
ஆகாயத்தில் எத்தனையோ
கோடிவகை மேகங்கள்
நிலையில்லாமல்
அங்குமிங்கும் திரிந்துகொண்டும்
மறைந்து கொண்டும்
மீண்டும் முளைத்து உருண்டு பெருகி
நகர்ந்தபடித்தான் இருக்கிறது
இரவில்
வெகு தூரத்தில்
பொடிப்பொடியாய் நட்சத்திரக் கூட்டம்
மின்னி மின்னி
தன்னைக் காட்டிக் கொண்டாலும்
காலையில்
ஏனோ
யாருக்கோ பயந்தோடி
ஒளிந்து கொள்கின்றன
பூமிப் பூச்சி
சூரியனைச் சுற்றிவந்து
இரவு பகல் என்று
ஒளிப் பந்தாடி
காலக் கணக்கைக்
கிறுக்கி வருகிறது
இப்படித்தான்
இறைவனுக்குள் நானும்
எனக்குள் இறைவனுமாய்
பிரபஞ்சத்தில்
கண்ணாம்பூச்சி
ஆடிக் களிக்கிறோம் தோழரே.
(04.01.2022 18.36 pm)
