- பிறப்பு – வளர்ப்பு – படிப்பு

பாரதியார் 1882-ம் வருஷம் கார்த்திகை மாதம், மூல நக்ஷத்திரத்தன்று ஸ்ரீசின்னசாமி அய்யரின் திருக்குமாரராக அவதரித்தார். அது கண்டு தாய் தந்தையரும், ஊராரும் உளம் களித்தனர். வேதியர் விதிப்படி விரைதானம் முதலியன செய்து வந்தனர். குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, ஐந்து வயதையடையுமுன்பே தாயார் லக்ஷ்மி விண்ணுலகெய்தினார். இரண்டு வருஷம் வரை சின்னசாமி அய்யர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. பாரதியாருக்குப் பாகீரதி என்று ஒரு சகோதரியுமிருந்தாள். இரண்டு குழந்தைகள் வளர்ப்பதை உத்தேசித்து, தமது பந்துக்களிலேயே ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார்
ஸ்ரீ சின்னசாமி அய்யர். அவரது நாமம் வள்ளியம்மாள். அவரும் பாரதியாரிடம் மிகுந்த வாஞ்சை யோடிருந்தார். தமது மறுமணத்தின் கூடவே புத்திரனுக்கு உபநயனமும் செய்தார். பிறவியில் பிரம்மாவான பாரதிக்கு வெளிப்படையான பிரம்மோபதேசம் நடந்தது. தந்தையிடம் எதிரே நின்று வார்த்தையாடவும் பயப்படும் சுபாவமுள்ள பாரதியார், தமது சிற்றன்னையிடமே தமக்கு ஆகவேண்டிய காரியங்களைத் தாராளமாகக் கேட்டுப் பெற்று வந்தார்.
பாட்டியாராகிய பாகீரதி அம்மாளும் அவரது சகோதர – – சகோதரிகளும், பாரதியாரை மிக்க அன்போடு வளர்த்தனர். மாமன் வீட்டிலும் அருமையாகப் பேணிவந்தனர். மாமன்மார்கள் இருவர். ஸ்ரீ செல்லமய்யர் – ஸ்ரீசாம்பசிவய்யர். தாயாருடன் பிறந்த சிற்றன்னைகள் நால்வர் – சின்னம்மாள், ஆனந்தம், விசாலாக்ஷி, ராமு என. அதில் சின்னம்மாள் வயதில் மூத்தவரானபடியால், அவர் தமது தமக்கை லக்ஷ்மி இருந்தால் எப்படி மகனை வளர்ப்பாளோ, அதுபோல் வளர்த்தார். சின்ன மாமா சாம்பசிவய்யரும், கடைசி ராமுவும், பாரதியாருக்கு சமவயதானபடியால் விளையாட்டுத் தோழராயிருப்பர். ராமு சித்திக்குக் கோபம் வந்தால் சாப்பிடவே வரமாட்டாராம். இவர் “ராமு, சாப்பிட்டுவிட்டுக் கோபித்துக் கொள்” – என்றால் – “போடா! வயிற்றில் சோகம் விழுந்தால் கோபம் போய்விடும்” என்பாராம்.
ஐந்து வயதிலேயே தாயை இழந்த பாரதியாரின் தேகாரோக்கியத்தில் கூடத் தந்தை சின்னசாமி அய்யர் கவலை காட்டாமல் சதா காலமும், கல்வி கற்பிப்பதிலும், கணிதம் பயிற்றுவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார். அதைப் பாரதியார்,
ஆண்டோர் பத்தினி லாடியு மோடியும்
ஆறு குட்டையி னீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்தேறி யிறங்கியும்
என்னொ டொத்த சிறிய ரிருப்பரால்,
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதிலும் கூடிடேன்
தூண்டு நூற்கணத்தோடு தனியனாய்த்
தோழமை பிறிதின்றி வருந்தினேன்
என்று கூறியிருக்கிறார்.
