எஸ் வி வேணுகோபாலன்
“என்ன சித்ர குப்தரே, கணக்குகள் கச்சிதமா?”
“கூட்டல் கழித்தலில் கொஞ்சம் தகராறு அடிக்கிறது பிரபோ”
“வாத்தியார் பிரம தேவனிடம் ஒருமுறை வாய்ப்பாடு கேட்டுக் கொள்வது தானே?”
“அவருக்கே மறந்து போச்சாம்!”
“என்னது, சரி, சரஸ்வதி?”
“பூலோகத்துல தனக்குப் போட்டியா கம்ப்யூட்டர் கண்டு பிடிச்சாட்டங்கன்னு அந்தம்மா கோபத்துல இருக்காங்களாம்..”
1973 (மாதம், அநேகமாக மார்ச் ஆக இருக்கும்) காஞ்சி பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி ஆண்டுவிழாவில் மேடையேற்றிய ‘எமனுக்கு எமன்’ நாடகத்தின் முதல் காட்சி வசனங்களில் கொஞ்சம் தான் மேலே நீங்கள் வாசிப்பது.
இதில் எளியேன், சித்ரகுப்தர் வேடம்.
‘கூட்டல் கழித்தலில்’ என்ற சொற்களை இழுத்தும் வேகப்படுத்தியும் நான் சொல்லிக் காண்பித்ததும், ஆசிரியர் துரை ராசாராம், “சரியான பயலைத் தாண்டா பிடிச்சுட்டு வந்துருக்கே” என்று எமனிடம், அதாவது, எமன் வேடம் போட்டிருந்த நண்பன் ராஜாவிடம் சொன்னார். அவன் சிபாரிசில் தான் அங்கே போய் நின்றேன். அதுவரை அந்த ஆசிரியரை நான் அறிந்திருக்கவில்லை. அதன்பின் என்னை அவர் விடவே இல்லை.
முதல் நாள், ஒன்பதாம் வகுப்பு கே பிரிவில் அந்தச் சுற்றறிக்கையை வகுப்பு ஆசிரியர் வாசித்து, ‘டேய், யாராவது நாடகத்தில் நடிக்க விருப்பம் உள்ளவன் இருக்கீங்களா டா’ என்று கேட்டார். (பல பள்ளிகளில் இப்படியான ஜனநாயகத் தன்மை கிடையாது, ஆசிரியர்களுக்குப் பிடித்தமானவர் மட்டுமே போட்டிகளில், நாடகங்களில் மேடைகளில் மின்னிக் கொண்டிருப்பார்கள்). நடுநிலைப் பள்ளியில் என்னோடு படித்து உயர்நிலைப் பள்ளியில் அதே வகுப்பில் இருந்த சிலர் என் பெயரை உரத்துச் சொன்னார்கள், நான் எழுந்து, ‘இல்லை சார், நான் நடிக்கல’ என்று மறுத்து அமர்ந்துவிட்டேன். விதி யாரை விட்டது!
அன்று மாலையே, பெயர் கொடுத்த மாணவர்கள் சிலரை வைத்து, நாடக பிரதியோடு விவாதித்திருக்கிறார் தமிழாசிரியர் ராசாராம். சித்ர குப்தர் வேடத்திற்கு அவர் விரும்பியது மாதிரி ஆள் அகப்படவில்லை. மறுநாள் காலையில் மீண்டும் அவர்கள் ஒத்திகை தொடங்கியதும், ‘என்னடா இது, வேற பையன் எவனையாவது அழைச்சுக்கிட்டு வாங்கடா’ என்று சொல்லி இருக்கிறார். விடுமுறை நாள் அது. என் வீடு தெரிந்த அந்த நண்பன் சைக்கிள் எடுத்துக்கொண்டு நேரே வாசல் வந்து நின்றான். வழக்கம்போல் வாசல் திண்ணையில் டெஸ்க் மீது ரஃப் நோட்டுப் புத்தகத்தில் கவிதை ஏதோ எழுதிக் கொண்டிருந்திருப்பேன் என நினைக்கிறேன், வேறென்ன !
