திருக்குறள் சிந்தனை 27/அழகியசிங்கர்

திருக்குறளை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்க வேண்டுமென்ற என் எண்ணம் என்னை அறியாமலேயே தவடுபொடியாகிவிட்டது.  கவனம் வேறு எங்கோ போக ஆரம்பத்து விட்டது. 
ஆனாலும் திருக்குறள் ஞாபகம் வந்து விடுகிறது.  இதோ ஒரு குறள்.

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

இந்த இடத்தில் வகைதெரிவான் என்ற வார்த்தை சிறப்பாக இருப்பதாகப் படுகிறது.  சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு, அறிந்து அவற்றை வெல்லத் தெரிந்தவனாக இருக்கவேண்டும்.  அப்படிப்பட்டவர்களைத்தான் அறிவுடையோர் போற்றுவார்கள். 
இதில் ஓசை என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் இதைப் பூரணமாக உணருபவர்கள் பக்கத்தில் வண்டி வருவதைக் கூட சத்தத்தால் உணர்ந்து அது வருகிற பாதையிலிருந்து விலகிப் போவார்கள்.  
இந்த ஓசையைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன் : கவிதையின் பெயர், üஒலிபெருக்கியின் அவலம்.ý  ஒருமுறை பிள்ளையார் சதுர்த்தி அன்று, ஏகப்பட்ட சத்தம்.  ஒலிபெருக்கியின் அலறல்.  ஒரு நிமிடம் கூட வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 

அது குறித்துத்தான் ஒரு கவிதை எழுதி உள்ளேன்.

    நேற்றுப் பண்டிகை தினம்
    காலையில் தெருவில்
    ஒலிபெருக்கியின் அவலம்
    அறைக் கதவைச் சாத்தினேன்
    சன்னல்களை மூடினேன்
    இடுக்குகளில் நுழைந்தது
    ஒலிபெருக்கியின் அவலம்
    யாருடனும் பேசப் பிடிக்கவில்லை
    குழந்தைகள் கட்டுக்கடங்காமல்
    மனைவி ஏதோ காரியத்தில்
    மதியம் ஒலிபெருக்கியின் அவலம்
    சற்று ஓய
    சிறகடித்துப் பறந்தது
    மாலையில் வெளியே சுற்ற ஆரம்பித்தோம்
    கோயில்களில் வண்ண ஒளி விளக்குகள்
    திரும்பவும் ஒலிபெருக்கியின் அவலம்
    நடந்துகொண்டிருக்கிறது
    ஒவ்வொரு கோயிலிலும் கூட்டம்
    எங்கும் தலை
    காலெல்லாம் தேங்காய்ச் சில்லு
    அவர்கள் கோயிலுக்குள்
    காத்திருந்தேன்
    ஒலிபெருக்கியின் அவலத்துடன்
    வீடு திரும்புகையில்
    சோர்வின் தீவிரம்
    இன்று காலை
    வேறுவிதமாய்ப் பொழுது.

அன்று இந்த ஒலிபெருக்கியின் அலறலைக் கேட்டு எங்கு ஓடுவது என்று புரியாமல் இருந்தேன்.  திருவள்ளுவர் அதை அடக்கி ஆளச் சொல்கிறார்.  நாம் எத்தனை பேர்கள் நம்மைச் சுற்றிலும் உள்ள ஓசைகளை உணர்கிறோம்.  இந்த ஓசையை வைத்து நாம் அதிகமாக எழுதலாம்.  அப்படியென்றால் திருவள்ளுர் சொல்கிற சுவை, ஒளி, ஊறு, நாற்றம் பற்றி இன்னும் அதிகமாக யோசிகலாம். 

One Comment on “திருக்குறள் சிந்தனை 27/அழகியசிங்கர்”

  1. எதையுமே அடக்கிவைக்க முடியாது. பக்குவப் படுத்தவேண்டும். ஐந்தவித்தான் என்பதற்கு ஐந்தையும் பக்குவப்படுத்தல் என்பதே அக்குறளின் பொருள்

Comments are closed.