
பிரிவு 1
கணவன் மனைவி
நடுவில்
குழந்தை
எழுகின்றனர் பெற்றோர்
நீதிபதிக்கு வணங்கி
ரத்தாகிறது
உறவு
க்ரேயானால்
காகிதத்தில்
கைகோர்த்த
அப்பா அம்மாவை
சித்திரம் தீட்டியபடி
அமர்ந்திருக்கிறது
குழந்தை
பிரிவு 2
வெவ்வேறு அறைகளில்
கணவனும் மனைவியும்
பணி நேரத்தில் தத்தம் கணினிகளில்
பசிக்கையில்
தமக்கு பிடித்தமான
உணவுகளை
சமைத்துக் கொண்டு
அல்லது
வரவழைத்துக் கொண்டு
மற்றபடி
தத்தம் திறன்பேசிகளில்
தத்தம் நண்பர்கள்களுடன்
பேசியபடி
தமக்கு
பிடித்த பாடல்களை
கேட்டுக் கொண்டு
தமக்கு
பிடித்த படங்களை இணைத்திரையில்
பார்த்துக் கொண்டு
அவ்வொப்பொழுது
அவர்கள் கொஞ்சும்
ஆயா மடியில்
இருக்கும்
குழந்தைக்கு தெரியும்
அவர்கள்
பிரிந்து விட்டனர்
என்று