‘உன்னைக் கையோடு அழைச்சிட்டு வரச் சொன்னார் டிராமா வாத்தியார் ‘ என்று என் இசைவுக்குக் காத்திராமல் இழுத்துச் சென்று அவர் முன்பு கொண்டு நிறுத்தினான். விசாரணையில் நிறுத்தப்படும் ஒருவனின் முந்தைய நடவடிக்கைகளை வழக்கறிஞர் எடுத்து வைப்பார் அல்லவா, குற்றத்தில் தப்பிக்க முடியாதபடிக்கு, அப்படி ஒரு வாதம் எடுத்து வைத்தான், நண்பன் – எட்டாம் வகுப்பில் என்ன நடந்தது என்று. என்ன நடந்தது? அதற்குப் பிறகு வருவோம். சிக்கியாகி விட்டது. மறுக்க முடியவில்லை. இரண்டு நாள் ஒத்திகை தான்.
ஆண்டுவிழா அன்றைக்கு உற்சாகம் அதிகம், ஏனென்றால், பள்ளி செலவில் போண்டா எல்லாம் வாங்கித் தருவார்கள், அந்த நாட்களில், ஓட்டல் என்றால் வீடுகளில் யார் அடிக்கடி அழைத்துச் செல்வார்கள்! மேக்கப் மேன் போட்டுப் புரட்டி எடுப்பார், அவர் அரிதாரம் பூசி முடிக்குமுன் டிபன் வந்துவிட வேண்டுமே என்ற துடிப்பை மட்டுமே கவிதையாக்க வேண்டும்.
சித்ரகுப்தன் வேடம் பெரிய வேலையெல்லாம் வைக்கவில்லை, எட்டாம் வகுப்பு கதையைப் பின்னர் பார்ப்போம். இப்போது ஒன்பதாம் வகுப்பு டிராமா.
சித்ரகுப்தன் வேடத்தில் திடீர் என்று கூலிங் கிளாஸ் எடுத்து மாட்டிக் கொள்வேன். அது நாடகக் காட்சி என்று அறியாமல் திரைக்குப் பின் டிரில் மாஸ்டர் அருகே வந்து, ‘மடையா புராண நாடகத்தில் எதுக்கு கூலிங் கிளாஸ் போட்டுக் குழப்பற, என் கிட்ட கொடு’ என்று முணுமுணுக்க, மேடையில் யாருக்கும் தெரியாதபடி மெதுவாக, ‘சார், நாடகக் காட்சி தான் இது, தொந்திரவு செய்யாதீங்க, அந்தப் பக்கம் போயிருங்க’ என்று சொன்னது கூட நினைவில் இருக்கிறது.
கண்ணாடியைப் பார்த்ததும், ‘என்னது இது?’ என்று கேட்பார் எமதரும ராஜா.
“பட முதலாளி பரமசிவம் ஏதோ புதிதாக வெளிநாடு எல்லாம் போய் பிரும்மாண்டமான படம் எடுக்கிறாராம், அஞ்சாறு வருஷம் ஆகுமாம் முடிக்க. அதுவரைக்கும் அவர் கணக்கை முடிக்காமல் தன்னை உயிரோடு விட்டுவைக்கக் கேட்டுக் கொண்டு ஆசையாக எனக்கு….” என்று இழுப்பேன்.
“எமலோகத்திலேயே லஞ்சமா?” என்று கொதிப்பார் எமன்.
“அந்த வார்த்தை சொல்லாதீங்க பிரபு, இது அன்பளிப்பு” என்று பதில் சொல்லவேண்டும்.