பாரதியாருக்குப் பள்ளிப்படிப்பான மதி பற்றிடவில்லை. ஏழெட்டு வயதிலேயே மோகனமான பகற்கனவுகள் காண்பதிலும், சிங்கார ரஸமுள்ள கவிகள் இயற்றுவதிலும் பிரியம் கொண்டார். அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து அப்படியே மனப்பாடம். பிற்காலத்தில் அவரது இயற்கை காதல், கடவுள் காதல், ஜீவ தயை முதலியவை தேசத்தின் க்ஷேமத்தில் காதல் கொள்ளவும், பரமாத்மாவாகிய கணனிடம் நீங்காத பக்தியை யுண்டு பண்ணவும், தான் வேறு உலகம் வேறு என்ற பிரிவுணர்ச்சியின்றி எல்லோரும் கடவுள் என்ற சமபாவம் அடையவும் காரணமாயின. குழந்தைப் பருவத்திலேயே பெரிய கிழவர்களுடன் உட்கார்ந்து உயர்ந்த வேதாந்தத் தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிடுவார். தம் மகன் கிழவர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து பிரசங்கம் புரிந்துகொண்டிருப்பதில் சின்னசாமி அய்யருக்கு உள்ளூறத் திருப்திதான். ஆனால் மைந்தர்களைப் பற்றிய மகிழ்ச்சியை அவர்கள் முன்னிலையில் கூறுவது சரியாகாது என்றெண்ணிப் பையனைக் கண்டதும் புலி போலச் சீறுவார். தந்தையைக் கண்ட பாரதி புலியைக் கண்ட மான் போல மிக்க பயத்துடன் நடந்து கொள்ளுவார். அனேகமாகத் தந்தையர் கண்ணில் அகப்படாமலேயே சுற்றுவார்.
பாரதியார் தமது தாய்ப் பாட்டனாராகிய ராமஸ்வாமி அய்யர் வீட்டிலேயே தங்கியிருந்து, தகப்பனாருக்குத் தெரியாமல், அவர் அரசாங்க சபைக்குச் செல்லாத சமயங்களில், தமிழில் மோகமுற்ற மகாராஜாவிடம் சென்று தாம் இயற்றிய கதைகளைச் சொல்லிக் காண்பிப்பார். அதைக் கேட்டு மகாராஜா மிக்க சந்தோஷமுற்றுப் பாராட்டுவார்.
பாரதியாருக்குக் குழந்தைப் பிராயத்தில் ரொம்ப மறதி அதிகம். பள்ளிக்கு எனத் தந்தையார் வாங்கிக் கொடுத்த கற்பலகை, குச்சி, புஸ்தகங்கள் முதலியவற்றை யார் வீட்டுத் திண்ணைகளிலாவது வைத்துவிட்டுக் குளத்தங்கரைக்குச் சென்று, இயற்கைக் காட்சிகளில் ஈடுபட்டு, ஆனந்தமாக ரஸித்துக் கொண்டிருந்து, வீடு திரும்புவார். தனது உள்ளத்தைக் கவிதாதேவிக்கு அர்ப்பணம் செய்துவிட்டமை யால், அவருக்குப் பசி தாகம் கூடத் தெரிவதில்லை சுயசரிதையில் 12 வயதில் காதலுற்றதாகக் கூறியிருக்கும் நங்கை கலாவாணிதான். சாதாரணமாகக் கடவுளைத் தாய், தந்தை என்ற முறையில் தான் வழிபடுவார்கள். ஆனால் பாரதியாரோ நாயக – நாயகி பாவத்தில்தான் அதிகமாகப் பாடியிருக்கின்றார். பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து ஐக்யமாவதுதான் பரமானந்தமே தவிர, ஒதுங்கி நின்று வணங்குவது அவருக்குப் பிடிக்காது. கடவுளைக் கட்டிப் பிடித்து ஹிருதயத்தில் சிறைப்படுத்திக் கொண்டு விட்டார். அதனால்தான் பால்யத்திலேயே ‘பாரதிப் பட்டம்’ எதிர்பாராமலேயே அவருக்குக் கிடைத்தது. காலையில் இள வெயிலின் காட்சிகளிலும், நடுப்பகலில் ஒழிந்த ஒதுப்புறமான இடங்களில் கவிதைக் காதலியுடன் இன்புறுவதிலும் ஈடுபட்டிருந்து மாலையில் தமது தாத்தாவின் வீட்டிற்குத் திரும்புவார்.
அவரது சிற்றன்னை “புஸ்தகம் – ஸ்லேட்” எங்கே என்று கேட்டபின் தான் அவருக்குத் தாம் பள்ளிக்குப் போகாமல் தெருவில் சுற்றிய ஞாபகம் வரும். பின்பு அந்த அம்மையார் சின்னசாமி அய்யர் கோபித்துக் கொள்வார் என்று பயந்து தாமே கடைக்குச் சென்று சிலேட் புஸ்தகங்களை வாங்கிக் கொடுத்து, சாப்பாடு போட்டு, வீட்டுக்கு அனுப்புவார். மகன் யோக்யமாகப் பள்ளி சென்று வருகிறான் என்று தந்தை உள்ளூற மகிழ்ச்சியோடிருப்பார்.
