சில கவிதைகள் /ப.மதியழகன்

நீர்

பெருமழையில் வீதியில்
கால் பதித்தேன்
பாதக்குழி தண்ணீரால் நிரம்பியது!

திருட்டு

எங்கிருந்து
வண்ணங்களைத் திருடியது
ஊதா நிற பட்டாம்பூச்சி!

கல்லறை

அவர்கள் உறங்கட்டும்
நிம்மதியில்லாத உலகத்திற்கு
அவர்களை திரும்ப அழைக்காதீர்கள்!

வைகறை

ஒவ்வொரு பொழுதும்
குயிலின் சோக கீதத்தைக்
கேட்டபடியே விடிகிறது!

தாலாட்டு

வயலோர மரத்தில் தூளி
குழந்தை தூங்குகிறது
காற்றின் தாலாட்டைக் கேட்டபடி!

சத்தம்

இரவு
நிசப்தமாக இல்லை
சுவர்க்கோழிகள் சத்தம்!

தும்பி

முள் குத்திய காலலோடு
வேலியோர தும்பியைத் துரத்துகிறான்
சட்டை அணியாத சிறுவன்!

தூர்

கிணற்று வாளி தண்ணீரோடு
மேலே வந்தது
எப்போதோ தொலைந்துபோன பித்தளை சொம்பு!

நிலா பார்த்தல்

நிலா பார்த்தலில்
மறந்துவிடுகிறோம்
அவரவர் வயதை!

மின்மினி

அண்ணாந்து பாருங்கள்
நட்சத்திரங்கள் அல்ல
மின்மினியே நகருகிறது!