அது உண்மையில் நாடகத்திற்குள் ஒரு திரைப்படக் காட்சி என்று அப்புறம் தான் பார்வையாளர்களுக்குப் புரியும். எமனாக நடிப்பவர், கதையைச் சுழற்றி வேகமாக நடிக்க வேண்டிய காட்சியில் திடீர் என்று எல்லாம் போட்டுவிட்டுத் தலை தெறிக்க ஓடுவார், திரைப்பட இயக்குனர் என்ன என்று புரியாமல் திகைக்க, சம்பந்தமில்லாமல் வேறு ஒரு மனிதர் உள்ளே வந்து நிற்பார். இயக்குனர் கோபமாக அவரிடம், ‘டே எமனையே விரட்டிட்டியே நீ யாரு?’ என்று கேட்டால், எமனுக்கு எமன் என்று பதில் வரும். நடிகருக்குக் கடன் கொடுத்துவிட்டுத் திரும்ப வராததால், அவரை விரட்டிப் பிடிக்க சினிமா செட்டுக்கே வந்திருப்பார் அந்த ஆசாமி.
மாணவர்களது அமோக வரவேற்பு பெற்றுத் தந்த நாடகம் அது.
அப்புறம்சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஒரு நாடகத்தில் கம்பர் வேடத்தில் நடித்தேன்.
முதல் மேடை வாய்ப்பு, ஐந்தாம் வகுப்பு, வேலூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் வாய்த்தது. நேரு வேடம் கிடைத்தது, எனக்கு அல்ல, செக்கச் செவேல் என்றிருந்த இன்னொரு மாணவனுக்கு. காஷ்மீர் நிறத்தில் இருப்பான்.அழகான கண்கள். மனோ டீச்சர் அவனைத் தான் நேரு என்று தீர்மானித்தார், ஒரு முழு பக்கத்திற்கு ஆங்கிலத்தில் அவன் பேச வேண்டிய நீள வசனம் இருந்தது, ‘அதை இந்தப் பயல் பேசுவான்’ என்று என்னிடம் நீட்டினார். இரண்டு ஒத்திகை நடந்தது, பள்ளியில். மறுநாள் நகராட்சி அரங்கத்தில் எல்லாப் பள்ளி மாணவர்களது கலை நிகழ்ச்சிகளின் ஊடே எங்கள் பள்ளி சார்பில், குழந்தைகள் தின கொண்டாட்டத்தில் நேருவின் வசனம்.
அண்ணன், அக்கா, அம்மா எல்லோரையும் அழைத்துக் கொண்டு என் தந்தை ஆசையாக நகராட்சி அலுவலகத்தின் திறந்த வெளி மேடை எதிரே அமர்ந்திருந்தார், ஊட்டி போனபோது வாங்கிக் கொடுத்த கோட்டை, என் அப்பா அனுமதியோடு, நேரு வேடத்தில் நடிப்பவனுக்கு இரவல் தந்திருந்தேன், நேருவாக நின்றவன் அவன் தான், ஆனால் அவன் அணிந்திருந்த கோட்டும் வசனமும் என்னுடையது படையப்பா படம் வரவில்லை அப்போது. ஓர் அருமையான லட்டு கொடுத்தார்கள், குடும்பத்தோடு பகிர்ந்து கொண்ட இன்பம் சொல்லி முடியாது.
ஆனால், எட்டாம் வகுப்பில் நடித்த நாடகம் பற்றி இப்போது சொல்லியாக வேண்டிய கட்டத்தை எட்டிவிட்டோம்.
ஏழாம் வகுப்பு வரை பெற்றோரோடு வேலூரில் படித்தவன், எட்டாம் வகுப்பிற்குப் பாட்டனார் இருந்த காஞ்சிக்கு இடம் பெயர்ந்தேன், அறிஞர் அண்ணா படித்த பச்சையப்பன் நடுநிலைப் பள்ளியில் வரலாறு புவியியல் ஆசிரியர் தான் நாடகத்திற்கு என்னைத் தேர்வு செய்தார்.
அங்கே போய் நின்றபோது, ‘உன் பெயர் என்ன ?’ என்று கேட்டார். சொன்னேன்.
