
எட்டுவழிச் சாலை வழி
போகப் பிடிக்கவில்லை,
மரங்களற்ற சாலை, பித்து வேகம்.
வாகனங்கள் நிரம்பி வழியும்,
வானம் தெரியா புகை சூழ்ந்த
நகரச் சாலைகளும் பிடிக்கவில்லை.
மாட்டு வண்டியோடும் மண்பாதை
தேடினாலும் கிடைப்பதில்லை.
இருமருங்கும் புல் முளைத்த,
நடுவே ஓரிரண்டு பூக்கள் மலர்ந்த
ஒத்தையடிப் பாதை அழகுதான்,
ஆனாலும் அதுவும் எவரோ
தொடங்கியதுதானே.
மரங்களடர்ந்த வனம் நடுவே
முகம் தடவும் கிளைகள் தள்ளி
மேலே சூரியனும், கூட பறவைகளும்
உடன்வர, நானும் என் தனிமையும்
தேடி உருவாக்குகிற வழி
பிடித்திருக்கிறது.