ஒருநாள் சின்னசாமி அய்யர் அரசாங்க சபையில் உட்கார்ந்திருக்கும் சமயத்தில் பண்டிதர்கள் வித்வான்கள் முதலியோர் கூடியிருந்தனர். மஹாராஜா, “அய்யர்வாள்! நம்ம சுப்பையா (சுப்பையா என்பது பாரதியாருக்கு வீட்டுச் செல்லப் பெயர்) பிறப்பதற்குத் தாங்கள் பூர்வ ஜென்மத்தில் என்ன புண்யம் செய்தீர்களோ? அல்லது தாயார் செய்த தவப் பயன்தானோ?” என்பார். “திருஞான சம்பந்தரால் சரித்திரப் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாக மாறத்தான் போகின்றதோ” என்று மேன்மேலும் புகழ ஆரம்பித்தார். சின்னசாமி அய்யருக்கு மகாராஜா சொல்வது இன்னதென்று விளங்கவில்லை . மகன் ராஜசபைக்கு வருவதும் கவிதைகளைப் புனைவதும், அவருக்குத் தெரியாதாகையால், “மகாராஜா புகழ்வது ஒருவேளை கோபத்தினால்தானோ என்னமோ? அறியாத சிறுவன், மகாராஜா வருத்தமுறும்படி ஏதாகினும் காரியஞ் செய்துவிட்டான் போலும்! அதைத்தான் இப்படிமாற்றி மறைத்துச் சொல்கின்றாரோ?” என்று சந்தேகமுற்று, மகாராஜா! சின்னப் பயல் ஏதாவது உளறினால் தாங்கள் அதைப் பொருட்படுத்தலாமா? அவனை நான் வீடு சென்று நன்றாகக் கண்டிக்கிறேன்” என்று சற்று வருத்தத்தோடும் கோபத்தோடும் உரைத்துவிட்டுத் தலை குனிந்திருந்தார்.
அய்யரது சுபாவத்தை நன்கு அறிந்த ஜமீந்தார், “சின்ன சாமி! உங்களிடம் நான் பொய் பேசுவேனோ? நம்ம சுப்பையா அருமையான கவிதைகள் என்னிடம் கொண்டுவந்து வாசித்துக் காண்பிப்பான். பண்டிதர்கள்கூடக் குறை சொல்லாதபடி அவனது பிள்ளைக் கவிதைகளில் நவரஸங்களும் சொரிந்து, எதுகை, மோனை அமைப்புக்களுடன் உயர்ந்த கருத்துக்களை எளிய பதங்களில் அமைத்திருக்கிறான். அந்தப் பாடல்களுக்குக் கிள்ளை மொழியில் அவன் அர்த்தம் சொல்லுவதைக் கேட்கும்பொழுது, அவன் சுப்பையா என்பதே எனக்கு மறந்து போய், பட்டினத்தாரோ, தாயுமானவரோ, குமரகுருபரரோ இந்த உருவெய்தி எமக்கு அறிவுறுத்த வந்தாரோ என்று மெய்ம்மறந்து விடுகின்றேன். உங்களுக்கு எதிரில் அவனைப் பாடச் சொன்னால், பயத்தினாலும், வெட்கத்தினாலும் பாடமாட்டான். அவன் இங்கு வரும் ஒருசமயம் தாங்கள் ஒளிந்திருந்து பாருங்கள். உண்மை விளங்கும்” என்றார். அதுகேட்ட அய்யர் மனம் பூரித்தது. பிள்ளைக் கவியின் பெருமை பண்டிதர்களுக்கும் தெரிய ஆரம்பித்தது.
அக்காலத்தில் ஸ்ரீ சோமசுந்திர பாரதியாரும் பாரதியாரும் தோழர்கள், சோமசுந்திர பாரதியாரை “அடே! சோமு” என்றே அழைப்பார்.
சோமசுந்தர பாரதியார் தங்களது பள்ளி அனுபவங் களைப் பற்றி எழுதியிருப்பதை நான் முதன் முதலில் வெளியிட்ட ‘சுதேச கீதங்கள்’ என்ற புஸ்தகத்தில் காணலாம்.
பாரதியாரின் வெட்டென்ற பேச்சும், துடிக்கும் உள்ளமும், சுயமரியாதையும், அவர் காந்திமதிநாத பிள்ளைக்குச் சொன்ன பாடல்களிலேயே தெரியும்.
,ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

முண்டாசு க்கவி பாரதியார் கதை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது.