
நம் மரபில் தீபத்திற்கு தனி மரியாதை உண்டு. தீப மங்கள ஜோதி நமோ நம’ என்று பாடுகிறார் அருணகிரி நாதர். அகண்ட தீபம், நித்ய தீபம் என்று கொண்டாடும் நாம், தீப வரிசை என்றும், கார்த்திகை தீபம் என்றும் மகர ஜோதி என்றும் வழிவழியாகக் கொண்டாடுகிறோம். தினமும் ‘அக்னி ஹோத்ரம்’ செய்யும் சில வீடுகள் இன்னமும் இருக்கின்றன. யாக அக்னியை ‘வேதத் தபால்காரர்’ என்று சொல்வதுண்டு. நாம் கொடுக்கும் அவிஸை அக்னி அந்தந்த தேவர்களிடம் சேர்த்துவிடுகிறார் என்பதால் அந்தப் பெயர். என்றுமே அழியாத ஒரு சுடரை அதன் ஒளியை, அதன் கீழே படியும் இருளை, அதன் அசைவை, அதன் இயல்பை மிகக் கச்சிதமாக மௌனி இக்கதையில் வெளிப்படுத்துகிறார்.
இச்சிறுகதை சொல்வது மிகக் கவனமாக செவி மடுக்க வேண்டிய ஒன்று. இதில் ஏராளமான படிவங்கள் காணக் கிடைக்கின்றன. மூவர் மட்டுமே அடங்கிய ஒரு கதையில் கோயிலும், லிங்கமும், யாளியும், நிழல்களும், சில மனிதர்களும் வருகிறார்கள் மௌனி, பிரமிள் சொல்வதுபோல் கனமான விஷயங்களை ஏற்க மறுக்கிற மெலிந்த சொற்களைக் கொண்டு அதகளம் செய்திருக்கிறார். அவரது கதைகள் பெரும்பாலும் தன் அகங்காரத்தையும் சுய பரிதாபத்தையும் ஒருங்கே காட்டவல்லவை. இதில், மனோரீதியான உலகத்தை உண்மையென நம்பி வாழும் கதாநாயகன். அவனும் கூட தன் 18 வயதில் தன்னுடைய தோற்றத்தில் கர்வம் கொள்கிறான். எடுப்பான மூக்கு, மெலிதான உதடு, ஒழுங்கான பல்வரிசை, படிய மறுக்கும் கிராப் என்று இளமையின் கோலம். அவன் 9 வருடங்கள் கழித்து தன் வீட்டின் திறந்த ஜன்னலின் வழியே பார்க்கும் மரத்துடன் பல கேள்விகளை ஒப்பிட்டு கேட்டுக்கொள்கிறான். இப்போது அந்தப் பழைய பொலிவு தோற்றத்தில் இல்லை. கண்கள் மட்டும் உன்மத்தத்தில் ஜொலிக்கின்றன.
கதாநாயகனின் நண்பன் இதில் கதைசொல்லி. அவர் பார்க்க வரும்போது மரத்தை பார்த்துக்கொண்டிருக்கும் நண்பன் தீவிர மௌனத்தில் யோசனையில் இருப்பதாக நினைத்து வாயிலில் நிற்கிறார். ஆனால் அவன் இவர் வருவதை கவனித்து விடுகிறான். உள்ளே அழைத்து தன்னுடைய நாற்காலியில் உட்கார வைத்து அந்த மரத்தை பார்க்கச் சொல்கிறான். அதன்மூலம் அவன் மனதில் ஓடும் எண்ணங்களை தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போல் இவருக்கும் பகிர்கிறான்.
இலை உதிர்த்த பட்ட மரம். அவனுக்கு ஆகாயத்தில் இல்லாத பொருளைத் தேடும் ஒன்றாகத் தோன்றுகிறது. ஆனாலும் அது தலையை அசைத்து ஆடுகிறது; மேலைக் காற்று கொண்டு வந்த காதல் முகந்த மேகம் அந்த மரத்தில் தங்க, தாங்காது அது தள்ளாடுகிறது. கதாநாயகனின் குணச்சித்திரத்தின் மிகச்சிறந்த படிமம் இது. அவன் கேட்கிறான் ‘விரிக்கப்பட்ட சாமரம் போன்று, ஆகாயத்தை மேகங்களில் இருந்து சுத்தப்படுத்துகிறதா இது அல்லது தளிர்க்கும்பொருட்டு மழைத்துளிக்காக ஏங்கும் ஏக்கமா இது?
