அதங்கோடு அனிஷ்குமார்

பெருவலி
உங்களை
வாட்டும் போதும்
மனம் கனத்து
பெருங்குரலெடுத்து தவிக்கும் போதும்
அழுங்கள்.
அடைக்கும் தாள்களை
திறந்து கொண்டு
கண்ணீர்
கன்னம் கடந்து
மீசை நனைந்து
தாடை தாண்டி
வழியட்டும்.
கண்ணீரீல்
உங்களை அழுத்தும்
அழுத்தங்கள்
அகலட்டும்
அழுகை போலொரு
ஆறுதல் உலகில்
இல்லவே இல்லை.
பெண்கள் அழுதால்
பேய்கள் இரங்குவது
இருக்கட்டும்.
ஆண்கள் அழக்கூடாது எனும்
கற்பிதம் உடையட்டும்
வாய்க்குள்
துணி திணித்து
ஒவ்வொரு இழப்பிலும்
அழுகை அடக்கும்
ஆண்களே
அழாமல் இருப்பது
ஆரோக்கியம் அழிக்கும்.
ஆதலால் இனி
அழுகையால்
உங்களைக் கழுவுங்கள்.
’இனியொரு விதி செய்வோம்’
அழுகையை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவில் வைப்போம்
