தொலைந்துபோகிறேன்

செல்விபிகாஷ்🌹

ஏதோ ஒன்றின் நிசப்த சிந்தனையில், எண்ணம் ஏதுமற்ற வெறுமைப்பொழுதுகளில்,

“காகிதத்தை எப்படி நிரப்புவது?” என்று எழுதுகோலைக் கேள்விகேட்டபடி, பார்வையைத் திருடனாய் ஒளிந்து நகர்த்திய ஒரு தந்திரப்பொழுதில்,

வாழ்க்கைக்காய், வயிற்றுக்காய் உறவுக்காய்,உணர்வுக்காய்,
மணித்துளிகளை விழுங்கி,காலத்தைத்தின்று குவித்த சில ஓய்வற்றப்பொழுதுகளில்

கண்களைக் கசக்கி இதயத்தைப் பிழிந்து சிந்தனையைத்தூண்டிப்பார்த்து சலனமற்றிருந்த ஏமாற்றப்பொழுதுகளில்

பிரபஞ்சப்பெருவெளியின் தோற்றப்பொருள்யாவும் கருப்பொருளாக மாற மறுத்த ஒரு சோதனைப்பொழுதில்

தொலைந்துபோகிறேன் நான் எல்லாப்பொழுதுகளிலும் வார்த்தைகளற்று சிந்தனை உதிர்வுகளற்று எனக்குள்ளே நான்

கவிதைகள் தேடிக்கொண்டிருக்கின்றன எனை மீட்டெடுக்க