இலக்கியத்துக்கும், சினிமாவுக்கும் உள்ள நுட்பமான உறவு /வாசுதேவன்

நண்பர் திரு. தியோடர் பாஸ்கரன் அவர்களுடன் உரையாடினேன். இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் உள்ள நுட்பமான உறவை விளக்கினார். ஒரு நாவல் அல்லது சிறுகதையை ஒரு இயக்குநர் திரைப்படமாக எடுக்கும்போது அதை அப்படியே வரிக்கு வரி காட்சிப்படுத்துவது திரை மொழி அல்ல. ஆனால் குறிப்பிட்ட புனைவின் அடிப்படையில் கேமரா, பின்ணனி ஒலி, காட்சி முறையில் திரைக்கதை சொல்லும் போக்கு மூலம் படைப்பூக்கத்துடன் புதிய படைப்பை வழங்குவதுதான் சினிமா. எழுத்து வேறு சினிமா வேறு என புரியவைத்தார். இருப்பினும் ஒரு இலக்கிய எழுத்தை திரைமொழிக்கு இடப்பெயர்ச்சி செய்யும்போது இரண்டு அறிவார்த்ததுறைகளை (இலக்கியம்/திரைப்படம்) பற்றியும் ஆழ்ந்த புரிதலும் அனுபவமும் தேவை என்றார். இம்மாதம் ஃபிரண்ட் லைன் ஆங்கில இதழில் ஒரு அபாரமான கட்டுரை எழுதியுள்ளார். தி.ஜா வின் பாயாசம் சிறுகதையை இயக்குநர் வசந்த் படைப்பூக்கத்துடன் தனித்துவமான பாணியில் திரைமொழிக்கு கொண்டுவந்ததை அலசியுள்ளார்.

நான் பார்த்த வரையில் இலக்கிய படைப்புகளை திரைப்படங்களாக எடுத்து பிரமிக்க வைத்தவர் இயக்குநர் டேவிட் லீன். போரிஸ் பாஸ்டர்நாக் நாவல் டாக்டர் ஷிவாகோ ஐ அபாரமான திரைப்படமாக எடுத்தார்.அவருடைய பெரும்பாலான படங்களுக்கு அடிப்படை இலக்கிய நூல்கள். மற்றொருவர் உடி அலன். உம்பர்ட்டோ ஈகோவின் பெயர் பெற்ற நாவல் Name of the Rose ஐ ழாக் அனாட் அருமையாக திரைப்படமாக எடுத்திருப்பார். தார்க்கோவெஸ்கி, குரசோவா, ரே, பெர்க்மன் போன்ற மேதை இயக்குநர்கள் கடுமையான படிப்பாளிகள். இலக்கியம்,ஓவியம், தத்துவம்,இசை போன்ற துறைகளைப் பற்றி ஆழ்ந்து கற்றவர்கள். தார்க்கோவெஸ்கியின் Andrei Rublev ஓவியம், தத்துவம் , இலக்கியம் என அனைத்தையும் இணைத்து பிரமிக்க வைப்பார். இன்றளவிலும் உலகின் அனைத்து இயக்குநர்களால் கொண்டாடிய படம் இது. ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிய கோணங்கள் கிடைக்கும். மேதை! மார்க்வெஸ் தன்னுடைய One Hundred Years of Solitude காவிய நாவலை திரைப்படமாக எடுக்க ஒப்புதல் அளிக்கவில்லை. பில்லியன் டாலர்கள் கொடுக்க தயாராக இருந்தார்கள்.அவருடைய Love in the time of cholera நாவலை திரைப்படமாக எடுத்து சொதப்பியதால் தன் முடிவில் கறாராக இருந்தார். நாவலை வாசிக்கும் வாசகன் ஒரு புதிய உலகை தன் மனச்சித்திரத்தில் வரைகிறான். இந்த சித்திரத்திற்கு எதிராக திரைமொழி வரும்போது ஏமாற்றமடைவான். அவன் உலகத்தில் இருப்பதுதான் நல்லது என மார்க்வெஸ் கூறினார். அவர் இறந்தபிறகு அவருடைய மூத்த மகன் இதன் காப்புரிமையை நெட்ஃபிளக்கு விற்றுள்ளார். அடுத்த வருடம் வெளிவரப்போகிறது. கொர்த்தஸார் சிறுகதை Blow up ஐ மைக்கேலேஞ்லிலோ ஆண்டினியோனி அபாரமான திரைப்படமாக எடுத்தார். அவருடைய இன்னொரு சிறுகதையை (Traffic) ஃபிரான்சிஸ் ட்ரூஃபா திரைப்படமாக எடுத்தார். சிறுகதைகளை வாசித்து இந்தப்படங்களை பார்த்தால் எழுத்தாளரும்,இயக்குநரும் வேறு வேறு என்றாலும் ஒரு பிரதியை அணுகும் முறை பிரமிக்க வைக்கும். போர்ஹெஸ் உம் ஒரு படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். பெயர் பெற்ற இயக்குநர் ராபர்ட் பெர்ஸ்ஸனோடு பணியாற்றிய சாண்டியாகோ அர்ஜென்டைனா இயக்குநர். அவர் இயக்கிய Invasion திரைப்படத்திற்கு போர்ஹெஸும் அவருடைய நெருங்கிய நெருங்கிய நண்பர் பாய் கசேசர்ஸ் உம் திரைக்கதை வசனம் எழுதினார்கள். இது அர்ஜென்டைனாவில் தடை செய்யப்பட்டு மீண்டும் 2000 வாக்கில் எங்கோ கண்டுபிடித்தார்கள். புகைப்படத்தில் போர்ஹெஸ் வியப்புடன் இயக்குநர் சாண்டியாகோ ஐ பார்க்கிறார்.

தமிழில் இதுமாதிரியெல்லாம் நடப்பதற்கு என் தலைமுறையிலும் அடுத்த தலைமுறையிலும் சாத்தியமில்லை.