
வித்து விஷயத்தை விருட்சக் காடாக்கும்
சித்து விளையாட்டுத்தான் !
ஆனாலும், |
சொத்தை மினுக்கொளியை ஜோதிப் பிழம்பென்பார்
மத்தியிலே வாழும்
மாயத்தால்,
முட்டித் திசைச்சரிவில் முக்கித் தடுமாறி
சுட்டும் வழிவிலகிச்
சர்ப்பம்போல்
எட்டுத் திசைகளிலும் ஏறிக் குறும்பாலே
கொட்டம் அடிப்பதுவே
கற்பனைகாண்!
கண்டாச்சா? பின்னுடன்வா! கவித்
தொழிலின் ரகசியத்தை
விண்டுரைக்கப் போகின்றேன் !
விழிக்காதே !
மானும், மிருகவகை, மற்றுமுள பட்சிகளும்
வானத்துச் சந்திரனும் வாய்த்த உடுக்கூட்டமதும்
தேனும் தென்றலதும் தீராத புத்தமுதும்
மீனும் மலர்க்காவும் மாளாது பட்டியலே!
ஒப்பனைக்குச் சாமான் ஒருகோடி உண்டிதுபோல்
செப்புதற்கு நேரமில்லை ! ஜெரித்துக்கொள்.
அப்புறம் கேள்.
மந்தைவெளி தந்தகிளி, கந்தலுடை சிந்துநடை , (?)
இந்த விதம் மோனை எதுகைப் புதுமைக்கு
எடுத்துக்கொள் அகராதி!
அடுத்தது கேள்.
பண்டைக் கவிநயங்கள் பண்ணிவைத்த
சித்திரத்தின்
ஜீவத் துடிப்பகற்றிச் சொல்மாற்றிச்சந்தத்தை
சிதைத்துச் சிலம்பாடி
“உள்ளத் தெழுந்ததடா ஊறுங்கவிக்கிணறு;
வெள்ளத் திமிர்போலே வெடித்துச் சிதறுதடா !”
என்றெல்லாம்
ஏட்டைக் கறுப்பாக்கி எழுதியதே எழில்கவிதை !
……………
நாட்டில் பண்டிகைகள் நாலாயிரத்துக்கும்
அச்சேறும் பத்திரிகை அத்தனைக்கும் ஆண்டுதொறும்
செத்தாலும் தொடர்ந்துவரச் சேமநிதி போல்வளரும்
சப்பாத்திப் புதர் !

அட்டகாசம்.
ஆனாலும் தமிழ் ஏதோ ஒரு வகையில் இன்னும் சிலரை எழுத படிக்க வைத்த ஆறுதல் மிஞ்சுகிறதே. பரவாயில்லை அல்லவா.