இந்த எண்ண ஓட்டம் கதாநாயகன் இடத்தில் அதி தீவிரமாக இருக்கிறது. கதைசொல்லிக்கோ சங்கடமான எண்ணங்களை தோற்றுவிப்பதாக இருக்கிறது. இவர் பார்ப்பதோ இலை உதிர்ந்த பட்ட மரம்; பக்ஷிகள் ஒருசேர வந்தமர்ந்து மரணம் போன்ற ஒலி எழுப்பி பின்னர் புத்துயிர் பெற்று மரக்கிளைகள் அசைவதைப் போல பறந்து செல்கின்றன. இக்காட்சி உயிர், பிறப்பு, இருப்பு, ஓசை, அமைதி, மரணம், மீண்டும் உயிர் என்ற சுழற்சியைக் காட்டுவதாக இருக்கிறது. மௌனியின் பலம் தத்துவத்திலும் இலட்சியத்தியிலும் மட்டுமே இருப்பதான ஒன்றல்ல. அது மனோ விகாரங்களை, அவரது நுண்மையான மொழியில் வசீகரித்து வாசகன் ஈர்க்கிறது அவர் எழுத்துக்கள் கலங்கலாக மேலே தெரிந்தாலும் அடியில் ஆழ்ந்த தெளிவும் உள்ளது.
கதாநாயகனின் 18 வயதில் கதைசொல்லியுடன் கோயிலுக்கு போயிருந்த நேரத்தில் 13 வயது பெண் ஒருத்தியை பார்க்கிறான். அவளைப் பின்தொடர்ந்து சன்னதி வரை செல்கிறான். அவள் ஈஸ்வரன் சந்நிதியில் கண்மூடி தியானத்தில் இருக்கும்போது கூப்பிய அவள் கரங்களின் ஊடாக சன்னிதானத்தில் சுடரைப் பார்க்கிறான். அவள் தியானத்தில் இருந்து விடுபட்டு இவனை பார்த்தபோது இவனுள் ஒரு பொறி திறக்கிறது. அவள் காது கேட்க ‘உனக்காக நான் எது செய்யவும் காத்திருக்கிறேன் எதையும் செய்ய முடியும்’ என்று சொல்கிறான்.
ஆனாலும் மரபார்ந்த மனம், லிங்கக் கடவுள் முகம் சுளித்துப் பார்ப்பதாகவும், கல்யாளி பின்னங்காலால் எழுந்து முறைப்பதாகவும் நினைக்கச் செய்கிறது. . கால் சதங்கை ஒலிக்க அவள் நிசப்தத்தை கலைத்துவிட்டு அந்த சன்னிதானத்தை விட்டு போகிறாள். அந்தரங்க ஆழ்ந்த அனுபவத்தின் பேரின்ப வளர்ச்சியை கோயில்கள் சிறப்பிக்கின்றனவோ என அவன் நினைக்கிறான்.
கொத்து விளக்குகள், அதன் ஒளியும், பாதி இருளும் கோயிலில் நடமாடும் பக்தர்களின் உருவங்களும் நிழல்கள் போலக் காணக் கிடைக்கும் அந்த போதத்தில் அவன் மனம் நினைக்கிறது ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ இந்த உலகை ‘சாயா லோகம்’- நிழல் உலகம் என்று வேதாந்திகள் சொல்வார்கள். ஆதிசங்கரரின் அத்வைதம் ‘அனைத்தும் பிரதிபலிப்பே.; உண்மையல்ல. உண்மையில் இருப்பது ஒன்றே’ என்று சொல்கிறது. மௌனி ‘எவற்றின்’ என்று எழுதியுள்ளதைக் குறித்து ஒரு சுவாரஸ்யமான பேச்சு உண்டு ஒரு ரசிகர் மௌனியிடம் கேட்டாராம்: ‘எவைகளின் ‘என்றுதானே வரவேண்டும், எவற்றின் என்பது சரி இல்லையே என்றாராம். எவற்றின் என்பதன் ஒலிநயம் அந்த எண்ணத்தின் கனத்திற்கு மிகவும் அவசியம் என்பதை மௌனி விளக்கியதாகச் சொல்வார்கள்.
