ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால்/வாசுதேவன்

ஹென்றி மில்லர் இப்போது உயிருடன் இருந்தால் அவருக்கு இன்று 130 வயது! சர்சைக்குரிய Erotic எழுத்தாளர். ஆண், பெண் பாலியியல் உறவுகளை அனாயசமாக எழுத்தில் கொண்டுவந்தவர். இதெல்லாம் அவர் 1920_ 30 களில் எழுதி அலறவைத்தார். 1934ல் Tropic of Cancer என்ற நாவலின் முன்னுரையில் இப்படி எழுதினார். ” இந்நாவல் வழக்கமான நாவல் இல்லை. வாசிப்பவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கும். நீங்கள் நம்பும் கடவுளின் புட்டம், மனிதன், விதி, காலம், காதல் என எல்லாவற்றின் மீதும் அடி விழும்” என வாசகர்களை எச்சரித்து நாவலின் கதவை திறக்கிறார். பாரிஸீல் தான் அலைந்து, பசியால் திரிந்த வாழ்க்கை, காதலின் நிராகரிப்புகள், காத்திரமான பாலியியல் சித்தரிப்புகள் என பின்னிப்பிணைந்துள்ளது. இந்நாவலில் ஏகப்பட்ட இடங்களில் ஆண் பெண் உறவுகள் அப்பட்டமாக எழுதியுள்ளார். இதனால் உடனடியாக அமெரிக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ 27 வருடங்களுக்குப்பிறகு தடை நீக்கப்பட்டது. பிறகு மெல்ல மெல்ல வெளியுலகத்திற்கு இந்நாவலின் இலக்கிய நடைக்காக கொண்டாடப்பட்டது. ஒருவகையில் இந்நாவல் மில்லர் பாரிஸீல் வாழ்ந்த சுய அனுபவங்களின் தொகுப்பு என்றும் சொல்லலாம். பின்னாளில் அவரும் ஒத்துக்கொண்டார். இருபதாம் நூற்றாண்டில் Erotic Literature என்ற வகைமையில் Tropic of Cancer நாவலுக்கு முக்கியப் பங்குண்டு. பின்னாளில் பீட் ஜெனரெஷன் எழுத்தாளர்கள் ஜாக் க்ரையாக், வில்லியம் பர்ரோஸ் இந்நாவலில் தாக்கத்தினால் எழுதினோம் என்றார்கள். ஜார்ஜ் ஆர்வெல், சாமுவெல் பக்கெட் இந்நாவலின் முக்கியத்துவத்தை புகழ்ந்து எழுதியுள்ளார்கள். எந்த அரசாங்கம் இந்த நாவலுக்கு தடை விதித்ததோ, அதே அமெரிக்க அரசாங்கத்தின் பல்கலைகழகங்கள், கல்விசார் நிறுவனங்கள் சில மாதங்களாக மில்லரின் 130 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்நாவலைக் கொண்டாடுகிறார்கள். . Rosy Crucifixation –Sexus Triology நாவல்களை எழுதி அலறவைத்தார். 1920-30 களில் எழுதி, வாலிபர்கள், வயோதிகர்கள் கணவான்கள் மற்றும் சீமாட்டிகளின் உறக்கத்தை கெடுத்த ஞானி.மனுஷன் பேனா மையோடு சிருங்கார ரசத்தை கலந்து வெலவெலக்க வைத்தார். எழுத்தில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் காதல்,காம லகரி போதையில் மிதந்தார். அதிகாரபூர்வமாக ஐந்து மனைவிகள். ஒவ்வொருவரிடம் சில காலம் வாழ்ந்து பிரிந்தார். ஏகப்பட்ட காதலிகள்…(இப்படி எழுதினால் யார்தான் அவர் மடியில் விழாமல் இருப்பார்கள்?) …இதில் இரண்டு காதலிகள் விசேஷம்… க்யுபா கவிஞர் அனிஸ் நின் உடன் காதல்… இருவரும் பித்தநிலையில் மூர்க்கமாக ஒருவரை ஒருவர் காதலித்தனர். இருவரும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் ஒவ்வொன்றும் காவியம்…இந்தக் கடிதங்கள் தொகுப்பு நூலாகவும் வெளிவந்து உலக முழுவதும் பல காதலர்களை இணைத்தது.. இருவருக்கும் உள்ள ஒற்றுமை—இருவரும் காம சிருங்காரத்தை அபாரமாக எழுத்தில் வெளிப்படுத்தினார்கள்…இருபதாம் நூற்றாண்டின் முன் பகுதியில் ஒரு பெண் துணிச்சலாக தன்னுடைய தாபங்களையும் ஏக்கங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது சாதாரண விடயமல்ல.. The Delta of Venus என்ற நாவலில் படுக்கையறை சாகசங்களை அப்பட்டமாக எழுதினாலும் அதில் துளிக்கூட ஆபாசம் இல்லாமல் கலையம்சத்தோடு எழுதியவர். அனிஸ் நின்னுக்கு மில்லர் எழுதிய காதல் கடிதங்கள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது.இரண்டாவது காதலி, அமெரிக்க ஹாலிவுட் காந்தக் கண்ணழகி Brenda Venus. அம்மணி ப்ளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தவர். இதில் விசேஷம் என்னவென்றால், வீனஸ் வயது 24. மில்லர் வயது 86. மனுஷன் 86 வயதில் வீனஸ் மேல் காதல் பித்தம் கொண்டுள்ளார். 90 வயதில் இறக்கும் வரையில் , இறுதி நான்கு வருடங்களில் வீனஸுக்கு காதல் கடுதாசிகளை எழுதியுள்ளார். நான்கு வருடங்களில் அவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை தலை சுற்ற வைக்கும்…1500 கடிதங்களை எழுதியுள்ளார்…(4000 பக்கங்கள்) ….ஒவ்வொன்றும் காவியம்….உண்மையில் இறுதி காலத்தில் அவருக்கு வாழ்க்கை மேல் பிடிப்பு வந்து கூடுதலாக வாழ்ந்ததற்கு இந்த காதல் காரணம் என அவருடைய நெருங்கிய நண்பரும் சக எழுத்தாளர் லாரன்ஸ் டியுரெல் குறிப்பிட்டுள்ளார்.அவர் எழுதியதில் சிறந்த ”காவிய கடிதங்களை” தேர்ந்தெடுத்த தொகுப்பு நூல் ஏற்கனவே வெளிவந்துள்ளது. வீனஸுக்கு எழுதிய ஒரு கடிதத்தை இப்படி முடிக்கிறார்…”To love at the end of one’s life is something special. Few women can inspire that sort of love. To wake up with the words of love on one’s lips–what bliss! Just to say “Brenda” puts me in ecstasy.”காதல் கடிதம் எழுதுவதும் ஒரு கலை..தமிழில் சவசவ வழா வழா கொழா கொழா நாவல்கள் மொழிபெயர்ப்பில் வெளிவருகின்றன.(சில விதிவிலக்குகள் உண்டு). ஹென்றி மில்லர், நபக்கோவ் நாவல்களை தமிழில் மொழிபெயர்க்கும் சீமான்கள்,சீமாட்டிகளுக்கு என் சொந்த செலவில் ஆயிரம் பொற்காசுகளை பரிசளிக்கிறேன்.பி.கு: சில வருடங்களுக்கு முன் திருவாளர் நாகர்கோவில் சந்நிதானம் நபக்கோவ், மில்லரை கிடாசி தள்ளி ஆபாச வணிக எழுத்தாளர் ஹெரால்ட் ராபின்சோடு ஒப்பிட்டு எழுதினார். உண்மையில் அவருக்கு இலக்கிய நுண்ணறிவு இருக்கிறதா என சந்தேகம் இருக்கிறது.

52Raju R.V., Manonmani Murugan and 50 others4 CommentsLikeComment