கறுப்புச் சக்தி – சுஜாதா

தூர்தர்ஷன் பதின்மூன்று தமிழ்ச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரபல டைரக்டர்களிடம் கொடுத்து குறும்படங்களாகப் பண்ணிக்கொடுக்கும்படி சொல்லியிருக்கிறது. டைரக்டர் வஸந்த், சா. கந்தசாமியின் சிறுகதையையும், சுஹாசினி, கி. ராஜநாராயணன் கதையையும் செய்துமுடித்திருக்கிறார்கள்.

பாலுமகேந்திரா என் ‘நகரம்’ கதையை எடுத்துக்கொடுக்கச் சம்மதித்திருக்கிறார். டெல்லியிலிருந்து நிதி வரக் காத்திருக்கிறார்.

வஸந்த் தன் குறும்படத்தை நண்பர்களுக்குப் போட்டுக் காட்டினார். நல்லகூட்டம். டாக் (Tag) சென்டர் அரங்கம் நிரம்பியிருந்தது. கந்தசாமியைப் பற்றிய ஓர் அறிமுகத்துடன் ‘தக்கையின் மீது நான்குகண்கள்’ தொடங்கியது. படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கும் சிறுகதையைப் பார்க்கவும்

சுவாரஸ்யமாகச் செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை வஸந்த்தின் முயற்சி நிரூபித்தது. சப்-டைட்டில் போட்டு நாடெங்கும் காட்டும் தூர்தர்ஷனின் இந்தத் திட்டம் பாராட்டுக்குரியதே!

===================

சிங்கப்பூர் வானொலியின் ஒலி எஃப்.எம். நிலையத்திலிருந்து போன் செய்து, சென்ற ஆண்டின் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எது என்பதை அரை நிமிஷத்தில் சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். இயல்பாக இவ்வகை திடீர் பேட்டிகளுக்கெல்லாம் நான் சம்மதிப்பதில்லை. ஆனால், அறிவியல் என்பதாலும், சிங்கப்பூர் வானொலியின் இந்தச்செயலைப் பாராட்ட வேண்டும் என்பதாலும் அரைமணி கழித்து போன் செய்யச் சொன்னேன். அதற்குள் தயார் செய்து கொண்டு நான் நிகழ்த்திய ஒரு நிமிட உரை இது…‘‘சென்ற ஆண்டின் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு என்று பலவிஷயங்களைச் சொல்லலாம். மரபணுவுக்கும் மனநோய்க்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

Global warming பற்றிப் புதிய செய்திகள் சேகரித்திருக்கிறார்கள். எம்ப்ரியானிக் ஸ்டெம்ஸெல்ஸைப் (Embryonic Stem cells) பிரிப்பது, வெளிச்சத்தைப் புதிய வழியில் வளைக்க வல்ல பொருள்கள், நம்முடைய ‘ஒய்’ க்ரோமோசோமில் (‘Y’ Chromosome) டூப்ளிகேட் ஜீன்கள் (Genes) இருப்பது, கான்சருக்குப் புதிய மருந்து வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருப்பது… இதையெல்லாம் விட Dark Energy என்கிற கரியசக்தி பிரபஞ்ச விண்வெளியில் காலக்ஸிகளும் நட்சத்திரங்களும் ஈர்ப்பு விசையையும் மீறி Big Bang-க்குப்பின் விரிவடைவதன் காரணத்தை அறிந்ததுதான் இவ்வாண்டின் மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு!’’‘பிக்பாங்’ என்ற கருத்து ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்தில் (Theory of Relativity) இருந்து கிளைத்தெழுந்தது.

வெகு தூரத்து நட்சத்திரங்களிலிருந்து வரும் வெளிச்சத்தின் நிறமாலை சிவப்பு நோக்கி சற்று நகர்ந்திருப்பதை ரெட்ஷிப்ட் (Red Shift) என்பார்கள். அதிலிருந்து மறைமுகமாகப் பிரபஞ்சத்தில் எல்லா நட்சத்திரங்களும் கேலக்ஸிகளும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன என்று அறிந்தார்கள்.

சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் மிகச் சிறிதாக, மிக அடர்த்தியாக இருந்த பிரபஞ்சம் வெடித்துச் சிதறியது. அப்போதுதான் காலமும் தூரமும் பிறந்தது. (அதற்கு முன் பிரபஞ்சமே இல்லாதிருந்தது என்பதை உங்களுக்குப் புரியவைப்பது கஷ்டம்).

இன்னும் சிதறல் முடியவில்லை என்பதுதான் தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட சித்தாந்தம். இதன் அடையாளமாக பிரபஞ்சவெளியில் எங்கே நோக்கினும் பரவியிருக்கும் சீரான, லேசான உஷ்ணத்தை 1965-ல் ஆர்னோபென்ஸியாஸ் ராபர்ட்வில்ஸ்டன் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார்கள்.

இந்தக் கருத்து நிலைத்தது. சாதாரணமாக மேட்டர் (Matter) என்னும் பருப்பொருள் ஒன்றையன்று ஈர்க்கவேண்டும். அப்படி இல்லாமல் பருப்பொருள்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன என்றால் ஈர்ப்புசக்தியை மீறும் மறைமுகசக்தி பிரபஞ்சவெளியில் இருக்கவேண்டும்.

இதைத்தான் டார்க் எனர்ஜி (Dark Energy) என்கிறார்கள். பிரபஞ்சம் யாரோ ஊதும் மகா பலூன். இன்னமும் ஊதல் நிற்கவில்லை. பலூனை ஊதுவது இந்த டார்க் எனர்ஜி.