
இச்சரித்திரத்திற்கு பாரதியாரின் அருமை அத்தையாரின் சரித்திரமும் அவசியமாகையால் அதைச் சிறிது கவனிப்போம். அத்தையின் கணவர் ஸ்ரீகிருஷ்ண சிவன் அவர்களுக்குச் சிறுவயதிலேயே சிவபெருமானிடம் அளவற்ற பக்தியுண்டு. அதனால் சொத்து முதலியவைகளை அதிகமாகக் கவனிப்பது கிடையாது. நன்றாகக் கவனித்துப் பயிரிடாத காரணத்தால் பயிர்கள் நன்கு விளையவில்லை. ஜீவனத்திற்குச் சற்றுக் கஷ்டமுண்டாயிற்று. மனதில் வைராக்கியமும், அதிகமாயிற்று. ஒருநாள் கனவில் காசி விசுவநாதர் தரிசனம் கொடுத்து, “பக்தா ! காசிக்குப் புறப்பட்டுவா!” என்று உரைத்தாற்போலத் தோற்றமுண்டாயிற்று. உடனே அவரது ஊரான வாகக்குளத் திலிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. பகவானது பக்தியில் ஈடுபட்டுவிட்டால் பின் மற்றவை ருசிக்குமா? அதனால் காசிக்குப் போகத் தீர்மானித்துவிட்டார். மனைவி குப்பம் மாளையும் இவ்விஷயத்தில் ஆலோசனை கேட்டார்.
“பெண்ணே ! எனக்கு பகவான் நாமஸ்மரணை செய்துகொண்டு ஊரூராக யாத்திரை போக வேண்டுமென்று வெகு நாட்களாக எண்ணமுண்டு. பகவானும் உத்தரவு கொடுத்துவிட்டார். நான் செல்ல வேண்டும். நீ உன் பிறந்தகம் சென்று உன் தாயாருடன் வசித்து வருகிறாயா?”
“நாதா! தாங்கள் இவ்வாறு கேட்கலாமா? தங்களைப் பிரிந்து நான் எப்படியிருக்க முடியும்?”
“என்னுடன் வரும் பக்ஷத்தில் ஒரு செளகரியமும், கிடையாது. ஊரூராகச் சுற்ற வேண்டும். கால்நடை தான் போக வேண்டும். உன்னால் கஷ்டப்பட அதற்காகத்தான் சொன்னேன்.”
“நன்றாயிருக்கின்றது! தாங்கள் இல்லாமல் – ஸெகரியமாயிருப்பதைக் காட்டிலும், என்ன கஷ்டமான சரி, உங்களுடன்தான் வருவேன்.”
ஸ்ரீ கிருஷ்ண சிவனுக்கு, “சரி” என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. குப்பம்மாளும் பட்டுப்புடவை முதலியவை களை விடுத்து இரண்டு வெள்ளைத் துணிகளை ஒன்றாகக் தைத்து மஞ்சள் நீரில் நனைந்து உடுத்திக் கொண்டார்.
சிவனுக்கு ஒரு தமையனார் உண்டு. அவரிடம் வீடு வாசல் முதலியவற்றை ஒப்படைத்துவிட்டு ஒவ்வொரு சிவஸ்தலமாகச் செல்லலாயினர். விடியற்காலையில் ஸ்னானம் செய்து உஞ்சவிருத்தி எடுத்து சாப்பாடு முடிப்பார்கள். தம்பதிகள் இருவரும் மிகவும் மனவொற்றுமையோடு யாத்திரை செய்தார்கள். கணவர் எள் என்பதற்கு முன் எண்ணெயாக நிற்பார் குப்பம்மாள்.
