வேலாயிஇன் வேண்டுகோள்/ யாஸ்மின் சல்மா

எஞ்சாதி சனங்களுக்கு, வேலாயின்னாலே, வெடுக் பேச்சும், விருட்டு நடையும், வெருமையான மூஞ்சும் தான் தெரியும். ஏன்?, எங்கூரு சனங்களுக்குமே அப்படித்தான். என்ன செய்ய என் விதி அப்படி. முப்பத்தி நாளு வயசில, பத்து வயசில ஒரு பிள்ளையோட விதவையா நின்னா, பின்னே என்ன செய்ய முடியும்.

அது கிடக்கட்டும் விடுங்க. என் ஊரப்பத்தி கேளுங்க. செய்யனூர தாங்க என் ஊரு. மொத்தமே ஒரு 200, 250 வீடு தாங்க இருக்கும். அதிலயும் செலரு வாழ்வ தேடி பட்டிணம் போயாச்சி. திருவிழா, பொங்கல்னா வருவாக, ஒரு வாரம் இருப்பாக, பின்னே போவாக. முன்னாடில்லாம், விவசாயம் தாங்க வாழ்வாதாரம். அது மழதண்ணி இல்லாம நட்டமானதொட்டு, நாங்க இப்போ கல்லு ஒடக்கையும், காடு வெட்டயும் போறோங்கய்யா. வெவசாயம் ஏதோ இருக்கய்யா, ஆனா அத அவுகளே பாத்துகறாக. ஆளு வச்சி பாத்தா கட்டுபடி ஆகுமாய்யா?

எங்க ஊர்ல ஒரு பள்ளிகூடம் இருக்கய்யா. எட்டாவது வர படிக்கலாம். பின்னே நமக்கு பாடம் எட்டுச்சின்னா, படிக்க பக்கத்தூருக்கு போகனும். எனக்கு எட்டுனது ஆறாவது தான் அய்யா.எம்பிள்ள ரமேசு இங்கதான் அஞ்சாவது படிக்கான் சாமீ. அவன் பெரிய படிப்பு படிச்சி ஆபிசர் ஆவணும்.

ஊருக்கு வெள்ளன ஒரு பஸ், கருக்கல்ல ஒரு பஸ். எடயிலயும் வரும், ஆனா அதுக்கு ஒரு மைல் நடந்து பை பாஸ் ரோட்டுக்கு போகனும் ஒரு தர்மாஸ்பத்திரியும் உண்டய்யா, அங்க பகல்லல்லாம், நர்ஸக்கா இருப்பாங்க, மத்தபடி ஒரு டாக்டர் வாரத்துல மூணு தடவ வருவாரு. மித்தபடி, ஒரு ஆத்திர அவசரத்துக்கு நம்ம ராமன்ணா பிளசர் கார்ல பக்கத்தூரு பெரியாஸ்பத்திரிக்கி போவோமய்யா. என்சாமீ புன்னியத்துல எசக்கு பெசக்கா எதுவும் நடக்கலய்யா. இனியும் நடக்காத எங்க சாமிக்கு மொள வக்கனும்.

ஊரெல்லயில ஒரு கோயில். பக்கத்துல கருநெலல் தற்ர ஒரு ஆலமரம். அத ஒட்டுன குளம் தான் மழயே இல்லாம குழியாய் கெடக்கு. என்ன செய்ய மழய நம்பி போகம் பார்த்தவக. இப்போ அது இல்லாம எல்லாம் காஞ்சி போய் கெடக்கு. இது மாறூன்ன நெனப்போட ஊரோட இருக்கிற உசுரய்யா இது. இந்த ஊர விட்டா அது எனக்கு உசுர விடுரதுக்கு சமமய்யா.

சரி விடுங்கய்யா. என் பொழப்புக்கு வருவோம். நான் ஆறாவது படிக்கப்போ என் அய்யன் உசுர விட, என் அம்ம என்னய கழனி வேலக்கி கூட்டிப்போவா. ரொம்ப கண்டிப்பானவ. அய்யனில்லாத பொண்ண கவுரதயா கட்டிக்கொடுக்கனுன்னுட்டு
என்னய முருகனுக்கு கட்டி கொடுத்தா. பக்கத்து ஊருதான், நல்லாதான் இருந்தோம். ஆனா, அவன் குடிகாரன். என்ன சொன்னாலும் கேக்கமாட்டான். நல்ல உழப்பாளி, ஆனா குடிச்சே அழிஞ்சான். கள்ளச்சாராயம் ஒருநா அவன் உசுர காவு எடுக்க, எங்கம்மே என்ன பாத்து விசனப்பட்டே அவளும் போயி சேந்துட்டா. நான் எம்மவனோட ஊருக்கு வந்துட்டேன்.

