கம்பனைக் காண்போம்–25/வளவ. துரையன்

                      


                      பெண்ணாசை விடுவாரோ

       பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட
       கண்கைகால் முகம்வாய் ஒக்கும் களைஅலால் களைஇ லாமை
       உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பர்
       பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால்      [42]

[மிழற்றும்=பேசும்; கடைசியர்=உழத்தியர்; மள்ளர்=உழவர்; நேயம்=ஆசை]

  உழவர் கள் குடிக்கிறார்கள்; அது அவர்கள் வாய்க்கடைசியில் வழிகிறது. அத்துடன் அவர்கள் வயலில் களை எடுக்கப் போகிறார்கள். அந்த வயலிலே மலர்களாகிய களைகள்தாம் இருக்கின்றன. அம்மலர்கள் இனிமையான இசை போலப் பேசுகின்ற சொற்களை உடைய உழத்தியரின் விரிந்து நீண்ட கண்களையும், கைகளையும், முகங்களையும், வாய்களையும் ஒத்திருக்கின்றன. அவற்றைப் பறிக்கப்போகையில் உழத்தியரின் நினைவு வந்து அம்மலர்களைப் பறிக்காமல் உலாவி நிற்பார்களாம். கள் குடிக்கும் கீழ்மக்கள் பெண்கள் பால் வைத்த ஆசையிலிருந்து தப்புவார்களோ? பெண்களின் அழகைச் சொல்வதோடு இப்பாட்டில் கீழ்மக்கள் எப்பொழுதும் பெண்ணாசையை விடமாட்டார்கள் என்பதும் சொல்லப்படுகிறது.