கால வெள்ளம்/வேலாயுத முத்துக்குமார்

பெருநிலங்களையும் குடியிருப்புகளையும்
சூழ்ந்த மழைவெள்ளம்
இறுதியாக கல்லறைத் தோட்டத்திற்குள்
நுழைந்துவிட்டது
புதையுண்டிருக்கிற சவப்பெட்டிகளின்
இடுக்குகளின் வழியே
வடிகாலற்ற மழைநீர் தேங்கியதில்
மிதக்கத் தொடங்கிவிட்டன
மக்கியிராத எலும்பு துகள்கள்
எப்போது வேண்டுமெனாலும் விழலாம்
என்கிற கதியில்
சரிந்திருக்கிற தோட்டத்தின் பெயர்பலகை
விவாகரத்தின் இறுதிநாள் தீர்ப்புக்காக
பேரூந்தில் பயணிக்கிறவனின் கண்ணில்பட்டு
சமிக்ஞையாக ஒளிர்கிறது
கணவனின் நினைவு நாளன்று
கல்லறைக்கு வழிபாடு செய்ய வந்தவள்
இடுப்பில் குழந்தையோடும்
கையில் மெழுகுவர்த்தியோடும்
ததும்பிய கண்ணீரோடும் நிற்க
காலவெள்ளத்தின் ரசவாதங்களை
அசை போட்டவாறு அலைந்து திரிகிறது
இன்னமும் சாந்தியடையாத
மூதாதைய ஆத்மா ஒன்று..