கம்பனைக்காண்போம்—17

வளவ. துரையன்

                           

                    பாவ புண்ணியம் போல வெள்ளம்

            முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
            புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே!  [29]

[புல்லிய=அற்பப்பயன் அளிக்கும்; பொருஅரு=நிகரற்ற பயன் அளிக்கும்]

வெள்ளமானது ஓடி வருகிறது; அது தன் நீரால் முல்லை நிலத்தைக் குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலம் ஆக்குகிறது. அற்பப் பயன் தரும் நெய்தல் நிலத்தை நிகரற்ற பயன் தரும் நன்கு விளையும் மருதமாக்குகிறது. இவ்வாறு அந்தந்த நிலங்களில் உள்ள பொருள்களை எல்லாம் தத்தம் நிலங்களை விட்டு வேறு நிலங்களுக்குச் செல்ல வைக்கிறது. இந்த தன்மையானது எப்படி இருக்கிறதென்று கம்பன் கூறுகிறான். உலகில் தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என்ற வகைகளில் உயிர்களில் பிறக்கின்றன. அவ்வுயிர்கள் தத்தம் வகைகளில் மாறி மாறிப் பிறக்குமாறு அவை செய்யும் பாவபுண்ணியங்களால் அமைகிறது. பாவ புண்ணியங்கள் உயிர்களின் பிறவிகளை மாற்றுவது போல வெள்ளம் நிலங்களைத் தன் நீரால் மாற்றுகிறதாம்.