
இந்த தழுவலுக்கு வயது
இரண்டாயிரம் வருடங்கள்
சிக்கெனப் பிடித்தாய்
எங்கே நான் நழுவுவது ?.
அய்யோ கடவுளே
அரவத்தை கயிறாய் .திரித்து
கட்டும் அற்புத மந்திரவாதி நீ
இதயத் துடிப்பை இதயம் கேட்க
இறுக்கி அணைத்த பின்
என்னிடம் எஞ்சியிருப்பது எல்லையில்லா மௌனம் மட்டுமே
தீராச் சொற்களை
சுமந்தலைபவன்
என்னை எடுத்துக் கொள்ளும் முன்பே
என் சொற்களையும் எடுத்துக் கொண்டான்
.
இவளை விலா எலும்பிலிருந்து
உருவிச் செய்ய
இறைவன் ஒரு போதும்
நினைத்திருக்க மாட்டார்
ஆதாமின் கற்பனையில்
பிறந்த ஏவாள் இன்னும்
இன்னும் தவழவேயில்லை
ஊர்த்துவ தாண்டவத்தில்
காது குண்டலத்தை கழற்றி எறிந்து
வெற்றி கொண்டவன்
தேவர்களும் முனிவர்களும்
கை கொட்டி சிரித்த பிறகும்
அம்மையிடம் வருத்தம் தெரிவிக்கவேயில்ல
உனக்கான பிரபஞ்சத்தை
படைத்து தர விரும்பும்
என்னுடைய
சிறகுகளை நோக்கி
மட்டும் கூர்மையான கத்திகள்
முளைத்து விடுகின்றன
எண் திசையிலிருந்தும்
பெண்ணுடலில் சிலுவை
ஏற்றப்படும் தருணங்களை
ஏனோ கடவுள்களாலும் தடுக்க முடிவதில்லை
அலங்காரப் படுத்தப்பட்ட
என் சிறகுகள்
வரவேற்பறையில் கண்ணாடி பேழைக்குள் காட்சிக்கு
வைக்கப்பட்டிருக்கிறது
அம்மை காளியாகி
கணவனை சம்ஹரித்தது
ஒரு முறை தானே
நினைத்த மாத்திரத்தில்
வாளிப்பான அங்கங்களை
எலும்புக் கூடாய் மாற்றும்
காரைக்கால் அம்மையாக
நானில்லை என்பது
எத்தனை வசதியாகப் போய்விடுகிறது உனக்கு

மிக்க நன்றி