
“நெறிகள் தவறா ஆசான்“
கல்விக் கூட மெங்கும் – நன்கு
கற்ற ஆசான் வேண்டும்
சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் – ஞானச்
சோதி போல வேண்டும்
புதிய புதிய பாடம் – கற்றுப்
பொலியும் அறிவு வேண்டும்
நிதியை மட்டும் நோக்கும் – எண்ண
நினைவை நீக்க வேண்டும்
எளிய கதைகள் மூலம் – வாழ்வின்
எல்லை என்ன வென்று
நெளிவு சுளிவு யாவும் – சொல்லும்
நேர்த்தி கொள்ள வேண்டும்
அச்சம் போக்க வேண்டும் – மனம்
அடக்கும் வழியைக் காட்டும்
உச்சம் தொட்ட கல்வி – தானே
உணர்ந்து புகட்ட வேண்டும்
பெண்கள் வகுப்பு என்றால் – ஆண்கள்
பெரிய காவல் என்னும்
எண்ணம் வளரும் வண்ணம் – ஆசான்
இருந்து காட்ட வேண்டும்
அறிவு வேட்கை கொண்டு – யாவும்
அளக்கும் திறமை வேண்டும்
நெறிகள் தவறா ஆசான் – என்ற
பெயரால் நிலைத்தல் வேண்டும்.
(02.01.2022)
