நாய்ப் பாசம்/நாகேந்திர பாரதி

‘ இன்னைக்கு நடக்கிற நாய்கள் கண்காட்சியில் தன்னுடைய பொமரேனியன் முதலிடத்தில் ஜெயிக்கணும் ‘என்ற வெறியில் கமலா. காலையிலிருந்து அந்த நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து தலை சீவி உடல் சீவி, வாசனைத் திரவியம் பூசி விதவிதமான ஆடைகள் அணிவித்துப் பார்த்து பொருத்தமான ஒன்றைக் கடைசியில் தேர்ந்தெடுத்து அழகு பார்த்து அதை மாட்டி, உடைக்குப் பொருத்தமான நிறத்தில் காலணியும் அணிவித்து காரில் அந்தச் ‘சீட்டா’ வோடு ஏறி புறப்படும்போது மணி ஒன்பதரை ஆகி விட்டது.

இன்னும் அரை மணி நேரத்தில் கண்காட்சியை ஆரம்பித்து விடுவார்கள். டிரைவரை விரட்டி மைதானத்தில் நுழையும்போது சரியாகப் பத்து மணி . எத்தனை விதமான நாய்கள் குட்டியான ‘பக் ‘ வகை நாய். ‘பின்சர்’ நாய். ராஜபாளையம் நாய். டாபர்மேன் ,ரீலர் .இன்னும் பலப்பல. தன்னுடைய பொமரேனியன் நாயை ஆசையோடு தடவிக் கொடுத்து அந்தப் போட்டிக் கூட்டத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் போர்வையை விரித்து அதில் உட்கார வைத்தாள் .

நடுவர்கள் நடத்திய நடைப்போட்டி, ஓட்டம் எல்லாவற்றிலும் பளிச்சென்று தெரிந்தது இவளது பொமரேனியன்தான் . டாக்டர்கள் வந்து உடல் அளவு, ஆரோக்யம் மற்றும் பல பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்த்ததில் நன்கு ஆரோக்கியமான நாய் என்பதிலும் முதலிடம் .

பிறகென்ன முதல் பரிசு போலீஸ் அதிகாரி கையால் வாங்கும்போது வாய் கொள்ளாத சிரிப்பு கமலாவிற்கு.இருக்காதா பின்னே .இந்த மூன்று மாதங்களாக சீட்டாவோடு சேர்ந்து எத்தனை கடைகள். . எவ்வளவு கவனிப்பு. எவ்வளவு பிராக்டிஸ். எத்தனை முறை டாக்டர் செக்கப்.

பெருமையோடு வீட்டுக்குத் திரும்பும் கமலா உள்ளே நுழையும் பொழுது கம்மிய குரலில் அவள் தாய். ‘ கமலம் , எனக்கு முதுகு வலிக்குதுன்னு ஒரு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கேன் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக மாட்டேங்கிறியே ‘.

One Comment on “நாய்ப் பாசம்/நாகேந்திர பாரதி”

  1. வீட்டில் பெற்ற தாயை கவனிக்காமல் ஜந்தறிவு பிராணிககு உருகிய செயல் மிகவும் வருத்தமாக இருக்கிறது

Comments are closed.