கம்பன் கவியமுதம்-26/வளவ. துரையன்

                                 மண்வாசனை

        வெண்தளக் கலவைச் சேறும் குங்கும விரைமென் சாந்தும்
        குண்டலக் கோல மைந்தர் குடைந்தநீர்க் கொள்ளை சாற்றின்
        தண்டலைப் பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும்
        வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ         [44]  

[சாலி=ஒருவகை நெல்; திருமங்கையாழ்வார் திருக்கோவலூர் திவ்ய தேசத்தைப் பாடும்போது ‘செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே”’ என்பார்; வேலி=வயல்; வைப்பு=மருத நிலம்; மதுகரம் மொய்க்கும்=-வண்டுகள் மொய்க்கும்]

கம்பன் கோசல நாட்டின் மண்வளம் பற்றிக் கூறுகிறான். அந்த நாட்டின் மண்ணும் மணம் கமழுமாம். அதற்காக அம்மண்ணை வண்டுகள் மொய்க்குமாம். தம் காதுகளில் குண்டலங்களை அணிந்துள்ள ஆடவர்கள் நீராடுகிறார்கள். அவர்கள் குள்ளக் குடைந்து நீராடும் அந்நீர்ப்பெருக்கு ஓடி வருகிறது. குளிக்கின்ற அந்த ஆடவர்கள் பூசியிருந்த வெண்சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ முதலிய கலந்த சந்தனக் குழம்பையும் அந்த நீரானது சுமந்து வருகிறது. அவற்றைக் கொண்டு வந்து சாலி என்னும் ஒருவகை நெல் விளயும் வயல்களிலும் மருத நிலத்திலும் அது பரப்புகிறது. அது படிகின்ற வண்டல் மண்ணும் அக்கலவையால் மணம் கொண்டு வீசுகிறது. அம்மணத்தை வண்டுகள் மொய்க்கின்றன.


இவ்வாறு அந்நாட்டின் மண்ணும் வாசனை நிரம்பியதாய் இருந்ததாம். என்னே கம்பனின் கற்பனை!