கதாநாயகனும் நண்பனும் வெள்ளித் திட்டாக நிலா படிந்த வில்வமரத்தடியில் நிற்கையில் அவள் ‘பின் தொடர்’ என்று சொன்னதாகவே இவன் நினைக்கிறான் ஒரு வெளவால் பறக்கும் ஒலி காதில் சிரித்து மனதில் மரண பயத்தை கொண்டு வருகிறது. அதுவும் எப்பேர்ப்பட்ட வெளவால்? பகல் என்று அறியாது தலைகீழாகப் பறக்கும் ஒரு உயிர். திரும்பிப் பார்த்து அவள் சிரிக்கையில் வருத்த வசீகரம் எழும்புகிறது. நிசப்தத்தில் தனிமையாக ஒரு சுடர் விளக்கு, உலகில் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அனந்தத்திலும் உலகின் அவியாத ஒளியை விட்டுச் சென்றது போன்றே மறைவும் தோற்றமாய் தீபம் தரிசனமாகிறது. அது அவனுள் எரிந்த ஒளியை நிமிர்ந்து ஜொலிக்க வைக்கிறது. காலம் அந்தத் தருணத்தை அப்படியே பதித்து விட்டது அவன் மனதில். அவன் அதற்குப் பிறகு 9 வருடங்கள் கோயிலுக்கே போகவில்லை. அவளை அவன் மீண்டும் சந்திப்பது அதே கோயிலில் தான். அவளின் நாகரிக தோற்றம் இவனின் மன மாற்றத்தால் இவனுக்கு ஏற்புடையதாக இல்லை. முன்பு அவனுக்குப் பிடித்திருந்த அவனது நாகரீகத் தோற்றம் இப்போது அவனிடத்தில் இல்லை. ஒருவிதத்தில் மனதில் படிந்த சித்திரம் குலைவதை நாம் விரும்புவதில்லை. ஆனாலும் அவள் தியானத்தில் தன்னை மறந்து இருக்கையில் அத்தனை பூச்சுக்களும் உதிர்ந்து அவளை முன்னைப்போல் பார்க்கிறான். ஆன்மீகம் அல்லது பக்தியின் வலிமையை மௌனி காட்டும் இடமிது. தியானம் முடிந்து கண் திறக்கும் அவள் அவனைக் கண்டு கொள்கிறாள். அவளது பார்வை அந்தத் தூணைத் துளைக்கிறது.. ஒரு யாளி கூத்தாட மற்றொன்று குனிந்து விழித்துப் பார்க்கிறது. தாழ்ந்த இவன் முகம் நிமிர்கையில் இரு மணி சொட்டுக்கள் அவள் விழிகளில் இருந்து விழுகின்றன..
உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுவதற்கு முன், அவள் சொல்வது என்னவென்று புரிந்து கொள்ளும் முன், அவள் போய் விடுகிறாள். ‘விதியின் நிழல் நான்; என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப் போகிறாய் ‘ என்று அவள் உணர்த்துவதாக இவன் எடுத்துக்கொள்கிறான். இந்த இடத்தில் ராபர்ட் பிரவுனிங் அவர்களின் ஃபோர்ப்ரியா கவிதையை நாம் நினைத்துக் கொள்ளலாம் அதில் காதலின் உச்சத்தில் காதலியின் பொன்னிற கூந்தலால் அவள் கழுத்தை வளைத்து நெறிக்கும் காதலன், அவள் கண்களில் தன்பால் அவளுக்கு உள்ள அன்பை தெரிந்து கொள்கிறான். இது அறிவுக்கு அப்பாற்பட்டு மனம் உணரும் ஒரு வசீகர உன்னதம். துணுக்குற வைக்கும் இத்தகைய கற்பனைகள் ஒரு தருணத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பனவே அன்றி கொலையின் புகழ் பாடுவன அல்ல.
வரம்புகள் கடந்த விஷயங்கள் எழுத்தில் முழுமை பெறுவதில்லை. லாசராவின் மொழியில் சொல்லப் போனால் பாஷையே பரிபாஷை ஆகிவிடுகிறது. இந்தக் கதாநாயகன் எங்கோ போய் விடுகிறான் எங்கே? எங்கே போகிறான் என்று யாருக்குத் தெரியும்? கற்ப்லகையில் குழந்தகள் இட்ட புள்ளிகள் போல நக்ஷத்ர வானம் கதை சொல்லிக்குத் தென்படுகிறது. ஒருக்கால் மேலே சுட்டும் விரல்கள், அதற்கு உரிய கவனத்தைப் பெற்றும் பெறாமலும் அந்தகாரத்தில் மூழ்கி அவனைத் தேட நம்மை ஊக்குவிப்பதை போல அவனைத் தேடிப் போய் இருக்கலாம் அப்படி ஒருவன் இருந்தால்!
மனம் இசைந்த பொருள், காட்சி, உயிர் எதுவானாலும் பிரிய நேரிட்டால் உள்ளம் துயர் அடைகிறது உயிர்வாழும் உடல் பெண்ணோ ஆணோ எதுவாக இருந்தால் என்ன? ஆத்ம சம்பந்தம்தான் பிணைப்பை உண்டாக்குகிறது.
மௌனியின் கதைகள் நிச்சயமற்ற வாழ்க்கை, நிலையற்ற உறவு, மரணம் உருவாக்கும் பொருளின்மை ஆகியவற்றை சுற்றிச் சுற்றி வரும் . கற்பனாவாத ஆங்கிலேய கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ், கவிதையில் சொன்னதை, கதை கவிதையாகச் சொன்னவர் மௌனி. தனக்கு ஒரு முன்னோடி என்று அவர் யாரையும் சொன்னதில்லை
அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். அவரைப்போல் எழுதுபவர்கள் பின்னரும் அனேகமாக இல்லை. தனிமையை சொன்ன கதையாளி தனித்தவர் தான்.
