
தனி அறைக்குள்
அடைத்து
வைத்துக் கொண்டேன்
என்னை
புத்தகங்கள்
நாளேடுகள்
அலைபேசி
உணவு
மருந்துகள்
……………………
எல்லாம் நிரம்பிய
பெரிய உலகத்தை
உள்ளடக்கிய
அறைக்குள்
பத்திரம்
பாதுகாப்புக்கு
என்ன குறைச்சல்!
தங்காப் பாட்டி
கிடந்தாள்
கம்மராஜபுரத்தில்
தனிமைப் பட்டு
ஆண்டுக் கணக்கில்
ஜெயம்மாள் அலைவாள்
காஞ்சிபுரத்தில்
தன் வீட்டுக்கும்
எங்கள் பாட்டி வீட்டுக்கும்
வேறு
போக்கிடம் இன்றி
பத்தாணிப் பாட்டி
அசராமல்
பேருந்தில்
ரயிலில்
தூரங்கள் கடப்பாள்
காஞ்சிக்கும்
கிராமங்களுக்கும்
சென்னைப் பட்டணத்துக்கும்
பறப்பாள்
எல்லா இடங்களுக்கும்
தனிமையைத்
தன்னகத்தே கட்டிக் கொண்டு
பிளேக் கோ
கொள்ளை நோயோ
கொரோனா வோ
கொண்டு வரவில்லை
புதிதாக
தனிமைப் படுத்தலை
நூற்றாண்டுகளாக
இருக்கின்றன
சமையல் அறைகள்
ஒவ்வொரு வீட்டிலும் …
மனு கொடுத்த சான்றிதழ்
புதுப்பித்துப் புதுப்பித்துத்
தொடர் பதிப்பில்
ஒலித்துக் கொண்டே
இருக்கிறது
வெளியே வந்து விடாதே என்று!

மிக செரியான கவிதை.
அருமை சார். குறுகிய கவிதை ஆனால் விஷயம் பெரியது
பெண்கள் தங்கள் தனிமையை விளம்பரமாக்குவதில்லை. தலைவிதி, கடமை என்றிருப்பார்கள். தம் பெண்களையும் அவ்வாறே வளர்ப்பார்கள். மிகச் சிலரே பெண்களுக்கு சுதந்திரமாக வாழ அனுமதிப்பார்கள்.
நல்ல கவிதை!!!
பெண்களின் பிரச்சினை மிக நுட்பமாக சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.
ஆம் , தனிமை காலங் காலமாக இருந்து வருகிறது. சூழ்நிலைகள் தான் வேறு வேறு . தேறி வருவாய் , ஜக்கம்மா அருளுடன் . இந்தத் தனிமையின் அனுபவங்கள் உன் எழுத்தில் விரைவில் வரும் . படைப்பாளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் படிப்பாளி . அன்புடன் ரமேஷ் .
தனிமைச் சிறை
ஆஹா ஆஹா
அருமையாக சுருக்கமாக சித்தரித்து கற்காலம் முதல் தற்காலம் வரை தனிமை தனியார் மயமில்லை பொதுஉடமை என சிந்திக்க வைத்து சிறப்பாக வெளிப்படுத்திய தங்கள் நற்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
சமையல் அறைகள் ஒவ்வொரு வீட்டிலும். நிச்சயம் அறைந்தது மனதில்.
பெண்கள் தனிமை உட்பட அனைத்துத் துயரங்களுக்கும் ஆளாகிறார்கள். காத்திருப்பு, புலம்பெயர்தல், உண்ணாவிரதம், மௌன விரதம் என்று அனைத்துத் துறப்புகளுக்கும் தயாராகவே உள்ளனர். ஆண்களின் வாழ்வில் எதுவெல்லாம் சாதனையோ பெண்களின் வாழ்வில் அதுவெல்லாம் இயல்பானதே.
தனிமையிலே இனிமை இல்லை என்று மாற்றுச் சான்றிதழ் எழுதுகிறது இயற்கை.