காளஹஸ்தியில் விஜயநகரம் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரபு ஒருவர் இவர்களைச் சந்தித்தார். சிவனது மாசில்லா சிவபக்தியையும், கணவரது வார்த்தைக்கு எதிர் சொல்லாது அருந்ததிபோல விளங்கும் பத்தினியின் நிலையையும் வேடத்தையும் கண்டு அவர் மகிழ்ந்து, “ஐயன்மீர்! தாங்கள் நாளை முதல், உஞ்ச விருத்திக்குப் ‘ போக வேண்டாம் தங்களுக்கு வேண்டிய சாமக்ரியைகள் எல்லாம் நான் கொடுக்கின்றேன். தங்களது அபிலாஷை ஏதாகிலும் உண்டானால் தெரிவியுங்கள். நான் செய்து முடிக்கின்றேன்” என்றார்.
இதுவும் விசுவநாதன் அருள் என்றெண்ணி, “காசிக்குப் போய் . விசுவநாத தரிசனம் செய்ய வேண்டும். ரயில் கட்டணத்திற்குக் கையில் பணம் கிடையாது. கால்நடையாக வேனும் யாத்திரை போக வேண்டுமென்று தீர்மானித்திருக் கிறேன். அதுதான் எனது அபிலாஷை” எனவும், “நான் அந்த விருப்பத்தை நடத்தி வைக்கிறேன். தாங்கள் தீவிரமான பக்தி வைராக்ய முடையவர்களாதலால், தங்களால் நடந்து செல்லமுடியும். ஆனால் அந்த அம்மை ரொம்பவும் சிரமப்படுவர். இன்னும் பதினைந்து நாளைக்குள் கங்காஸ்னானம் பண்ணிவைப்பது என் பொறுப்பு. தாங்கள் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று வணங்கினார்.
அவ்வாறே ஏற்பாடு செய்து, வழியிலுள்ள ஸ்டேஷன் களிலும் தமது ஆட்களைக் கொண்டு அவர்களுக்கு வேண்டும் ஸெகரியங்களைச் செய்து கொடுத்து, கடைசியாகக் காசியில் – சிவ மடத்தில் கொண்டு போய் இறக்கிவிடச் செய்தார். கிருஷ்ணசிவன் தமது மனைவியோடு சிறிது காலம் சிவ மடத்திலேயே வசித்து, அங்குள்ளவர்களெல்லாம் யோக்யர் – கண்யமானவர் – பக்தர் என்றெல்லாம் புகழ் பெற்றார்.
அந்தச் சிவ மடத்துச் சொந்தக்காரர் பிரும்மசாரி. தமது அந்திம காலம் நெருங்கியதும் மேற்படி மடத்தையும், பெரிய தோட்டத்தையும் கிருஷ்ண சிவன் பரம்பரையாக அனுபவித்துத் தருமங்களை நடத்தி வர வேண்டுமென்று எழுதி வைத்துப் பரமபதமடைந்தார்.
ஜமீன்தாரும் அவரிடம் பரமபக்தி வைத்து ஏராளமான செல்வங்களை அளித்தார். இதற்குள்ளாக இரண்டு புதல்வர் களும் பிறந்தனர்.
தம் வீடு, வாசல், சொத்து முதலியவற்றை வேண்டாம் என்று உதறி வந்தும் தற்செயலாகப் பழையபடி எல்லாச் செல்வங்களும் கிடைத்தவுடன், கொஞ்சங்கூட செல்வச் செருகின்றி ஜனக மஹாராஜனைப்போல பற்றில்லாமல் உள்ளத் துறவுடன் வாழ்ந்து வந்தார். காசிக்கு வரும் தென்னாட்டினர் யாரானாலும், அவர்களை மிகுந்த பரிவோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய உதவி செய்து, “பரோபகாரார்த்தம் இதம் சரீரம்” என்னும் முதுமொழிக்கு ஏற்ற உதாரணமாய் வாழ்ந்துவந்தார்.
,ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

சிவமடம் அலகாபாத்தில் இருக்கிறது வாரணாசியிலும் இருக்கிறது போலும்.