கொண்டாட்டம்/ மதுவந்தி

                 நெடுஞ்சாலையோ,பேருந்தோ
                 பார்க்க வேண்டுமெனில் 
                 வெகு தூரம் நடந்தால்தான். 
                 பெயர் சொன்னால் கூகிள் தவிர 
                 வேறெங்கும் தெரியவராத 
                 சிற்றூரில் பள்ளியாசிரியர்
                 வேலையென்றதும் 
                 மனசு கொஞ்சம் துவண்டது. 
                 ஆசிரியரெனில் இன்னும் 
                  மரியாதை வைத்திருக்கும்
                  மக்களைக் கண்டதும் 
                  மாறிவிட்டது எல்லாம். 
                  இன்னமும் கற்றுக்கொள்ள 
                  ஆர்வமிருக்கும் பிள்ளைகளைப் 
                  பார்த்தவுடனே, விரட்டியடித்தால் தவிர,
                  பிரிவதில்லை இந்த ஊரையெனத் 
                  தீர்மானித்து ஆனது வருடங்கள் சில. 
                   இந்த வருடம் சுதந்திர தினம் 
                   கொண்டாட வேண்டாமென 
                    அரசாங்க அறிக்கை ஆணையிட,
                   என்ன செய்வதென யோசித்தேன்
                   வீடு வீடாய்ச் சென்று 
                   தேசியக் கொடியும்,ஆரஞ்சு மிட்டாயும்
                   கொடுக்கலாம் பிள்ளைகளுக்கு என 
                    முடிவெடுத்தேன். 
                    நினைவுகளும், அடையாளங்களும்தானே 
                    கொண்டாட்டம். 
                    கொடுப்பது கையில் வந்ததும்,
                     முகம் பூரா வெளிச்சமாய் 
                     பிள்ளைகள் கொண்டாடுவதை
                     ரசிக்கத் தயாரானேன்.