‘இல்லை, ரஞ்சிதம்’ என்றார், ‘நீ தான் ராணியின் தோழி ரஞ்சிதம், மாண்டவர் மீண்டது நாடகம் முடியும் வரை, ரஞ்சிதம் தான். இப்போ சொல்லு, உன் பெயர் என்ன?’ என்றார். ‘போங்க சார்’ என்றேன். ‘வீட்டில் அக்கா, அம்மா யார் புடைவையாவது எடுத்திட்டு வந்துர்ரா… பொம்பள வேசத்துக்கு ஏத்த எல்லாம் கொண்டு வந்திரு’ என்றார். மனம் போராடியது. ஆனால், நடிப்பதில் இருந்த ஆர்வம், இந்த வாய்ப்பை வீட்டுக் கொடுப்பதாக இல்லை.
வீட்டுக்கு வந்தபோது, எதிர்பாராத விதமாக என்னைக் காட்டிலும் வயது மூத்த அத்தை மகள் ஜலஜா ஊட்டியிலிருந்து வந்திருந்தார். வெட்கத்தோடு அவரிடம் தான் கேட்டேன், ‘சேலை ஒன்று எடுத்து வை’ என்று. வெங்காய நிறத்தில் புட்டா போட்ட வெள்ளைச் சேலையை அப்போதே எடுத்து செட்டாக வைத்துவிட்டு, ‘டேய் டேய் நடித்துக் காட்டுடா’ என்று ஆவலாகக் கேட்க ஆரம்பித்துவிட்டார், மிக அண்மையில் கூட, விகடனில் வந்த கதையை வாசித்துவிட்டுக் கடைசியில் தான் எழுதியது யார் என்று பெயர் பார்த்தேன் என்று என்னை அழைத்து மிகவும் கொண்டாடியவர் அவர்.
அந்த நல்ல நாளும் வந்தது. புடவை, ரவிக்கை எல்லாம் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு மேக்கப் ஆள் எதிரில் நின்றேன். வாழ்க்கையின் முதல் அரிதாரப் பூச்சு. அதன் வாசம் இன்னும் நெஞ்சில். வண்ணப்பூச்சு முடிந்தபிறகு உடைகளை எடுத்துக் கட்டிவிட ஆரம்பித்தார். புடவையைக் கொசுவம் வைத்துக் கையில் லாவகமாக அவர் மடித்த காட்சி இன்னும் மனக்கண்ணில்.
“ஏண்டா தம்பி, எல்லாம் கொண்டு வந்திருக்க, கொட்டாங்கச்சி எங்க, ஸ்த்ரீ பார்ட் போடறே இல்ல?” என்று கேட்டபோது, அப்படியே தாவிக்குதித்து எங்காவது ஓடிவிடலாம் போல் இருந்தது, அதெல்லாம் முடியாதுன்னு அன்னிக்கே சொன்னேனே, எனக்கு வேண்டாம் என்றேன்.
அவர் கொஞ்சமும் அநாகரீகமாக சிரிக்கவோ, என்னை கோபித்துக் கொள்ளவோ இல்லை.
“விட்றா …விட்றா …பக்குவமா சுத்தி, உன்னை அம்சமாக நிறுத்தறேன்” என்று, குஞ்சலம் எல்லாம் வைத்துக் கட்டி, ரஞ்சிதமாக என்னை உருமாற்றினார். அந்த எளிய மனிதர் இப்போது எங்கே இருப்பார், எத்தனை வயதாகி இருக்கும் அவருக்கு, கண்ணில் நீர் துளிர்க்கிறது, இதை எழுதுகையில்.
