மரமும் இலையும்/லாவண்யா சுந்தரராஜன்

அந்த புகைப்படத்தில்
வரையப்பட்ட மரத்தின்
வசந்தகாலம் நீங்கிய பின்னர்
தரை நோக்கி உதிரும் இலை
பறவையாகி
மிதந்தும் பறந்தும் உயிர்த்திருந்தது

*

மொட்டை மரம்
ஏகாந்த காகம்
தரையில் ஒற்றை இலை படகு
காற்றே மழையே
நீங்கள் யாரும் வரவேண்டும்
அந்த இலையே
அம்மரத்து வசந்தத்தின்
இறுதி சாட்சி

*
இலை இல்லை இல்லை
மரத்தின் நீட்சி
தரையில் கிடந்து தவிக்கும் போது
உயிர் துடிக்கிறது
*
மழை பொழிவில்
உடல் நனையும் கிளை மரம்
இல்லாமல் போய்விட்ட
இலைத்துளிகளுக்காக அழுகிறது
மழைநின்ற பின்னும்
*
இலை பயணித்த தேசத்தில்
எங்கேயுமில்லை தாய் மரம்
ஏந்திக் கொள்ளவும் எவரும் இல்லை
சாலையில் கிடந்து
இதயம் போல் துடிக்கிறது
அச்சிறு இலைச்சருகு
*
கடைசி இலையை
பிடிவாதமாய் காலம்
உதிர்ந்த போது
இல்லாத தன் கைகளை
நீட்டி நெஞ்சிலடித்து
புத்திர சோகத்தில் கதறிய தாய் கோலம்
பூண்டது மரம்

2 Comments on “மரமும் இலையும்/லாவண்யா சுந்தரராஜன்”

  1. அழகிய சிங்கர்
    இது நான் எழுதிய கவிதை இல்லை.
    தவறைத் திருத்துங்கள்
    லாவண்யா சத்யநாதன்.
    இபோதுதான் பார்த்தேன

Comments are closed.