Karuppasamy402
Tamil
இத்தனை பேரையும் உங்கள் மனதினுள் அழைத்து இருத்தி தனிமை போக்கிவிட்டீர்களே? இன்னும் எத்தனை பேரோ தனிமைக்கு துணை கொடுக்க?
தனிமையில் அன்று வாழ்க்கை இழந்தவர்கள் இன்று கூட்டாக இருந்து முதியோர் இல்லங்களில் தனிமையில் வாடுகிறார்கள்.
பெண்களின் பாடுகளை மனவருத்தத்தோடு, தங்கள் தனிமைப்படுத்தலில் புதிதாக ஒன்றுமில்லை என்பதாக, அவர்களின் தனிமையான அன்றாட வாழ்க்கை போராட்டங்களை கவிதையாக வடித்துள்ளீர்கள். அருமை.
தனிமைப்பட்டுக் கிடந்த பெண்மணிகள் கண்முன் வந்து போகிறார்கள். ஆனாலும், அவர்களது தனிமை ஆண்துணை இல்லாத தனிமையாகவே தான் புலப்படுகிறது. என்ன காரணமோ, ஆணாதிக்க சமுதாயமாக காலம் காலமாக, மேற்போக்கு ஆண்கள் உள்பட, போஷித்து வரப்பட்டுக் கொண்டு இருக்கிற இந்த சமுதாயத்தில், தனிமைப்படுத்தப் பட்டுத் தவிக்கும் பெண்கள் தான் ஆண்களைத் தாண்டி விசேஷ கவனம் பெறுகிறார்கள். கணவனால் கைவிடப் பட்டவர்களும், காலத்தால் கைவிடப் பட்டு வருமானமின்றி கைம்பெண்களாக அலையும் எவ்வளவோ பேரை இத்தனைக் காலம் பார்த்தாயிற்று. நிறைய எழுதி உருகியாயிற்று. ஆனாலும், கணவனை ஏதோவொரு வகையில் இழந்த பெண்களின் ஆயுட்காலம் நீடிப்பது போல மனைவியை இழந்த ஆண்களின் ஆயுட்காலம் நீடிப்பது இல்லை பொதுவாக.
கணவன் நினைப்பில் அரற்றிக் கொண்டு இருக்கும் பெண்களை விடவும், மனைவி நினைவில் மாரகம் அடைகிற ஆண்கள் தான் அதிகம்.
ஆணாதிக்க சமுதாயம் என்றாலும் உண்மையில் இது பெண்களைச் சார்ந்த சமுதாயம் தான்.
கைமிஞ்சுகிற, குடித்துக் கும்மாளம் போடுகிற கணவன் தான் மனைவி போன உடன் தாபம் தாளாது சீக்கிரம் போய் விடுகிறான். பல்லக்கிலேயே வைத்துத் தாங்குகிற கணவன் பொசுக்கென்று போய்விட்டால், மனைவி நாலு நாள் அழுதுவிட்டு, நாற்பது வருஷம் வாழுகிறாள்.
இது பொதுவான கருத்து தான். ஆனால் ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் இல்லை. என் கருத்து சாத்தியமே இல்லை என்று யாரும் சாதிக்க முடியாது.
அவரவர் வாழ்வாதாரத்திற்குத் தேவையான சம்பாத்தியம் யாருக்குமே அவசியமாகிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவரும் தொழில் செய்ய முனைகிறார்கள்.
பரிஜாரகனின் மனைவி இறந்து விட்டால், அவன் குழந்தைகளை வளர்க்க, மனைவி இறந்ததைக் காரணம் காட்டி, கலெக்டர் வேலைக்கு முனைவதில்லை. கல்லூரி பேராசிரியரின் கணவர் இறந்து விட்டால், அவர் உத்யோகத்தைத் துறந்து விட்டு, சமையல் வேலைக்குப் போவதில்லை.
