளே சென்று குடையை எடுத்துக்கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பினான்.
தெருமுனையில் நின்றான். மெல்லத் தூற ஆரம்பித்தது. அது வலுப்பெற்று மழையாக மாறியது. மரகதத்தின் வேன் வரத் தாமதமானது. ஒருவழியாக வேன் வந்து நின்றது. அதிலிருந்து கீழே இறங்கியவள் கணவனை ஒருமாதிரியாகப் பார்த்தாள். வேண்டாவெறுப்பாகக் குடைக்குள் வந்தாள்.
அவன் நனையக்கூடாது என்பதற்காக அவளும், அவள் நனையக்கூடாது என்பதற்காக அவனும் குடையின் இருபுறங்களிலும் ஒதுங்கி நடந்தார்கள். இருவருடைய தோள்களும் மழையில் நனைந்தன.
வீட்டுக்கு வந்ததும் அவள் வலது பக்கமும், இவன் இடது பக்கமும் தொப்பலாக நனைந்திருந்தனர். வீட்டில் இருந்த ஒரே குடையைப் பகிர்ந்துகொண்டு வந்தபோது ஏற்பட்ட உரசல் சுகமாக இருந்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் அனுவும் ஆதியும் பிறந்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன