சுக்கு மணப்பெண்ணை கண்டுபிடித்த கதை/தமிழில் அதங்கோடு அனிஷ்குமார்

மத்தியப்பிரதேச நாட்டுப்புறக் கதை

சுக்கு திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.  அவன் ஏழையாக இருந்ததால் அவனுக்குப் பெண்தர முன்வரும் எந்த குடும்பத்தையும் அவன் அம்மாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.  
தனக்கு ஒரு மனைவி வேண்டுமென்ற சுக்குவின் நச்சரிப்பைத் தாங்க முடியாத அவனது அம்மா ஒரு முள்மரக்கட்டையை புடவையால் சுற்றி அவன் அறையில் மூலையில் வைத்தாள்.  வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிய மகனிடம் அவனுக்கு ஒரு மணப்பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்ததாகக் கூறினாள்.  
சுக்கு சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான்.  அவள் யாரென்றும் அவளை எப்போது திருமணம் செய்யலாம் என அவன் அறிய விரும்பினான்.  
"அவள் இங்கே தான், என் அறையில் இருக்கிறாள்" என்று கூறிய அவன் அம்மா, "நம்மைப் போன்ற ஏழைகளால் திருமணம் போன்றவற்றிற்கு செலவு செய்ய முடியாது.  ஆகையால் ஏற்கனவே உனக்கு திருமணமானதாக நினைத்துக்கொள்" என்றாள்.  
"நான் அவளைப் பார்க்கலாமா" - எனக் கேட்டான் 
"கதவுக்குப் பக்கத்திலிருந்து பார்க்கலாம்.  உள்ளே செல்லக்கூடாது. அவள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவள்"
அம்மாவின் அறையை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பி வந்த அவனுக்குத் தலைகால் புரியவில்லை. 
"அவள் முதுகைக் காட்டியபடி மூலையில் அமர்ந்திருந்தாள்" என கிசுகிசுத்தான்.  
"காலப்போக்கில் அவள் கூச்ச சுபாவம் போய்விடும் அவசரப்படாதே, அவள் கூப்பிடும் வரை அவளருகில் போகக்கூடாது" என எச்சரித்தாள்.
அம்மா தொடர்ந்து அவனைக் கண்காணித்து வந்தாள்.  அவன் உள்ளே நுழைய முயற்சிக்கும் போதெல்லாம் அவளை வெளியே இழுத்துப் போட்டாள்.  ஒருநாள் அம்மா கவனிக்காத நேரம் பார்த்து விரல் நுனியால் மெல்ல நடந்து அறைக்குள் நுழைந்த சுக்கு, அந்த முள்மரக்கட்டையைத் தொட்டான்.  அதன் முட்களில் ஒன்று அவன் கையைத் தைத்ததும், அவன் ஐயோ என்று அழுதபடி கையை பின்னுக்கு இழுத்தான்.  அவன் அம்மா அவனை அறையை விட்டு வெளியேற்றினாள்.  
"அவள் என்னைக் கிள்ளிவிட்டாள், அவளுக்கு என்மேல்  மரியாதை இல்லை. அவளை ஒரு  விளாசு விளாசுவது தான் தக்க தண்டனையாக இருக்கும்" என கோபத்தில் கத்தினான்.  
"அவளை  பயமுறுத்தாதே!  நான் தான் அவள் கூப்பிடும் வரை போகக் கூடாது என சொன்னேனே, இப்ப போய் சாப்பிடு" எனக் கூறினாள். 
சுக்கு சிரத்தையின்றி சாப்பிட்டான். 
அவன் மனம் கலக்கமடைந்திருப்பதை அவன் அம்மா உணர்ந்து கொண்டாள்.  தன் மகனுக்காக தான் செய்த தந்திரத்தை எண்ணி வருத்தப்பட்டாள்.  விஷயம் கைமீறி போவதற்குள் இந்த பிரச்சினைக்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டுமென தீர்மானித்தாள்.  
அவள் தூங்குவதற்கு முன் அவள் அறைக்குச் சென்று அந்த முள் மரக்கட்டையைச் சுற்றியிருந்த புடவையை உருவி எடுத்துவிட்டு அதை வெளியே வீசினாள். 
அதே நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் தவித்தபடி கிடந்தான் சுக்கு.  அவளை  அடிப்பேன் என அவன் மிரட்டியது மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது.  கடைசியாக அவள் இப்போது எப்படி இருக்கிறாள்  எனப் பார்க்க முடிவு செய்தான்.  
திருட்டுத்தனமாக அவன் அம்மாவின் அறைக்குள் நுழைந்த சுக்கு அந்த அறையில் அவன் அம்மா மட்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தான்.  
"அவள் போய்விட்டாள். என் மனைவி போய்விட்டாள்" என  அம்மாவை உலுக்கி எழுப்பினான்.  
"நிச்சயமாக அவளுக்கு தக்க தண்டனை கொடுக்க  வேண்டுமென நீ சொன்னாய் தானே! அவள் பயந்து போய் வீட்டைவிட்டுப் போய்விட்டாள்" என சாதுர்யமாகப் பேசினாள் அவன் அம்மா.
வீட்டைவிட்டு வெளியே சென்று "நீ எங்கே  இருக்கிறாய்? நீ எங்கே இருக்கிறாய்? எனக் கேட்டபடியே இருந்தான் சுக்கு. 
ஒரு  இளம்பெண் அவனை நோக்கி வருவதைக் கண்ட சுக்கு "என்னோடு வீட்டிற்கு வந்துவிடு, நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன், நீ என்னைக் கூப்பிடும் வரை உன் பக்கத்தில் வரமாட்டேன்.  எனக் கூறியபடி அவளை நெருங்கினான்.  
வீட்டைவிட்டு ஓடிவந்த அந்த இளம்பெண்ணின் மனதை சுக்குவின் கெஞ்சல் பாதித்தது.  அவளிடம் இவ்வளவு அன்பாக யாரும் இதுவரை பேசியதே இல்லை.  
" நான் வருவேன்" என்றாள்  அவள்.  
சுக்கு ஒரு இளம்பெண்ணோடு அதுவும் அவனோடு வாழ விரும்பும் ஒருத்தியோடு வருவதைப் பார்த்த சுக்குவின் அம்மா ஆச்சரியப்பட்டாள்.  இது கடவுளின் செயல் என நினைத்த அவள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தாள்.  
அதற்குப் பிறகு மூவரும்  மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.