ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 37/ அழகியசிங்கர்

10.12.2021 – வெள்ளி

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

மோகினி:  இதுவரை என்னன்ன புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளீர்கள்? 

அழகியசிங்கர் : நான் இதுவரை 400 கவிதைகள் எழுதி உள்ளேன்.    .  என் கண்ணால் 400 கவிதைகளையும் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்.  610 பக்கங்களுக்குப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.  அடுத்தது நகுலனின் சுருதி கவிதைகள் புத்தகத்தையும் கொண்டு வந்துள்ளேன். 100 பக்கங்களுக்குக் குறைவில்லாமல் அஞ்சலட்டை கதைகள் கொண்டு வந்துள்ளேன். இன்னும் ஏகப்பட்ட புத்தகங்களைக் கொண்டு வர உள்ளேன்.

ஜெகன் :  இந்த முறை புத்தகக் காட்சியில் கலந்து கொண்டால் ஒமைக்ரான் நோய்த் தொற்று பற்றிக் கொள்ளுமா?

மோகினி :   உண்மையில் வேகமாகப் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது. 

அழகியசிங்கர் : அந்தத் தொற்று பற்றிய பயம் இருக்கத்தான் இருக்கிறது.  அதனால் புத்தகக் கண்காட்சியே இருக்குமா என்று தெரியாது. 

மோகினி :  இப்போதெல்லாம் எளிதான விஷயம்தான் புத்தகம் கொண்டு வருவது

அழகியசிங்கர் : ஆமாம்.  எளிதான விஷயம். ஆனால் இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற தலைப்பின் கீழ் ஞானக்கூத்தன் பற்றி நான் எழுதிய புத்தகத்தை முன்னிலைப் படுத்த விரும்புகிறேன். இந்தப் புத்தகத்தைச் சாகித்திய அக்காதெமி தயாரித்துள்ளது.

ஜெகன் :  இந்த முறை சாகித்திய அக்காதெமி பரிசு உங்கள் நண்பர் மூத்த கவிஞருக்குக் கிடைத்து விடும்போல் தோன்றுகிறது. 

அழகியசிங்கர்: அப்படித்தான் நினைக்கிறேன்.  கடைசி வரை நம்ப முடியாது.

ஜெகன் :இன்று நடந்த ஞானக்கூத்தன் விமர்சனக் கூட்டம் எப்படிப் போயிற்று.

அழகியசிங்கர் : எல்லோரும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பேசினார்கள். அது இரண்டு மணி நேரம் வரை வந்து விட்டது.  ஒவ்வொருவரும் பேசும்போது எப்ப நிறுத்தப் போகிறார் என்ற தவிப்பை ஏற்படுத்தி விட்டார்கள்.  முத்தாய்ப்பாகக் கடைசியில் பேசியவர் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார்.  புத்தகத்தில் என் கண்ணிற்குத் தெரியாத தப்பு அவருக்கு மட்டும் எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. 

மோகினி :  தப்பில்லாமல்தான் புத்தகம் வர வேண்டும் இல்லையா?

ஜெகன் :  உண்மைதான்

மோகினி :  புத்தகத்தில் உங்களுக்குத் தப்பு தெரியவில்லையா?

அழகியசிங்கர் : தெரியவில்லை.  இந்தப் புத்தகத்தை ரிவ்யு செய்ய இன்னொருவரிடம் கொடுக்கப் பட்டது.  அவரும் சொல்லவில்லை. 

மோகினி :   உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது.

அழகியசிங்கர் :  எதைச் செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டுமென்று நினைத்துக்கொள்வேன்.

மோகினி :  இன்றைய  இரவுப் பொழுது சிறப்பாக முடியட்டும்.

அழகியசிங்கர் : சிறப்பாக முடியட்டும்.

     ஜெகன்: இன்று பேசியது போதும்.

அழகியசிங்கர்.  இரவு வணக்கம்.
                                                                                              எழுதியது இரவு 9.50

2 Comments on “ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 37/ அழகியசிங்கர்”

  1. ப்ரூஃப் பார்க்கிறவர்கள் பெரும்பாலும் ஒற்றுப் பிழை பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் படிக்கும் காலத்தில் மிகவும் விரும்பி பங்கு கொள்ளும் தமிழ் வகுப்புகளில் கூட சில மாணவர்கள் ஒற்றுப் பிழை சந்திகளில் தவறு செய்து அடி வாங்குவதை பார்த்து இருக்கிறேன். சமீப காலமாக எனக்கே நிறைய சந்தேகம் வந்து விட்டது. மொபைலில் அடிப்பது கூட பரவாயில்லை. கூகுள்/அழகி தளங்களில் அடிக்கும் போது இன்னும் மோசம். அவைகள் இலக்கணம் அறியாதவை. அழகியில் அடிக்கும் காலத்தில் ஆங்கிலம் கூட மறந்து விடும் அபாயம் உண்டு. டைப்ரைட்டிங் பழகிய காலத்தில் தமிழ் பழகாதது பெரும் பிசகு.

    இப்போது முக்கியமான இடங்களில் சந்தேகம் வந்து விடுகிறது. யாரையாவது கேட்பதற்கு கூச்சமாக இருக்கிறது. இங்கேயே கூட கேட்பதற்கு கூச்சமாக என்று தான் வருகிறது. நடுவில் க் வரவில்லை. வரவேண்டுமா கூடாதா என்று யாரிடம் கேட்பது. எங்கள் தமிழ் வாத்யார் முகம் இரு புருவங்களுக்கு மத்தியில் தென்படுகிறது. வெறும் புன்னகை தான். பேசாமல் மௌனமாக, முன்னாபாய் காந்தி போல் வந்து போகிறார்.
    தமிழ் அழகானது. கடினமானது அல்ல. ஆனால் சுலபமானதும் அல்ல.

    முதலிரண்டு பக்கங்களிலேயே கூடக் கடுமையான பிழைகள்.
    தொலைப்பேசி என்று நாலைந்து முறை இடம் பெற்றிருக்கின்றன. இதெல்லாம் சிரத்தையாகப் படிக்க முற்படுபவனின் மனதை அலைக்கழிக்க வல்லன.
    கவிதை முன்னே பின்னே இருந்தாலும் தவறின்றி எழுத ஆரம்பித்தாலே போதும். கவிதைக்கு ஒரு சந்தம் அகப்பட்டு விடும். சந்தம் கவிதைக்கு ஒரு அலங்காரம் தான்.‌அது இல்லாமலும் கூட அது பரிமளிக்க வேண்டும். இருந்தாலும் கடவுளின் மிக அழகிய படைப்பான குழந்தைக்குப் பவுடர் அப்பி, சிறிதாக சிண்டு முடிந்து, ளொக்ளொக்கென்று உவ்வாக்காட்டி, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டை இன்னமும் ஈஷி விடுபவர்கள் தானே நாம். நியாயமாக இந்த செய்கை, குழந்தையை கோரப்படுத்தும் முயற்சியாகத்தான் இருப்பது. ஆச்சரியமாக இது எந்தக் குழந்தையையும் அழகாகத்தானே காட்டுகிறது.
    லேசான உறுத்தாத சந்தம் எந்தக் கவிதையையும் மேம்படுத்தத் தான் செய்யும். அதை ஞானக்கூத்தன் சாதித்துக் காட்டினார். சந்தம் மிளிரும் கவிதைகளில் பெரும்பாலும் ஒற்றுப் பிழை தென்படுவதில்லை.

Comments are closed.