
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையில் பதினேழாம் பாசுரம் இது.
”அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்[து] ஓங்கி உலகளந்த
உம்பர்கோ மானே உறங்கா[து] எழுந்திராய்
செம்பொன் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
இப்பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, கண்ணபிரான், பலதேவன் ஆகியோர் எழுப்பப்படுகிறார்கள். முதல் இரண்டு அடிகளில் நந்தகோபன் எழுப்பப்படுகிறார். மூன்று மற்றும் நான்காம் அடிகளில் யசோதைப் பிராட்டியை எழுப்பிய பின்னர் ஐந்து மற்றும் ஆறாம் அடிகளில் கண்ணபிரான் எழுப்பப்படுகிறார். இறுதி இரண்டு அடிகளில் பலதேவர் எழுப்பப்படுகிறார்.
முதல் அடியில் உள்ள ‘அம்பரம்’ என்பதற்கு ஆடை என்பது பொருளாகும். ஆடை, தண்ணீர், சோறு முதலான எல்லாவற்றையும் வேண்டுவோர்க்களித்து அறம் செய்யும் நந்தகோபரே எழுந்திருங்கள் என்று வேண்டுகிறார்கள். அதாவது நந்த கோபன் வஸ்திர தானம் தீர்த்த தானம், மற்றும் அன்னதானம் செய்ததை இந்த அடி காட்டுகிறது. மூன்றாம் அடியில் உள்ள ‘அம்பரம்’ என்பதற்கு ஆகாயம் என்பது பொருள். வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்ட பின்னர் திரிவிக்ரமனாக ஆகாயத்தைக் கிழித்து ஓங்கி வளர்ந்த தேவர்க்குத் தலைவனே எழுந்திருங்கள் என்று கண்ணபிரான் எழுப்பப்படுகிறார்.
முதல் அடியில் ஆடை என்று பொருளைத் தந்த ’அம்பரம்’ என்னும் அதே சொல் மூன்றாம் அடியில் ஆகாயம் என்னும் பொருளைத் தருகிறது. இப்படி ஒரே சொல், முதல் அடியில் ஒரு பொருளையும் ஐந்தாம் அடியில் வேறு பொருளையும் தருவது இன்புறத்தக்கதாகும்.