விகடகவிகளாக இருக்கும் அண்ணனும் தம்பியும் திருமணத்திற்குப் பணம் வேண்டும் என்று ஒரு திட்டம் போடுவார்கள், ராஜா நகர்வலம் வருகையில் அண்ணன் இறந்துவிட்டான் என தம்பி அழுவான், ராஜா, ஆயிரம் பொன் கொடுத்துவிட்டுப் போவார் செலவுக்கு. அப்புறம், ராணி நகர்வலம் வரும்போது, தம்பி இறந்தது போல் நடிப்பான், அண்ணனிடம் ஆயிரம் பொன் கொடுத்துவிட்டுப் போவாள் தேவி. மன்னனும் அரசியும் சந்தித்துக் கொள்ளும்போது, சகோதர்கள் குட்டு வெளிப்பட்டு விடும். இருவரும் போய் நிற்கும்போது அண்ணன் தம்பி இரண்டு பேரும் கீழே இறந்ததுபோல் கிடப்பார்கள். ரஞ்சிதம் தான் யோசனை சொல்வாள், யார் முதலில் இறந்தாரோ அவருக்கு இன்னும் ஒரு நூறு தங்க நாணயம் என்று ராணியைச் சொல்ல வைப்பாள், இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு உயிரோடு எழுந்து நின்று, நான் தான் முதலில் செத்தேன் என்பார்கள். அது தான், மாண்டவர் மீண்டது.
நாடகம் எல்லாம் முடிந்து பழைய உடைக்கு மாறிக்கொண்டு, பையில் உடைகள் பத்திரப்படுத்திக் கொண்டு நடக்கத் தொடங்கினேன் வீட்டை நோக்கி. ஊர் உறங்கத்தொடங்கி விட்டிருந்தது. காஞ்சிபுரம் எப்போதும் எட்டு மணிக்கே தூங்கப் போகும் ஊர் என்பார்கள் அந்நாட்களில்.
விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் கடந்து, செட்டித் தெருவில் நடந்துவருகையில் ஒரு பெட்டிக்கடையில் மட்டும் வெளிச்சம் இருந்தது. கடைக்காரர் எதிரே அவர் நண்பர் போல இன்னொருவர். இருவரும் ஏககாலத்தில் என்னைப் பார்த்ததும், ‘என்னடா வேஷம்…இங்கே வா…பள்ளிக்கூடத்தில் நாடகத்தில் நடிச்சியா?’ என்று கேட்டனர். நான் அங்கிருந்து எப்படி தப்பித்து நகர்வது என்றிருந்தேன். ‘ஒரே ஒரு வசனம் எங்களுக்காகச் சொல்லுடா, நடிச்சுக் காட்டு தம்பி…டேய்..’ என்று கெஞ்சிக் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
‘அய்யா நான் போகணும், பாட்டி காத்திருப்பாங்க வீட்டுல’ என்று அடம் பிடித்தும் விடவில்லை. ஒரு மூன்று நிமிட நேரம் நடித்துக் காட்டியதும் ஒரே குஷி இருவருக்கும்.
‘டேய், பெரிய ஆளா வருவடா தம்பி’, என்று சொல்லிக் கடையில் இருந்து இரண்டு வாழைப்பழங்கள் பிய்த்து என்னிடம் தந்தார், ‘வேறு ஏதானும் சாப்பிடறியா தம்பி’ என்று கேட்டார், ‘இல்லைங்க இப்போ எதுவும் சாப்பிட முடியாது,முகம் பூரா சாயம்’ என்று சொல்லிப் புறப்பட்டு வேகமாக, தெற்கு மாட வீதி போய்ச் சேர்ந்தேன்.
மொத்த வீதியும் இருளோ என்றிருந்தது. நீள முன்கட்டுத் திண்ணையில் இருட்டின் நிறத்தோடு ஒன்றிப்போயிருந்த பாட்டி உற்றுப் பார்த்து எழுந்து நின்றாள்…
“என்னடா இது இத்தனை நேரம்….குழந்தையை காணோம்னு காத்து உட்கார்ந்து இருக்கேன்” என்றாள்.
“ஆண்டு விழாம்மா… சொன்னேனே காலையில…இது, வர்ற வழியில் கடையில் ஒருத்தர் பாராட்டிக் கொடுத்த பரிசு, நாடகத்தில் நல்லா நடிச்சேன்மா.. ” என்று வாழைப்பழங்களை அப்படியே அவளிடம் கொடுத்தேன்.
