செருப்பு/வே.கல்யாணகுமார்

அந்த அகிம்சைக் கிழவனின்.. ஒரு ஜொதை செருப்புகள்.. பிராத்தனைக் கூடத்து வாசலிலே.. அப்படியே இருக்கிறது..

கொள்கை என்னவோ நீர்த்துப் போகையிலும் கிழவன் அணிந்த செருப்பு மட்டுமே தேய்ந்த நிலையிலும்.. வாசலில் இருக்கிறது!

இது பரதாழ்வார் தலை சுமந்த பாசச் செருப்பல்ல.. பாமரரின் உப்புநீர் துடைக்க.. வேதராணியத்து கடற்கரையில் நடந்த செருப்பு.!

! போர்ப்பந்தரிலே செய்தும் போர் வேண்டாம் என்று வார் அறுந்த செருப்பு.!

ஏர் உழவனைப் பார்த்து எளிமையிலே ஈர்க்கப் பட்டு ஒற்றையாடை அணிந்து உலா வந்த செருப்பு.!

கும்பிட்டப்படி சுட்டவனை மன்னித்த ஏமாளிக் கிழவனின் ஏகாந்த செருப்பு!

இன்னும் அப்படியே எவரும் சீண்டாமல் கிடக்கிறது அந்த பொக்கைவாய்க் கிழவனின் ஒரு ஜொதை செருப்பு.!