5. தந்தை வியோகம்/செல்லம்மாள் பாரதி

பாரதியாருக்கு விவாஹம் ஆன அடுத்த வருஷத்திலேயே அவர் தகப்பனார் நோயுற்று இறந்தார். பாரதியார் மனம் ரொம்பவும் வருந்தியது. “தந்தையின் வறுமை” மகனது மனதைப் பிடுங்கித் தின்றது. யந்திரப் போட்டியிலீடுபட்டுச் சின்னசாமி அய்யர் தமது சொத்தையெல்லாம் இழந்தார். தந்தையாரது பொருள் சேர்க்கும் ஆவலையும், அதற்கவர் பட்ட கஷ்டத்தையும், அபஜய மடைந்தவுடன் அவர் மனமிடிந்து இறந்ததையும், பாரதியார் தம் சுயசரிதை’யில் வெகு உருக்கமாகக் கூறியிருக்கின்றார்.
தந்தையாரின் எதிர்பாராத மரணத்தினால் பாரதியாருக்குப் பணத்தின் மீதே வெறுப்புண்டாயிற்று. மஹாபுத்திசாலியான தமது பிதா கேவலம் பணத்தின் பொருட்டு உளம் குன்றி மடிந்தது துடிப்பை உண்டாக்கிற்று. அந்தணர்கள தங்களது வர்ணாசிரம முறைப்படி தம் குல தருமமான வேத மோதுதல், பிறருக்குக் கலையுணர்த்தல், உலகத்திற்கு ஞான மார்க்கத்தைப் போதித்தல் முதலியவற்றைச் செய்யாது, என்ன இழிதொழிலாகினும் செய்து, வயிறு வளர்ப்ப தொன்றையே பெரிதென மதித்துக் காலங் கழிப்பதைக் கண்டு தவித்தார். அதை,

பார்ப்பனங் குலங் கெட்டழி வெய்திய
பாழந்தக் கலியு மாதலால்
வேர்ப்பு வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்.
ஆர்ப்பு மிஞ்சப் பல பல வாணிகம்
ஆக்கி மிக்க பொருள் செய்து வாழ்ந்தனன்:
நீர்ப்படுஞ் சிறு புற்புத மாமது
நீங்கவே உளங் குன்றித் தளர்ந்தனன்.
நாசக் காசினி லாசையை நாட்டினன்
நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன்.”

என்ற மொழிகளாலும், தந்தையர் இறந்ததும் யாதொரு உதவியுமின்றித் தாம் தவித்ததை,

“தந்தை போயினன் – பாழ்மிடி சூழ்ந்தது
தரணி மீதினி லஞ்செலென் பாரிலர்;
சிந்தை யிற் றெளி வில்லை; உடலினில்
திறனு மில்லை ; உரனுளத் தில்லையால்;
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதா
மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலை;
எந்த மார்க்கமும் தோன்றில் தென் செய்கேன்?
ஏன் பிறந்தன னித்துயர் நாட்டிலே?”

என்ற மொழிகளாலும் உணர்த்தியுள்ளார்.

திருநெல்வேலி ஜில்லாவில் படிக்கும்போது, மற்றொரு தோழர் அவருக்குண்டு – ஸ்ரீ சுப்பிரமணிய சர்மா என்பவர். இப்போது அவர் சென்னையில் இருக்கின்றார். கல்லூரிகளில் ஆசிரியராக இருந்து இப்பொழுது உபகாரச் சம்பளம் பெற்று வருகிறார். அந்த நாளில் கீர்த்தி பெற்ற நாடகக் கம்பெனியான, “கல்யாணராமன் ஸெட்” என்ற கம்பெனியில் நடந்த சில நாடகங்களுக்கு பாரதியாரும் ஸ்ரீ சர்மாவும் போவதுண்டு. முக்கியமாக பாரதியாரின் மனதைக் கவர்ந்தது பாரதத்தில் துரோபதி துகிலுரிதல்’ என்ற நாடகம். அன்று துரோபதி வேடந்தரித்தவர் கல்யாணராமன். அவரது சாமர்த்தியமும், சாதுர்யமும் பாரதியார் மனதைக் கவர்ந்தது. கௌரவர்களின் சபையில் வீற்றிருந்த மஹான்களான பீஷ்மர், துரோணர் முதலியோரை, அவர்களும் குனிந்து பதில் சொல்ல வகையறியாமல் விழிக்கும் படியாகக் கேள்வி கேட்ட பாஞ்சாலியை மனதிற்குள் மிகவும் வியந்தார்.


கேவலமான உடம்பாடு – வழக்கம் என்பதற்காக ஞானத்தில் மிகுந்த யுதிஷ்டிரர் கூடத் தமது உயிர்த்தேவியை கீழ்மக்கட்கு அடிமையாக்கியதைக் கண்டு, அவர் மனம் நோவுற்றது. அண்ணன் தாங்க முடியாத அளவுக்குத் தப்பிதம் செய்துங்கூட சகோதரர்கள் அவனுக்கு மரியாதையாக அடங்கி வணங்கியதும் அவரது மனதை நெகிழச் செய்தது. பின்னால் உலகத்தார் வியக்கும் வண்ணம் அவர் இயற்றிய பாஞ்சாலி சபதத்திற்குச் சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியே காரணமாயிருந்திருக்கின்றது.

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

ஸ்ரீ பாரதியார் சரித்திரம்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)EDIT”4. அத்தை குப்பம்மாள்/செல்லம்மாள் பாரதி”

4. அத்தை குப்பம்மாள்/செல்லம்மாள் பாரதி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

Post navigation