“என்னது…அடடா….இரு இரு..இங்கேயே இரு” என்று வேகமாக உள்ளே சென்று, பூந்தொடப்பக் குச்சிகள் கொளுத்தி எடுத்து வந்து, இந்தப் பக்கமா நில்லு என்று ஒரு திசையில் நிறுத்தி,
“உற்றார் கண்ணு ஊரார் கண்ணு என் கொழந்த மேலே பட்ட எல்லாக் கண்ணும்….:” என்று ஏதோ முணுமுணுத்தபடி சபித்து மூன்று முறை சுற்றிப்போட்டு, அதிலிருந்து தீயின் கரி எடுத்து நெற்றியில் இட்டாள்.
, ‘பாட்டி அரிதாரம் பூசி இருக்கு….தேங்காய் எண்ணெய் போட்டால் தான் போகுமாம், மேக்கப்காரர் சொன்னார்” என்றேன், அதெல்லாம் அவள் லட்சியம் செய்யவில்லை. என் செல்லமே என்று அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டாள்.
‘பேத்தி என்றாலும் நீயும் என் தாய்’ என்ற இடம், பூவே பூச்சூட வா பாடலின் அசத்தல் வரி. பாட்டி என்றாலும் அவளும் என் தாய். அரிதாரப் பூச்சு இல்லாத அன்புள்ளம்.
*************

இவ்வளவு நீளம் எழுதினீர்களே, அந்தப் பெண் வேஷம் புகைப்படம் வெளியிடாமல் போனது நியாயமா?
அன்றே தொடங்கி விட்டது படைப்புலக பிரம்மா வேணுகோபாலன் சரித்திரம்.. அனைத்தையும் நினைவில் வைத்திருந்து எங்களுக்கு அள்ளி அள்ளித் தரும் அட்சய பாத்திரம்.. வாழ்க..வளர்க..
கதை சொன்னீர், கவிதையும், கட்டுரையும் அடுத்து சொனீர்கள்.
ஆனால், நடிகனை வெளிச்சத்திற்கு கொண்டு வர ஏன் இவ்வளவு நாட்கள் ?
அறிதான அரிதாரம்!
இன்பம் நினைவுகளை
கிள்ளி விட்ட அன்பின்
பூச்சு (பூட்டு )!
Very interesting.. விளையும் பயிர் முளையிலேயே தெரிந்துள்ளது
வகை வகையான திண்பண்டங்கள், எதுவும் திட்டவில்லை, ஐந்தாம் வகுப்பு தொடங்கி…. தொடங்கி… தொடங்கியது. நினைவு அவ்வளவு கூர்மை. பார்க்கத்தான் சாது.. எழுத ஆரம்பித்தால் எடுக்க எடுக்க வரும் அட்சய பாத்திரமாக… ராய செல்லப்பா சார் கேட்ட பெண்ணாக வேடமிட்ட புகைப்படம் எங்கே?
வகை வகையான திண்பண்டங்கள், எதுவும் திகட்டவில்லை, ஐந்தாம் வகுப்பு தொடங்கி…. தொடங்கி… தொடங்கியது. நினைவு அவ்வளவு கூர்மை. பார்க்கத்தான் சாது.. எழுத ஆரம்பித்தால் எடுக்க எடுக்க வரும் அட்சய பாத்திரமாக… ராய செல்லப்பா சார் கேட்ட பெண்ணாக வேடமிட்ட புகைப்படம் எங்கே?
கதையில் வரும் நிகழ்ச்சிகள் உங்களை செதுக்கியெடுத்த பெரியவர்கள் உள்ள மரியாதையையும் வெளிப்படுத்துகிறது. தூறலாக நகைச்சுவை கதையெங்கும். படிக்க சுகம்.
மூன்று தமிழ் தோன்றியது உன்னிடமோ – நீ
மூவேந்தர் வழிவந்த மன்னவனோ…
ஒரு நூல் ஆக வருமளவிற்கு என்னிடம் தகவல்கள் உண்டு! சிறகில் நாடகச் சிறப்பிதழ் போடலாமா எனும் உந்துதல் உருவாக்கும் கட்டுரை 👏