மார்கழிக் கவிதைகள்: 2, 3/ மீ. விசுவநாதன்

“மனித தெய்வம் இவர்கள்”

எல்லைக் காவல் தெய்வம் – அவர்
எங்கள் உயிர்க்கு நண்பன்
வில்லை ஏந்தும் ராமன் – இவர்
வீரக் குருதி வாசன்

சிவனின் சிரசு கங்கை – இவர்
சிறப்பைச் சொல்லிப் பாயும்
கவசம் பூண்ட செங்கை – தன்
கடமை செய்து ஓங்கும்

பனியும் வெயிலும் மழையும் – இவர்
பணிக்கு முன்பு தூசு
மனித தெய்வம் இவர்கள் – இவர்
மனத்தில் இல்லை மாசு.
(17.12.2021)

மார்கழிக் கவிதைகள்: 3

“வீட்டுக்கு ஒருபிள்ளை வாங்க”
(மீ.விசுவநாதன்)

வீட்டுக்கு ஒருபிள்ளை வாங்க – தேசம்
விண்டு போகாது காக்க
நாட்டுக்கு நல்லவிதை தாங்க – எந்த
நாளும் தேக்குமரம் நீங்க

பகைமிக்கச் சூழலிலும் நெஞ்சில் – துளி
பயமும் கொள்ளாத நீங்க
புகையோடு குண்டுவெடித் தாலும் – உயர்
புகழால் நின்றுநிலைப் பீங்க

குடும்பத்தை விட்டுவெகு தூரம் – வந்து
கொடும்போர் வெற்றியடை வீங்க
படும்துன்ப நாள்களையே நீங்க – தேசப்
பணியாய் எண்ணிமகிழ் வீங்க

தங்களுக்கு ஈடாக இங்கே – இறைத்
தன்மை ஒன்றேதான் உண்டு
உங்களது பாதங்கள் தொட்டு – என்
உள்ளே பூசித்தல் தொண்டு.
(18.12.2021 22. 49 pm)