இலக்கிய இன்பம் 29/கோவை எழிலன்

கோவை எழிலன்

தோலுரித்த கறுப்பினான்

சிவபெருமான் சிவந்த பொன்னார் மேனியன் என்பதே நாம் அறிந்தது. கச்சிக் கலம்பகத்தின் இப்பாடலில் சிவபெருமானை கருப்பு, வெண்மை, சிவப்பு மற்றும் பச்சை என பல வண்ணங்களுடன் இணைத்துப் பாடுகின்றார் புலவர். அத்துடன் ஆனை என்ற சொல் பல முறை வரும்படி இப்பாடல் அமைந்துள்ளது.

கருத்த யானையைக் கொன்ற கறுப்பன்(கோபம் கொண்டவன்). நீறு பூசிய வெண்மையான். காளை மேலேறும் சிவந்த மேனிகொண்டோன். ஒரு பாகத்தில் பச்சை நிறமுடைய உமாதேவியைக் கொண்டோன். தலையில் நீர் கொண்டோன். நெற்றியில் நெருப்பைக் கொண்டோன். தனக்கென பொருப்பைக்(இமய மலை) கொண்டோன். ஆயிரம் பேர் கொண்டோன். கச்சி நகர் வாழ் பெரியானான அவன் பெருமையைப் பாடுவோம் என்கிறது இப்பாடல்.

“காரானைத் தோலுரித்த
கறுப்பி னானைக்
களித்துடல நீறணிந்த
வெண்மை யானை

வாரானை யூர்ந்திலங்கு
செம்மை யானை
வலத்தானை இடப்பாகப்
பச்சை யானை

நீரானைச் செஞ்சடையின்
நெற்றி யுற்ற
நெருப்பானைப் பொருப்பானைச்
சகத்தி ரச்சீர்ப்

பேரானைப் பெரியானைக்
கம்பத் தானைப்
பெம்மானை எம்மானைப்
பேசு மாறே.”