தொண்டர்தம் பெருமை/நாகேந்திர பாரதி


தலைவர் அறிவித்த அமைச்சர்கள் பட்டியலில் ராமு பெயர் இல்லை. பொதுக்குழு முடிந்ததும் , கூட வந்த நண்பர்கள் மெதுவாக முனகினார்கள்.’
‘என்ன ராமு தலைவர் இப்படி ஏமாத்திட்டாரு. கட்சிக்காக ஆரம்ப நாளில் இருந்து எப்படி உழைச்சி இருக்க. ஆட்சி அமைக்கறப்போ உன்ன மறந்துட்டாரே.’

‘ அட விடுப்பா, மந்திரி பதவிக்காக உழைச்சோம் . தலைவரைப் புடிச்சிருந்துச்சு. அவர் கொள்கை புடிச்சிருந்துச்சு. உழைச்சோம் .அவ்வளவுதான்’
என்று சொன்னாலும் உள்ளுக்குள் ஒரு சின்ன உறுத்தல் இருக்கத்தான் செய்தது.

இப்போது போல் ஞாபகமிருக்கிறது. பத்து வருடங்கள் முன்பு தலைவர் பழைய கட்சியை விட்டு விலகி அறிக்கை கொடுத்த நேரம். திருச்சி ஹோட்டலில் அவரோடு சேர்ந்து ‘கொத்து பரோட்டா’ சாப்பிட்ட போது சொன்னது . ‘
‘வந்து காண்பிக்கணும் ராமு .நம்ம கொள்கைகளைக் கோட்டைக்குக் கொண்டு போகணும் ‘.
தலைவரின் வார்த்தைகள் இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றன. அதற்குப் பின், முதல் தேர்தலில் தலைவருடன் சேர்ந்து அவன் தமிழ்நாடு முழுக்க சுற்றியது. அவ்வப்போது கார் பிரயாணத்தில் கண்ணயர்ந்தது சில மணித்துளிகள் தான். கிடைத்த சீட்டு இருபது .

முயற்சி தொடர்ந்தது. அதற்கடுத்த இடைத்தேர்தலில் ஐம்பது. அப்போது ராமுவும் எம்எல்ஏ. அவனுக்கு சட்டசபையில் பேசச் சொல்லிக் கொடுத்தவர் தலைவர். அதற்கப்புறம் அவனே எழுதி, பேசி, தலைவரை அசர வைத்ததும் நடந்தது.

இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்போடு ஆரம்பித்தது . இடைப்பட்ட வருடங்களில் உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. மாவட்டம்தோறும் கூட்டம். கொள்கை விளக்கம். கிராமங்கள் தோறும் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசியது. தலைவர் கலந்து கொண்ட எல்லா கூட்டங்களிலும் ராமுவும் இருந்தான் முதல் தொண்டனாக. முதல் பேச்சாளனாக . அவரது நிழலாக.

கட்சி வளர வளர கூட்டம் சேர்ந்தது. கோஷ்டியும் சேர்ந்தது . தலைவர் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமையை அருகிலிருந்து கவனித்தான். ஜாதி வாரி, மாவட்ட வாரி, கட்சியில் இட ஒதிக்கீடு கொடுத்ததைக் கவனித்தான். கோஷ்டி வாரி என்று இட ஒதுக்கீடு கொடுத்ததையும் கவனித்தான் . இவன் எந்தக் கோஷ்டியிலும் சேரவில்லை .இவனது நெருங்கிய சில நண்பர்கள் தவிர.

‘அதனால்தான் ஒதுக்கப்பட்டோமோ ‘ சுருக்கென்று இருந்தது ராமுவுக்கு. அப்போது ‘ராமு ‘ என்று கூப்பிட்ட குரல் தலைவருடையது. ‘எங்க போயிட்ட. வா, சேர்ந்து சாப்பிடலாம் பசிக்குது ‘ என்று அவன் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டு அவனை இழுத்துச் செல்லும் தலைவரோடு சேர்ந்து போகும் அவனைப் பார்க்கும் பொறாமைக் கண்களில் பல கோஷ்டிகள் கலந்து இருந்தன. ஏனோ கண் கலங்கியது ராமுவுக்கு.