கம்பனைக் காண்போம்—23/வளவ. துரையன்

                         
                             பலவகைக்கண்கள்                 

படைஎழ உழந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும்
இடறிய பரம்பில் காந்தும் இனமணித் தோகையும் நெல்லின்
மிடைபசுங் கதிரும் மீனும் மென்கழைக் கரும்பும் வண்டும்
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ      [39]

[படை=கலப்பை; பணிலங்கள்=சங்குகள்; காந்தும்=ஒளிவிடும்; கடைசியர்=உழத்தியர்; போது மலர் அரும்ப இருக்கும் நிலை]

முகத்தில்தான் கண்கள் இருக்கும். கோசல நாட்டில் பல இடங்களில் கண்கள் ஒளிவீசும் என்கிறான் கம்பன். ஒளிவீசுபவை எல்லாமே கண்கள்தாம்; அதுமட்டுமன்று; கண்களுக்கு அழகே ஒளியோடு இருப்பதுதான். கோசல நாட்டில் பல இடங்களில் பல வகைக் கண்களைக் காட்டுகிறான்.
கலப்பைகள் உழுவதால் நிலத்தின் மேலே எழுந்து இருக்கிற தங்கம், சங்குகள் ஈன்ற முத்துகள், பரம்படித்த வயல்களில் ஒளிவிடும் இரத்தினங்கள், நெல்களில் நிறைந்துள்ள பசுமையான கதிர்கள், மீன்கள், உழத்தியரின் முகங்கள், மலர்ந்து கொண்டிருக்கின்ற அரும்புகள் ஆகியன கண்களைப் போல மலர்ந்து ஒளிவீசுகின்றனவாம்.