என்ன காரணமோ, இந்த சமூகத்தில் பெரும்பாலும் படைப்பாளிகள், அதிலும் இயக்கம் சார்ந்த படைப்பாளிகள், சமூகத்தில் விதிவிலக்குகளாக ஆங்காங்கே தென்படுபவற்றை பூதாகாரமாக சமூகம் முழுவதும் வியாபித்து இருப்பது போல் தாமும் நம்பி பிறரையும் நம்ப வைக்க முனைகிறார்கள் என்று அவ்வப்போது தோன்றுகிறது. சமூகம் இதைத் தாண்டி பெருத்த அவசரத்தில் அவகாசமின்றி எக்ஸ்பொனென்ஷியலாக விரைந்து கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி பாட்டிகளெல்லாம் நார்மடி கட்டிக் கொண்டு அவதியுறவில்லையா என்று கேட்கலாம். உண்டு தான். ஆனால் எங்கும் நீக்கமற நிறையவில்லை என்பது தான் உண்மை. இருபது வயதில் கைம்பெண்ணாகி, தலை மழித்து, அடுத்த அறுபத்து ஆறு ஆண்டுகள் என் தந்தையின் அத்தை மகள் வாழ்ந்தது உண்மை. ஆனால் அவர் மாவரைக்கப் போகவில்லை. விவசாயம் பார்த்தார். இரண்டு மகள்களைப் பெரிய அளவில் கொண்டு வந்தார். அதே சமயம் சமையல் எடுபிடியாக இருந்த பிச்சுமணி க்ஷயரோகம் வந்த மனைவிக்கு வைத்தியம் பார்க்க வக்கில்லாமல் அவளைப் பறி கொடுத்துவிட்டு, அந்த சோகம் தாங்காமல் புத்தி பேதலித்து பிச்சை பைத்யம் என்று தெருவில் அம்மணமாகத் திரிந்து கல்லடி பட்டு நான்கே வருடங்களில் இறந்து போனதையும் எங்கள் ஊர் கண்டது. நான் கண்டதே காட்சி என்று இதுதான் எதார்த்தம் என்று சாதிப்பது எந்த அளவுக்கு சரியில்லையோ அதே அளவிற்கு பெண்கள்தான் சமூகத்தில் அவலத்திற்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்பதும்.
கண்ணுக்குப் புலப்படுகிறதே காட்சி. ஆனால் எல்லா காட்சிகளும் கண்களுக்குப் புலப்படுவது இல்லை.
பெண்களுடைய பிரச்சினைகளை மிக சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் தோழர். அருமையான பதிவு.
That the present day quarantines is nothing when compared to the plight of women who undergo a magnitude of separation and aloofness is beautifully expressed.
அருமை தோழர். தனிமை என்பது எப்போதும் உடன் இருப்பது. நாமாக விரும்பி ஏற்பதா… உலகால் கட்டாயப்படுத்தப்பட்டதா.. என்பதே முக்கியம். உங்கள் உடலுக்குதான் தனிமை… உங்கள் சிந்தனைக்கல்ல என்பதை கவிதை புலப்படுத்துகிறது.
🙏.
பெண்களின் பார்வை கொண்டு படைத்த கவிதை அருமை சார். மனமார்ந்த வாழ்த்துகள்
அனைத்து தொலைத் தொடர்பு கருவிகளுடன் தனிமைப்படுத்திக் கொள்வதையே சிரமம் என்கிறோமே. விடுதலைப் போராட்ட வீரர்கள் எவ்வித தொடர்பும் இல்லாமல் தனிமைச் சிறையில் எப்படிக் கிடந்திருப்பார்கள்?
தற்கால நிலை தத்ரூபமாக…
இரண்டு ஆண்டுகளாக கொரோனா நம்மைத் தனிமைப்படுத்தித்தான் வைத்திருக்கிறது. எப்போது விடுதலை என்று தெரியவில்லை.
கவிதை அருமை..
Though women feel lonely,somehow they manage to immerse themselves in work and always be useful to others and find happiness in doing so. I have seen my paatties athais.who were widowed in their teens. But men are distraught when their partners die or away . I have seen that too in my family.men are emotinally more dependent on women rather than the otherway around. Your poem is nice.