பயனுள்ள கருத்துகள் கிடைக்காமல் போகாது/அழகியசிங்கர்


நடைவெளிப் பயணம் என்ற அசோகமித்திரன் புத்தகத்தைப் படித்து முடித்தேன். 40 வாரங்கள் குங்குமம் இதழில் தொடராக வந்திருந்த கட்டுரைகளின் தொகுப்பு.

படிப்பதற்கு இப் புத்தகம் சிறப்பாக இருப்பதற்குக் காரணம், 83வயதாகும் அசோகமித்திரன் தன் அனுபவங்களைச் சாறாகப் பிழிந்து கொடுத்திருப்பதுதான்.
புத்தகம் படிக்கும் அனுபவம் மகத்தானது.  பெரும்பாலோருக்கு இது பிடிபடுவதில்லை.  புத்தகம் படிக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்.  ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அடுத்த புத்தகத்திற்கு அவர்களுடைய மனம் தாவிவிடும்.  முதல் புத்தகம் என்ன என்பதுகூட அவர்கள் முழுவதும் மறந்து அடுத்த புத்தகத்தில் ஆழ்ந்து  விடுவார்கள்.
ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் திரும்பவும் எடுத்துப் படிக்கும்போது அப் புத்தகத்தின் வேறு சில காட்சிகள் நம்மிடம் புதிதாக வந்து சேரும்.
எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தொகுதியாக இது எனக்குப் படுகிறது.  இதில் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றியும், பலதரப்பட்ட இடங்களைப் பற்றியும் விஸ்தாரமாக விவரித்துக்கொண்டே போகிறார்.    
மேலும் படிக்க’ என்ற தலைப்பில் அமி அவர்கள் என்னன்ன புத்தகங்கள் ஒவ்வொருவரும் வாங்கிப்  படிக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.  
அசோகமித்திரன் இப்படியும் எழுதுகிறார் :

‘இந்தப் பகுதி வந்ததிலிருந்து நெருங்கிய நண்பர் முதல், என்னைத் துச்சமாகக் கருதுபவர்கள் வரை, அவர்கள் நூல்களைச் சிலாகித்து எழுத வற்புறுத்துகிறார்கள்.  நம்பகத்தன்மை என்ற ஒன்று இருக்கிறது.  நான் மட்டுமே பாராட்டினால் போதுமா?  வெறும் புகழ்ச்சி நம்பகத்தன்மை இல்லாதது.’அவர் குறிப்பிடுவது எவ்வளவு உண்மை.

பல ஆண்டுகளாக நான் மேற்கு மாம்பல வாசி.  ஆனால் என் வீட்டில் அருகில் இருக்கும் பப்ளிக் ஹெல்த் சென்டரைப் பற்றிய விபரம் எனக்குத் தெரியாது.  ‘அதென்ன பழைய மாம்பலம்’ என்ற கட்டுரையில்  எம் சி சுப்பிரமணியன் என்ற மருத்துவரைப் பற்றியும் அவர் மூலம் உருவான மருத்துவமனையைப் பற்றியும் குறிப்பிட்டு  எழுதி உள்ளார்.  
‘இன்று ஆஸ்பத்திரி என்பது ஓர் வாணிபச் சாதனம்.  ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அதைக் கலப்படமற்ற தொண்டாகச் செய்யலாம் என்பதை எம்.சி நிரூபித்துக் காட்டினார்.  கடைசிவரை கதர் உடுத்தி முதிர்ந்த வயதில் தொண்டனாகவே உயிரைத் துறந்தார்.  என் அனுமானம், அவருடைய புகைப்படம் கூட கிடையாது.  அவரைப் பாரத்து நானும் பல ஆண்டுகள் கதரே அணிந்தேன்,’என்று அவர் விவரித்துக் கொண்டு போகிறார்.  
இப்புத்தகம் இன்னொரு விதத்திலும் கவனம் பெறுகிறது.  எந்தக் கட்டுரையை எடுத்துப் படித்தாலும், படிப்பவருக்குப் பயனுள்ள கருத்து இதன் மூலம் கிடைக்காமல் போகாது.
என்னை நெகிழ வைத்த கட்டுரை ஒன்று உள்ளது.  ஜனதா  அடுப்பு என்ற கட்டுரைதான் அது.   அமி அதை வாங்கி வர டில்லியிலிருந்து சென்னைக்கு வரும் ஆதவன் என்ற எழுத்தாளரைக் கேட்டுக்கொள்கிறார்.  அவருக்குச் சிரமம் தரக் கூடாது என்று சென்னை சென்டரலில் தில்லி ரயிலுக்காக அமி காத்துக் கொண்டிருக்கிறார்.  வண்டி அன்று பார்த்து மூன்று மணிநேரம் தாமதமாக வந்தது.  அதைவிட வருத்தம் ஆதவன் ஜனதா அடுப்பு வாங்கி வரவில்லை என்பதுதான்.  இக் கட்டுரையில் எந்த இடத்திலும் ஆதவனைக் குறை கூறவில்லை.  தன் விதியை நினைத்து வருந்தவுமில்லை.  
அசோகமித்திரன் கட்டுரையில் அவ்வப்போது நகைச்சுவை தன்மை வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.  தி.க.சி யின் தங்கத் தாமரை நாட்கள் என்ற கட்டுரையில், ‘என் பக்கத்து வீட்டுக்காரர், ‘‘உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்,’’என்று கேட்டார்.  நான் அவரிடம் ‘சோவியத் பலகனி’ சில இதழ்கள் கொடுத்தேன்.  அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார்.’இப்படி எழுதுவதுதான் அசோகமித்திரன்.  
அசோகமித்திரனின் கதைப் புத்தகத்தைப் படித்தாலும், கட்டுரைப் புத்தகத்தைப்படித்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. 

கட்டுரைகளைக் கூட கதைகள் மாதிரிதான் அவர் எழுதுவார். வாசகனைக் கவர்ந்திழுக்கும் திறமையை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.

                       

One Comment on “பயனுள்ள கருத்துகள் கிடைக்காமல் போகாது/அழகியசிங்கர்”

  1. மெளலி எழுதியது உண்மை தான்.அசோக மித்திரன் பெரிய எழுத்தாளர் நானும் அவரை நிறைய முறை சந்தித்து உரையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது

Comments are closed.