கழணிக்கு போவேன். ரமேசு பள்ளிகூடத்துல சேந்த பெரவு காடு வெட்ட போறேன்சாமீ.
ராவுல ஆக்குன சோத்தில உள்ள பழயத ரெண்டு பேரும் குடிச்சிட்டு, அவன் பள்ளிக்கு போவான். பகல்ல தான் சத்துணவு இருக்கே. எம்புள்ள சுடுசோறு திங்கும். ராவுல வடிச்ச கஞ்சி. மீந்த பழச தூக்கு வாளில போட்டு எடுத்துட்டு, போற வழில மாரியண்ண கடயில 1ருவா பாக்கெட் ஊருகா வாங்கிட்டு போயி. மதியம் திங்குறப்போ அமிர்தமா இருக்கும் சாமி. பாவம் சாமி எம்பிள்ள, என் சாமி அவன். எங்கஷ்டம் தெரிஞ்சி எதுவும் கேக்காது. அவனுக்கோசரம், எப்பயாச்சும் கறி எடுப்பேன் சாமி. நல்லா படிக்கிறான் சாமி. அவன பெரிய ஆபிசராக்கனும்.

என் உசுரெ என் பிள்ளதான் சாமி. இந்த உழப்பு, கஷ்டம் எல்லாமே என் சாமிக்குதான் சாமி. நா ஒத்த ஆளுன்னு தெரிஞ்சி என்ட்ட வாலட்ட பாக்கிற சில மனுஷ விலங்குகள தாண்டிதான நா காட்டுக்கு போகவேண்டிருக்கு சாமி.

நா போயிட்டு காடு வெட்டி, அந்தி சாயும்போ குட்டி யானைல வந்து கட்டய எட போட்டு எடுத்துட்டு போவாக. காசும் கை மேல கெடைக்கும். இப்படித்தாய்யா என் வாழ்க்க, என் புள்ள, என் ஊரு, என் பொழப்புன்னு போகுது.அன்னக்கி ஒரு செவ்வாக்கெழம இருக்கும். மதியம் ஒரு 1 மணி வாக்கில, மணியண்ண மவன் குமாரு காடுகரக்கி சைக்கிள்ல வந்து,

“ நம்ம ஊரு பள்ளிக்கூட கட்டடம் இடிஞ்சி விழுந்துட்டாமா, 3 பிள்ளவ உள்ள மாட்டிட்டாவளாமா, பிற சேதி ஒன்னும் தெரியல”! ன்னுட்டு அலறிட்டே திரும்பி போயிட்டான்.

எஞ்சாமி, எஞ்சாமி, எம்புள்ள, ரமேசு அரற்றிட்டே ஓடுரேன். பித்து பிடிச்ச கணக்கா. ஊரத்தாண்டி உள்ளார வரும்போது, செல்வி அக்கா என்னை பிடிச்சி நிறுத்தி, “வேலாயி! பதராத, உம்மவன செல்லம்மா கூட்டி போயிட்டா. அவ வீட்டுலதா இருக்கான், இந்தா புள்ள கொஞ்சம் தண்ணி குடி” ன்னு என்ன கொஞ்சம் ஆசுவாசபடுத்தினா.

இருந்தாலும் நா போனேன் பள்ளிகூடத்துக்கு. போலீஸும், ஆம்புலன்சும், மக்களும் ஓரே கூட்டம். நா படித்த பள்ளி அய்யா தரை மட்டமா கெடந்துச்சி. மூணு உசுராம். தாளல்ல எனக்கு. யார் வீட்டு குலவிளக்கோ, யார் வீட்டு ரமேசோ, எந்த அம்மயின் கனவோ, எதிர்காலமோ இப்ப உசிரில்லாம வெரும் உடம்பா கிடக்குதய்யா மண்டியிட்டு உக்காந்து ‘ஓன்னூ’ அழுவுனேன்.

“அய்யா! நா அதிகம் படிக்காதவய்யா, ஆனா எம்மவன பெரிய படிப்பெல்லாம் படிக்க வக்கனும்னு ஆச படுத ஒரு சின்ன கிராமத்தாள் அய்யா!. எங்களுகோசரம், பள்ளிக்கூடம் கட்டுற அய்யாக்களே உங்களுக்கு ஆயிரம் கும்பிடு அய்யா! பள்ளிக்கூடங்கறது செலருக்கு வரலாறு, செல பேத்துக்கு கனவு ஆனா நெறய பேத்தோட எதிர்காலம் அய்யா!. பள்ளிக்கூடம் போயி, வாழ்ந்த கதயத்தான் நாம பேசனும் அய்யா. ஒரு மூணு உசுரோட கனவு, லட்சியம் எல்லாம் உசிரில்லாம செதஞ்சி, நசுங்கி போய் கெடக்குதே அய்யா!

கல்வி தரத்த உயத்தனும், உயத்தனும்னு பாடுபடுற நாம, இனி பள்ளியின் தரத்தையும் கணக்குல வக்கனும் அய்யா!

அய்யா…….நா சொல்ரது வெளங்குதா அய்யா!


அய்யா…………….அய்யா!!!

வெளங்குரவங்களுக்கு வெளங்கட்டும்!!!

One Comment on “வேலாயிஇன் வேண்டுகோள்/ யாஸ்மின் சல்மா”

  1. என்ன வீச்சான கதை சொல்லல்… வாழ்க்கைப் போராட்டத்தை இப்படி இத்தனை செறிவா கடத்தும் மொழி…. அதிரடி கேள்வி சமூகத்தைப் பார்த்து…. வச்ச விஷயங்கள் நூறு, ஒற்றைக் கேள்வி மட்டும் தான் பளீர் என்று. உள்ளே கனன்றிருக்கும் அத்தனையிலும் நூறு கேள்விகள் உண்டு….

    அபாரம்

    வேணு

Comments are closed.