3. விவாகம்/செல்லம்மாள் பாரதி

  • பாரதியாரின் பதினாலாம் வயதில் எங்களுக்கு மணவினை முடிந்தது. அப்பொழுது எனக்கு வயது 7. பாரதியார் தங்கை லக்ஷ்மிக்கோ மூன்றே வயதுதான். அவர் அத்தை குப்பம்மாளின் இரண்டாவது மகன் கேதாரத்திற்கு விவாகம் செய்வித்தனர். என் தமக்கை பார்வதியை கேதாரத்தின் தமையன் விசுவனாதனுக்கு மணம் புரிவித்தனர் கல்யாணம் மிக்க சிறப்பாக நடந்தது. நான்கு நாட்களும் ஊர்வலம்.

  • ஸ்ரீ கிருஷ்ணசிவன் அவர்களுக்கு நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன் கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும், பட்டும் பட்டாவளியுமாக, சால்வைகள், மோதிரங்கள், முத்துமாலைகள் முதலியன வெகுமதிகளாக ஏராளமாய் வந்தன. தங்கநாதஸ்வர வித்வான் ரத்தினசாமியை ராமநாதபுரம் ராஜா அவர்கள் அனுப்பியிருந்தனர். அந்த சமயம் கியாதி யடைந்திருந்த திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம். பாரதியாருக்குப் பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் பிரியமில்லாவிடினும், ரஸிக்கத் தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால் விவாகத்தில் உத்ஸாகமாகவே காணப்பட்டார்.

  • அக்காலத்தில் விவாகம் முடிந்தவுடன் கணவர் மனைவியர் பேசுவதில்லை . கணவரைக் கண்டால் ஓடி ஒளிய வேண்டும். பாரதியார் மட்டும் இதற்கு விலக்காக நடக்க வேண்டுமென்பார். எல்லோருக்கு மெதிரில்,

“தேடக் கிடைகாத சொர்ணமே, உயிர்ச்சித்திரமே.
மடவன்னமே, அரோ சிக்குது பால் தயிரன்னமே,
மாரன் – சிலைவேல்களை கொலைவேலென – விரி
மார்பினில் – நடுவே தொளை
செய்வது கண்டிலை யின்னமே – என்ன
செய்தேனோ நான் பழி முன்னமே?
கன்னத்தினில் குயிற் சத்தமே கேட்கக் கன்றது பார்
எந்தன் சித்தமே, மயக்கம் செய்யுதே காமப்பித்தமே ,
உடல் கனலேறிய மெழுகாயின தினியாகிலு மடி பாதகி
கட்டியணைத்தொரு முத்தமே தந்தால்
கை தொழுவேன் உனை நித்தமே’

என்று என்னைப் பார்த்துக் காதல் பாட்டுக்கள் பாடுவார். நான் நாணத்தினால் உடம்பு குன்றி, எல்லோரையும் போல்
சாதாரண ஒரு கணவன் கிடைக்காமல் நமக்கென்று இப்படி ஒரு அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று
துன்புறுவேன்.

கிராமத்தில் பழகிய, ஒன்றுந்தெரியாத ஏழு வயதுச் சிறுமிக்கு, கவிஞர்களின் காதல் ரஸானுபவம் எப்படி அர்த்தமாகும்? விவாகத்தின் நாலாம் நாள் ஊர்வலம் முடிந்து பந்தலில் ஊஞ்சல் நடக்கின்றது. ஒரு ஆசு கவி இயற்றினார். அதை இனிய ராகத்தில் பாடி, பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்று செய்தார். கல்யாண விமரிசையைப் புகழ்ந்தும், அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும், என் தகப்பனார் கலியாணத்திற்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்தும், வித்வான்களின் சங்கீதத் திறமையை மெச்சியும் இயற்றிய பாடல். அதைக்கேட்டு யாவரும் “பலே பேஷ்” என்று ஆரவாரித்து, “மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்ந்தது போல் வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி” அவரவர்கள் போக்கின்படி புகழ்ந்தனர். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம் பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார். திருநெல்வேலி ஜில்லாவிலேயே சிலகாலம் வரையில் அந்தக் கல்யாண விமரிசை ரீங்காரம் செய்க கொண்டிருந்தது. எங்கும் அது பற்றியே பேச்சு.

,ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)