இனிக்கும் தமிழ் – 72/- டி வி ராதாகிருஷ்ணன்

நாலாயிர திவ்ய பிரபந்தம்

நாம் யாரையெல்லாம் அவ்வப்போது நினைக்கிறோம்..யாரையெல்லாம்
நினைப்பதில்லை…யாரைப் பற்றியே நினைக்க வேண்டாம்..என்றெல்லாம்
எண்ணிப்பார்த்தால் திருமங்கை ஆழ்வார் சொன்னதே ஞாபகத்தில் வருகிறது.

“இறைவனை நினைக்காதவர்களை பற்றி நினைக்காமல் இருப்பதே சுகம்” என்று சொல்கிறார் அவர். இறைவன் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான். அந்த நன்றியை மறந்து அவனை
நினைக்காதவர்களை நான் ஏன் நினைக்க வேண்டும். அப்படி நன்றி மறந்தவர்களை நினைக்காமல் இருப்பதே இனிமையான அனுபவம் என்கிறார்.

பாடல்


மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்துஎண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே
.

பொருள்

மண்ணாடும் = பூ உலகும்
விண்ணாடும் = வானுலகமும்
வானவரும் = தேவர்களும்
தானவரும் = அசுரர்களும்
மற்றுமெல்லாம் = மற்றும் உள்ள அனைத்தும்
உண்ணாத பெருவெள்ளம் = அடங்காத பெரு வெள்ளம் (பிரளயம்)
உண்ணாமல் = அவர்களை எல்லாம் உண்டு விடாமல்
தான் விழுங்கி = தானே விழுங்கி, வயிற்றில் வைத்து இருந்து
உய்யக் கொண்ட, = பின் உமிழ்ந்து அவை பிழைத்து இருக்கும் படி செய்த
கண்ணாளன் = கண்ணாளன் (என்ன ஒரு அழகான சொல்)
கண்ணமங்கை நகராளன் = திருக் கண்ணபுரம் என்ற தலத்தில் இருப்பவன்
கழல் சூடி = திருவடிகளைப் போற்றி
அவனை உள்ளத்து = அவனை தங்கள் உள்ளத்தில்
எண்ணாத மானிடத்தை = நினைக்காத மனிதர்களை
எண்ணாத போதெல்லாம் = நான் நினைக்காமல் இருக்கும் பொழுது எல்லாம்
இனியவாறே. = இனிய பொழுதே
நமக்கு மனதுக்கு பிடித்தவர்களை நினைக்கும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சி
உண்டாகிறது அல்லவா?
சில பேரை நினைத்தாலே ஒரு கோபமும், எரிச்சலும், வெறுப்பும் வருகிறது அல்லவா?
இறைவனை நினைக்கும் அடியார்களை விடுத்து மற்றவர்களை நினைக்காமல் இருப்பதே
சுகமான அனுபவம் என்கிறார்.
என்ன ஒரு அழகான சிந்தனை.