|
புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள இச்செய்யுள் வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு ஒருசான்றாக உள்ளது.
புறநானூறு, 183. (கற்றல் நன்றே!) பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை : பொருண்மொழிக் காஞ்சி. =====================================
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும் சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
அருஞ்சொற்பொருள்:-
உழி = இடம் உற்றுழி = உற்ற இடத்து உறு = மிக்க பிற்றை = பிறகு பிற்றை நிலை = வழிபாட்டு நிலை முனியாது = வெறுப்பில்லாமல்
இதன் பொருள்:-
தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்
“மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.
பாடலின் பின்னணி:-
இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.
இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர். (குறள் – 395)
| |