
அதனதன் போக்கிலே
அவையவை நடந்திடும்
அதிசய உலகமிது!
எவனவன் சொல்லையும்
எவருமே கேட்காமல்
நடப்பவை நடக்கிறது!
கணித்திட இயலாமல்
கடும்மழைப் பொழிந்து
காட்டாறு வழிகிறது!
பிணிநுண் தொற்றது
உலகெங்கும் பரவிடும்
பிரளயம் தொடர்கிறது!
மரபுகள் தகர்த்திடும்
புதுமையின் பிடியினில்
மாயையில் சுழல்கிறது!
வரையறை வீணெனும்
உரிமைகள் தகர்த்திடும்
சுதந்திரம் சிரிக்கிறது!
கட்டுகள் உடைத்திடும்
மெட்டுகள் அமைத்ததில்
சொல்நயம் சிக்கியது!
வட்டிக்கு வட்டியைக்
கட்டவும் நிதியின்றி
திட்டங்கள் வரைகிறது!
நிதி வசம் இல்லாமல்
இலவசம் வழங்கிடும்
அதிசயம் தொடர்கிறது!
நியாயங்கள் பாராத,
நீதியின் தாராள,
வியாபாரம் நடக்கிறது!
இயற்கையின் வேர்களை
செயற்கையின் மீறல்கள்
அரித்திட முயல்கிறது!
‘மலர்’ எனச் சொன்னார்!
மணத்தைப் பரப்பி விட்டு
மறுநாள் சருகாய்க் கிடப்பதோ?
‘சுகம்’ என அழைத்தார்!
சுகித்தவர் திளைத்திட,
படைத்தவர் வதங்கித் துவள்வதோ?
சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரையலாம்!
அவமதிப்பவர் மனந்திருந்தனும்!
ஒருவரின் உடற் சுமை
மற்றயோர் சுமக்க
ஒருநாள் இங்கே நிச்சயம்!
ஒருவரின் உயிர்ச் சுமை
ஒருவர்தான் சுமக்கணும்!
உலகியல் தன்னை உணருவோம்!
