வெளியேற்றம்/ அதங்கோடு அனிஷ் குமார்

ஒரு கோப்பைத்
தேநீரின் நடுவில்
ஒரு விரல் நுனி பட்டு
கோப்பைக்குள்
வட்ட வட்டமாய் எழும்
அலைகள் போல
உங்கள் மனதை
சஞ்சலப்படுத்துகிறது
என் இருப்பு.

என்னால்
பெரும் பிரளயம்
நடப்பதாய் பாவித்து
வன்மம் தோய்ந்த
ஆயுதமாக்கி
நீங்கள் வீசுவதை
நான் மௌனமாய்
எதிர் கொள்வதை
உங்களால்
சகித்துக் கொள்ள
முடியவில்லை.

உங்கள்
கண்களில்
வழியும் கொடூரத்தை
வேட்டைக்குத் தயாராகும்
எந்த விலங்குடன்
ஒப்பிடுவது என
நான் யோசிக்கையில்
உங்கள் வார்த்தைகள்
குரைப்புகளாய்…….
ஊளைகளாய்…….
பிளிறல்களாய்…..
எழுகின்றன.

வலுக்கட்டாயமாய்
வெளியேற்றப்படும் நான்
உங்களை நோக்கி
ஒரு
கம்பீரப்
புன்னகை செய்வதை
சகிக்க முடியாத நீங்கள்
தோற்று நிற்கையில் வேட்டையாடப்பட்டு
குற்றுயிராய் கிடக்கும்
ஒரு
விலங்கொன்றின் பிம்பம்
நினைவுக்கு
வந்து வந்து போகிறது.

இனி
எப்படிப் பொறுப்பீர்கள்?
வெளியேற்றப்பட்ட நான்
மீண்டும் மீண்டும்
உங்கள்
மனதின் கதவுகளைத்
திறந்து கொண்டு
உட்புகுவதை.