அருவி/செல்விபிகாஷ்

மேலிருந்துக் கீழ்விழுந்து
மோகத்தில் தனையாழ்த்தி
பூமியைச் சேருகின்ற
புனிதத்தின் அருவியதோ!

உள்ளுயிரைச் சுத்தம்செய்ய
உயிரதிலே உறைந்துபோக
ஆண்டவன் ஊற்றிவிட்ட
அதிசயத்தின் மூலிகையோ?

மலைமகள்உடுத்துகின்ற
மாராப்புச் சேலையதோ?
வானமகள் அனுப்பிவைத்த
வெள்ளைநிறக்கொடித்தூதோ?

மந்திரமலைக்காரி
முகிலெடுத்துதூபமிட
முடிச்சவிழ்ந்தவெண்கூந்தல்
முட்டியதோ நிலமகளை?

இயற்கையின் தியானத்திலே
இறைவழிப்பயணத்திலே
அன்பில் ஆர்ப்பரித்த
ஆன்மாவின் தரிசனமோ?

ஆறாகி வரும்வழியின்
ஆறாத ரணமெடுத்து
அதோ!அந்த மலையிருந்து
ஆத்திவிடும் அதிசயமோ?

காதலின் நரம்பொன்று
காட்சிக்கு வந்துவிட
மலையேறிச்சிரிக்கிறது
மனதெல்லாம்நிறைக்கிறது

மேலிருந்து முனிவரெல்லாம்
மந்திரங்கள்ஒலித்தனுப்ப
ஆர்பரித்த சத்தமதில்
ஆழ்மனதையசைக்கிறது

மலைமகள் சிரிக்கின்றாள்
பல்லெல்லாம் தெரியும்படி
எச்சில் தெரிக்கின்றாள்
ஏகாந்தம் நனையும்படி

வீழ்ச்சியல்ல எழுச்சியென்று
வினாயெழுப்பிநடக்கிறது
சலசலத்துப் பாதையிலே
சலனத்தை யறுக்கிறது