
—
காலம் உறைந்து
கல்லிடைக்குறிச்சியின் கடைசி வளவில்
நாழி ஓடுகளாலான வீடாய் சமைந்திருக்கிறது
அதன் ஓவ்வொரு கூடத்தையும்
நாழிகைக்கு ஒன்றாய்
நாளுக்கு ஒன்றாய்
நாளந்தத்துக்கும் ஒன்றாய்
நீ கடக்கையில்
புழக்கடையில் ஓடும் பொருநை
சேரும் அடிவானாய்
வீடு விரிந்து எல்லையின்மையைத் தொடுகிறது
அவ்வகம் உன் வாசனையின் வெளி வடிவு
அவ்வகம் உன் நடையின் வெளி நிழல்
அவ்வகம் உன் கனவின் வெளி நனவு
எனினும்
முறையீடற்ற தியானமாய்
இசையொடுங்கும் மௌனமாய்
பருவங்கள் ஒடுங்கும் நிலமாய்
கல் அரண் அகம் தாண்டிய
குறிச்சியை கற்பனை செய்கிறாய்
அதுவே நீ நீ என
ஊடறுத்து முனகுகிறாய்
*கல்லிடைக்குறிச்சி திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் ஒரு தெருவிலுள்ள வீடுகளின் உள்ளேயே தாமிருவருணி ஓடுகிறது. வீட்டில் புறவாசல் முற்றத்தில் தரையில் சிமெண்ட் மூடியைத் திறந்தால் தாமிரவருணித் தண்ணீரை மோண்டு குடிக்கலாம்; புறவாசல்க் கதவைத் திறந்தாலோ நதியில் நீராடலாம். நதியோடு இணைந்த அந்த வீடுகளைப் பற்றி கேட்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
