இறுக்கம்

ஆர். வத்ஸலா


ரசிக்க முடிவதில்லை
இப்பொழுதெல்லாம்
முன் போல்
மழையை

கருமேகம் சூழ்ந்ததும்
வந்து விடுகிறது
கவலை
குடியிருப்பை கட்டியவர்
செய்த தவற்றால்
வெளியில் பெய்யும் போதெல்லாம்
வீட்டிற்குள்ளும்
பெய்கிறது மழை

தண்ணீராய் பணம் செலவழித்து
வேனிற் காலத்தில் சரி செய்தாலும்
ரசிக்க முடிவது
முதல் மழையை மட்டுமே
இரண்டாவதற்கு
தேவையாயிருக்கிறது
மறுபடியும்
வீட்டினுள் குடை

நேரம் கழித்து வரும் வேலைக்காரியை கடிந்து

கொள்வதில்லை
இங்கு வந்தது முதல்

அவள் வீட்டிலும்
பெய்யும் மழை
மழை பெய்யும்
போதெல்லாம்