இனிக்கும் தமிழ் – 82/ – டி வி ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி:-

சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் பெருந்தமிழறிஞர்க்கும் உள்ளூர்த்
தமிழ்ப்புலவர் ஒருவர்க்கும் இடையே நிகழ்ந்த அறிவுப்போட்டி. இதன்படி
திருச்செந்தூர்க் கோவிலின் வெளிப்பிரகாரத்தை மூன்றுமுறை
சுற்றிவருவதற்குள் உதடு ஒட்டாமலும், ஒரே சொல் மடக்கி மடக்கி வருமாறும்
ஈற்றடி அசையோ, சீரோ அடுத்தபாட்டின் முதலசையாகவோ சீராகவோ வருமாறும்
முப்பது பாடல்கள் பாடுதல் வேண்டும் என்பதாகும். சிவப்பிரகாச சுவாமிகள்
தான் வெற்றி பெற்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
அதில் ஒன்று
கந்தரங் கானந் தனிற்சென் றடங்கிலென் காசிக்கனே
கந்தரங் கானந்த நண்ணிலென்? கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்தில் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே!
இதன் பொருள்:-
“கன்னியர் கட்டளக கந்தரம் கான் நந்த நின்று ஆடு எழிற்செந்தில்
கண்டிறைஞ்சிக்” – கன்னியர் கட்டிமுடிந்து வைத்துள்ள கூந்தல் மணம்
வீசும்படியாக ஆடுகின்ற அழகான செந்திலம்பதியில் கந்தனைக் கண்டு தொழுது
வணங்கி;
“கந்தர் அங்கு ஆனந்தம் நல்கச் சனனம் கடந்திலர்” – கந்தர் வணங்கிய
பக்தருக்கு ஆனந்தம் அருள்பாலித்து அதன்பயனாக இந்தப் பிறவியைக்
கடவாதவர்கள்;
“கந்தரம் கானம் தனிற்சென்று அடங்கில்என்?” – மலைக்குகை, காடு போன்ற
இடங்களிற் சென்று புலன்களை ஒடுக்கி வாழ்ந்தால் என்ன?
“காசிக்கு அனேகந்தரம் கால் நந்த நண்ணில் என்?” – காசிக்கு அநேக முறை
கால்கள் வருந்தும்படியாக நடந்து திருச்செந்தூரை நெருங்கினால் என்ன?
தற்காலத்தில் சித்திரகவிபாடும் பழக்கம் வெகுவாகக் குறைந்து
விட்டது. இல்லையென்றே சொல்லலாம்.
