
பச்சை என்றால்
புல்லென்றது மாடு;
புழுவென்றது கோழி;
கன்றும் குஞ்சும்
பசுமை கண்டன.
புல்லென்று
புழுவென்று
எண்ணிக் கொண்டன ;
தின்றதுவோ நச்சிலை ;
கொத்தியதோ கண்குத்தி!
……
பஞ்ச லோகத்தில்
பொன்னும் உண்டு
ஆனால்
யானை பார்த்த குருடராய்
பொன்னே முழுதும்
என்னாதே!
காஷாயம் கயமைக்குக் காப்பும் ஆகும்!
கோயிற் சிலைகள் விலைக்கும் போகும்!
ஒருகுணச் சிறப்பால்
பெருமை பெறுவது,
தனிமரத் தோப்பு!
குதிரைச் சேணத்தை
எடுத்தெறி!
…..
கடலைக் கணிக்கத்
துளிபோதும்
விஞ்ஞானிக்கும்
வேதாந்திக்கும்.
உனக்கும் எனக்கும்
உருமுழுதறிய,
முன் முடிந்ததும்
பின் பிறப்பதும்
சேர்ந்த நேரம் தேர்ந்தறியும் சக்தி
இல்லை !
ஒரு மயிர்
சிறு நகம்
கலைஞர்க்கு!
உனக்கும் எனக்கும்
உருமுழுதறிய
உருமுழுமையையும்
கண்டு கண்டு, கண்டு கண்டு;
கருத்தில் உறுத்த
உருப் போட்டால்
தான்!
உண்மை உணர்வு !

One Comment on “மதிப்பு-1/ தி சோ வேணுகோபாலன்”
Comments are closed.